
காதலனுடன் செல்ல துணிந்து விட்டாள் அம்மங்கை.
பெற்றோரும், உற்றாரும் அவர்களின் திருமணத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்று தெரிந்த போது, அவனுடன் சென்று வாழ்வதே சரி என்று அவள் உள்ளத்துக்குத் தோன்றியது.
காதலனைத் தன் ஊருக்கு வரவழைத்தாள்.
அவனது கைகளைப் பற்றிக் கொண்டு யாரும் பார்க்காத நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.
தன்னை நம்பி வந்த பெண்ணை மிகுந்த அன்புடன் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் அக்காதலன்.
அவன் மனதில் பலவித எண்ணவோட்டங்கள் எழுகின்றன.
“நாம் செல்லும் இக்காட்டுப் பாதை பாதுகாப்பானதா? கொடிய மிருகங்கள் இப்பாதையில் குறுக்கிடுமா? வழிப்பறி செய்யும் கள்வர்கள் வழி மறிப்பார்களா” என்றெல்லாம் நினைக்கிறான்.
அப்படி ஏதும் நேர்ந்தால் தன் உயிரைத் தந்து அவளைக் காக்க வேண்டும் என்று உறுதி செய்துக் கொள்கிறான் அவன்.
மற்றொரு புறம் “இயக்கப்படும் பொம்மை போல, நம்முடன் இவள் வந்து விட்டாள். இவளை இவள் பெற்றோரும், உறவினர்களும் தேடுவார்களே. அவளைத் தேடி இங்கு வந்து விடுவார்களோ. அப்படி வந்து விட்டால் என்ன செய்வது?” என்று கவலை கொள்கிறான்.
நீண்ட தொலைவு நடந்து விட்டார்கள்..
அவர்கள் நடந்துச் சென்ற காட்டுப்பாதையில் காதலி சோர்வுற்றாள். நடந்து, நடந்து மிகவும் களைப்புற்றாள்.
அதைக் கண்ட காதலன் அவளிடம் “சற்று நேரம் இளைப்பாறு, பின்னர் நம் பயணத்தைத் தொடரலாம்” என்று அவளை அமரச் செய்கிறான். “இதோ இங்கு ஊர்ந்திடும் சிவப்பு வண்ண பூச்சிகளுடன் விளையாடு. நான் அந்த வேங்கை மரத்தின் பின்னே இருக்கிறேன்” என்று சொல்லிச் செல்கிறான்.
போக்குவரத்து வசதிகள் இல்லாத .அக்காலத்தில் நடந்தே தான் நிலங்களைக் கடக்க வேண்டும். எனவே அவ்வப்போது அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு ஓய்வெடுக்கும் ஒரு காட்சியைத்தான் இன்று நாம் படிக்கும் நற்றிணைப் பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது.
‘அக்காதலன் கூறுகிறான் :
“ மாந்துளிரின் நிறம் கொண்ட நங்கையே, இயக்கப்படும் பொம்மையைப் போல, நீ உன் தந்தையின் வீட்டைத் துறந்து என்னுடன் வந்து விட்டாய்.
நீ வருந்த வேண்டாம், குளிர் மேகம் முதல்மழை பொழிவதால், இக்காடெங்கும் சிவப்பு வண்ண தம்பலப்பூச்சிகள் ஊர்கின்றன. நீ அந்தப் பூச்சிகளைப் பார்த்தும், கையில் பிடித்தும் விளையாடிக் கொண்டிரு.
நான் இளம் யானைகள் உரசிச் செல்லும் அந்த பருத்த வேங்கை மரத்தின் பின்னால் சற்று நேரம் அமர்ந்து இருகிறேன்.
அந்த சமயத்தில் வழிப்பறி செய்பவர் யாரேனும் வந்து விட்டால், நான் அவர்களுடன் போரிட்டு உன்னைக் காப்பேன்.
உன்னைத்தேடி உன் உறவினர் யாரேனும் வந்து விட்டால், அம்மரத்தின் பின்பு மறைந்துக் கொள்வேன். அவர்களுடன் போர் செய்து உன்னை வருத்தமுற செய்ய மாட்டேன்.” என்றான்.
வீரமும், விவேகமும் கொண்டஓர் ஆண்மகனின் அழகான மன நிலையை கீழ்வரும் பாடல் சொல்கிறது.
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும்,
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென் மாஅயோளே!(நற்றிணை 362)
இங்கு குறிப்பிடப்படும் ‘மூதாய்’ என்று சொல்லப்படும் தம்பலப்பூச்சி red velvet mite என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பூச்சியாகும்.
தன்னிச்சையாக சிந்தித்து உடன்போக்கை மேற்கொண்ட பெண்ணை காதலால் இயக்கப்படும் ‘பாவை’ என்று வர்ணித்திருப்பது நயம்.
இப்பாடலை எழுதியவர் ‘மதுரை மருதன் இளநாகனார்’ என்னும் புலவர் ஆவார்.
பாலை திணைக்குரிய பாடல் இது. மேலும் ஒர் அழகான பாடலுடன் சந்திப்போம்.
தொடரும்

Leave a comment
Upload