
தற்சமயம் விமான பயணம் என்பது சாமானியனுக்கும் சாத்தியம் என்ற அளவில் தான் இந்தியா இருக்கிறது.
இதற்கு காரணம் நேரம் மிச்சம் மற்றும் விமான பயணத்தின் மீது உள்ள ஈர்ப்பு. இதை விமான நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போட்டி போட்டு சில சமயம் சலுகை சில சமயம் கட்டண உயர்வு என்று ஏதாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
விமானப்பயணம் அத்தியாவசிய தேவை என்பதற்கு இந்தியாவில் அதிகரித்து வரும் விமான நிலையங்கள் விமான நிறுவனங்களே சாட்சி.
அப்படிப்பட்ட ஒரு விமான சேவையை செய்து வரும் இண்டிகோ நிறுவனம் தான் இப்போது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது.
விமான சேவை முடக்கப்பட்டால் எப்படி எல்லாம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு வலைதளங்களில் வைரலாகும் காணொளிகளே சாட்சி .
ஒரு தந்தை தன் மகளுக்கு சானிட்டரி நாப்கின் தந்து உதவுங்கள் என்று கெஞ்சும் அவலம் திருமண வரவேற்புக்கு போக முடியாததால் காணொளி மூலம் திருமண வரவேற்புக்கு வந்தவர்களை வரவேற்கும் புதுமண தம்பதிகள் இப்படி நிறைய நிறைய அனுபவங்களை சில நாட்களாக இண்டிகோ சேவை மக்களுக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கிறது.

உண்மையில் என்னதான் பிரச்சனை? விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான போக்குவரத்து இயக்குனரகம் விமானி மற்றும் பிற விமான ஊழியர்களுக்கு புதிய பணிக்கட்டுப்பாட்டு விதிகளை ஜூலையில் அறிமுகப்படுத்தியது.
இது முழு அளவில் நவம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. போதிய அவகாசம் இருந்தும் இந்த விதிகளுக்கு இணங்க இண்டிகோ நிறுவனம் தயாராக இல்லை
.இதன் விளைவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தினமும் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு இண்டிகோ நிறுவனம் தள்ளப்பட்டது.
கடந்த இரண்டு நாளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணியர் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியது இண்டிகோ நிறுவனம்.
.இது பற்றி ராகுல் காந்தி 'மொனோ போலி' எனப்படும் ஒற்றை நிறுவனத்தின் வளர்ச்சியை விமான போக்குவரத்து துறையில் மத்திய அரசு பெரிய அளவில் அனுமதித்ததே காரணம் எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கு விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ' இது அரசியல் விவாதம் அல்ல ;பொதுப் பிரச்சனை விமான போக்குவரத்து துறையை போட்டி நிறைந்ததாக மாற்றவே அரசு ஊக்கிவிக்கிறது. அரசை விமர்சிக்கும் முன் முழு தகவலை அறிந்து ராகுல் பேச வேண்டும் என்று பதில் சொல்லி இருந்தார்.
புதிய கட்டுப்பாடு விதிகளை இண்டிகோ நிறுவனம் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு மத்திய அரசால் உரிய பதில் சொல்ல முடியவில்லை.

இந்த பிரச்சனை பற்றி இண்டிகோ நிறுவன விமானி ஒருவர் பெயர் குறிப்பிடாமல் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அவர் அந்த கடிதத்தில் 'இண்டிகோவின் வீழ்ச்சி ஒரே நாளில் நிகழவில்லை. இது பல ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்தது. தற்போது எரிகிறது. நாங்கள் இந்தப் பிரச்சனையை நிறுவனத்தின்
தலைமை நிர்வாகிகளுக்கு பலமுறை சுட்டிக்காட்டினோம். ஏன் எச்சரிக்கை கூட செய்தோம். அதற்கு பதில் விதிகள் கடுமையாகின. ஓய்வு குறைந்தது, ஊழியர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்
. நிர்வாகம் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. விமான உதவி பணியாளர்கள் முதல் விமானி வரை இண்டிகோ நிறுவனத்தில் கடும் பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
விமான நிறுவனம் ஊழியரின் பாதுகாப்பு மற்றும் நலனை கண்டு கொள்ளவில்லை. அதற்கு பதில் நீங்கள் வேலையில் இருப்பதே பெரிய விஷயம் என்பது போல் அவர்கள் பதில் இருந்தது.
.இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து இப்போது இண்டிகோ சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கிறது' என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் .
ரத்தான மற்றும் பல மணி நேரம் தாமதமான விமானங்களுக்கு பயண கட்டணத்தை திரும்ப வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இதுவரை 610 கோடி ரூபாய் பயணியர் வங்கிக் கணக்கில் செலுத்தி இருப்பதாகவும்,.
3000 உடமைகளை அவரவரிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
உடைமைகள் ஒப்படைப்பதில் தங்களை மிகவும் அலைக்கழித்து மனச் உளைச்சலை ஏற்படுத்தியதாக இண்டிகோ நிறுவனம் மீது பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

நிலைமை மோசமானதை தொடர்ந்து பாதுகாப்பு விதிகளில் இருந்து இண்டிகோ நிறுவனத்திற்கு அடுத்தாண்டு பிப்ரவரி 10 வரை விமான போக்குவரத்து அமைச்சகம் தளர்வு வழங்கி இருக்கிறது.
.இருப்பினும் விமான சேவைகளை முன்னறிவிப்பின்றி திடீரென அதிக அளவில் ரத்து செய்ததற்கு இண்டிகோ நிறுவனம் விளக்கம் தர வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இது தவிர விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டு அந்தக் குழு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
விமானிகளுக்கான மணி நேர வரம்பு என்பதே FDTL என அழைக்கப்படுகிறது. இந்த விதிகளின்படி விமான பாதுகாப்புக்காக, ஒரு விமானி 28 நாட்களில் 100 மணி நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.
விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தனது வருகையை குறிப்பிடும் நேரத்தில் இருந்து அவர் பணி தொடங்கியதாக கருதப்படும். நவம்பர் முதல் தேதி முதல் விமானிகளுக்கான பணி நேர விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
இண்டிகோ நிறுவனம் தவிர மற்ற விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட இந்த விதிகளை முழுமையாக அமல்படுத்தியது.
இண்டிகோவை பொறுத்தவரை உள்நாட்டு விமான போக்குவரத்து துறையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கு அரசியல் செல்வாக்கும் ஒரு காரணம். எனவே விதிகளை அமுல்படுத்துவதில் அது அலட்சியமாக இருந்ததன் விளைவு தான் இந்தக் குளறுபடிகளுக்கு முக்கிய காரணம்.
விமான சேவையை பொறுத்த வரை இந்தியாவின் இண்டிகோவின் பங்களிப்பு 65 சதவீதம். அந்த நிறுவனம் சிக்கலை சந்தித்தது தான் பெரிய அளவு விமானச்சேவை பாதித்ததற்கு முக்கிய காரணம்.
இதற்கு அரசாங்கத்தின் கொள்கையும் ஒரு காரணம்.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் பொறுப்பு என்று சொல்ல முடியாது.
இந்த விதிகளை எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று முதலில் அறிமுகப்படுத்தியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் என்கிறார்கள்.
இண்டிகோ நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் விமான சேவையில் முன்னணியில் இருந்த ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர், கோஏர் போன்ற நிறுவனங்கள் இருந்தன. காலப்போக்கில் இந்த நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டன.
இந்த நேரத்தில் தான் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை விரிவடைய செய்தது 2013-இல் 32 சதவீதமாக இருந்த இண்டிகோவின் சந்தை பங்கு இப்போது 65 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
விமானத்தில் போனால் சீக்கிரம் போகலாம் நமது பயணம் சொகுசாக இருக்கும் என்ற நம்பிக்கையை இப்போது கிட்டத்தட்ட இண்டிகோ நிறுவனம் பொய்யாக்கி விட்டது
இண்டிகோவின் நிர்வாகச் சீர்கேடுக்கு இண்டிகோ பற்றி பயணிகளின் புகார் நிறைய வந்துள்ளதிலிருந்து எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிகிறது.
இன்று வரை பல பயணிகள் தங்கள் உடைமைகள் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். என் பிளைட் கேன்சல் ஆகிவிட்டது
என் லக்கேஜ் இன்னும் கிடைக்கவில்லை. நான் ஊர் வந்து சேர்ந்து விட்டேன் .என் லக்கேஜ் இன்னும் வரலை இப்படி எக்ஸ் வலைதளத்தில் பயணிகள் இண்டிகோ நிறுவனத்தை வறுத்து எடுக்கிறார்கள்.

இந்திய ரயில்வே விமான ரத்தால் தவிக்கும் பயணிகளுக்கு ரயில் சேவையை அதிகரித்தது.
.பல விமான நிலையங்களில் ரயில்வே உதவி மையம் அமைத்து உங்களுக்காக உதவ நாங்கள் இருக்கிறோம் விமான நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்ல வசதி ரயில் சேவை என்று அவர்கள் மனித நேயம் உண்மையில் பாராட்டுக்குரியது.
இண்டிகோ அவர்களிடமிருந்து இதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில்,
என்.ஈ.பி.சி,
பாரமெளண்ட்
கிங் ஃபிஷர்
ஏர் டெக்கான்
ஜெட் ஏர்வேஸ்
இது போன்ற கொடி கட்டி பறந்த விமான நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு என்ன காரணம்.
விமான கம்பெனிகளின் மீதான வரி தான் இவைகள் இழுத்து மூடுவதற்கு காரணம் என்று ஒரு வலைதள பதிவு சொல்கிறது.
அவர்களது ஏவியேஷன் பெட்ரோலின் மீதான வரி, விமான நிலய கட்டணங்கள், நிறுவன வரி இதெல்லாம் தான் கிடுக்கிப் பிடி போட்டு, கட்டண வரையறைகளும் சேர்ந்து தான் இந்த நிறுவனங்களை கொன்று விட்டது என்றும் சொல்கிறார்கள்.
இது பற்றிய நிபுணர்களின் கருத்தும் தீவிர ஆய்வும் தேவை.
ஒரு வேளை விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் ஒவ்வொரு கம்பெனியாக மூட வேண்டியது தான் வேதனையான முடிவாக இருக்கும்.
அரசும் தலையிட்டு சரி செய்ய வேண்டிய விஷயம் இது.

Leave a comment
Upload