
பசங்க டாக்கீஸ் தொடர் -9
திரைப்படம் :- பியாலி ( Piyali)
மொழி:- மலையாளம்
வருடம் :- 2022
புலம்பெயர் தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்தில் இறந்து விடும் பொழுது அவர்களது குழந்தைகள் நிராதரவாக வாழும் சூழல் ஏற்படும். அப்படி நிராதரவான சூழலில் வாழும் காஷ்மீர் வம்சாவளியை சேர்ந்த இரு குழந்தைகள் 14 வயதான ஜியா மற்றும் 5 வயதான அவனது தங்கை பியாலி . அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு கதை தான் இந்தத் திரைப்படம்.
கேரளாவில் கட்டிடத் தொழிலாளர்களாகப் பணியாற்றிய அவர்களது தாயும் , தந்தையும் ஒரு லிப்ட் விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் இறக்கும்பொழுது பியாலியின் வயது வெறும் ஐந்து மாதம் மட்டுமே. ஒன்பது வயது நிரம்பிய அண்ணன் ஜியாவுக்கு , 5 மாதம் மட்டும் ஆன தன் தங்கையைப் பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அன்றாட வாழ்க்கையே சிரமமாக இருக்கும் சூழலில் கூட , தன் தங்கையை ஒரு இளவரசியைப் போல உணர வைக்கிறான் அந்தச் சகோதரன். அவர்களுக்கு அன்றாடம் ஏற்படும் சிக்கல்களும், அதை எவ்வாறு சகோதரன் ஜியா எதிர்கொள்கிறான் என்பதையும் தான் இந்தக் கதை பேசுகிறது. இது உணர்வு ரீதியான நெகிழ்ச்சியான திரைப்படம்.
இந்தப் படம் மிக கலை உணர்வோடு உருவாக்கப்பட்டது என்பதை முதல் காட்சியிலேயே உணர முடியும். மிக அழகான தேவதை போன்ற ஒரு சிறிய குழந்தை உறக்கத்திலிருந்து கண்விழிக்கிறது. சுற்றிலும் கொசுவலை சூழ்ந்த ஒரு அழகிய படுக்கையில் இருந்து அந்தக் குழந்தை பியாலி கண் விழிக்கிறாள்.
அவள் வசிக்கும் வீடு ஒரு எளிமையான குடிசைகள் நிறைந்த ஒரு பகுதியில் தான் இருக்கிறது. ஆனால் அந்த அறைக்குள்ளோ அவள் விளையாட ஏராளமான பொம்மைகள் இருக்கின்றன. நன்கு உற்றுப் பார்த்தால் அத்தனை பொம்மைகளும் வேண்டாத கழிவுகளில் இருந்தும் குப்பைகளிலிருந்து மிக நேர்த்தியாகவும் மிக அழகாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை அத்தனையும் பியாலியின் அண்ணன் கை வண்ணத்தில் உருவானவை.
தங்கை உறங்கி எழுந்ததும் அண்ணனை அழைக்கிறாள். அண்ணன் தாவி வந்து தங்கையை அணைத்துக் கொண்டு முத்தமழை பொழிகிறான். தங்கையைக் குளிப்பதற்காக அவன் வெளியே அழைத்துச் செல்கிறான்.
தூக்கி எறியப்பட்ட ஒரு நெகிழி ட்ரம்மில் இருந்து ஒரு அழகான செருப்புகள் வைக்கும் அலமாரியை உருவாக்கி இருந்தான். அதற்குள் வசதி படைத்தவர்கள் அணிவதைப் போன்ற கண்ணாடிகளும் வேலைப்பாடுகளும் நிறைந்த காலணிகளைத் தங்கைக்காக அவனே உருவாக்கி வைத்திருக்கிறான்.
வெளியே வந்து பார்த்தால் அந்தக் குழந்தைக்காக அதே போல ஒரு தேவையற்ற பொருளிலிருந்து குளிப்பதற்காக பாத்டஃப் ஒன்றை உருவாக்கி இருந்தான். அதில் வெதுவெதுப்பான நீரை நிரப்பித் தங்கையை அதனுள் குளிக்க இறக்கி விடுகிறான். தங்கையின் கை, கால்களில் உள்ள அழுக்கை கூட ஒரு பிரஷை கொண்டு சுத்தம் செய்கிறான். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்தாலும் கூட அதை அவன் பொருட்படுத்தவே இல்லை.
அப்போது அவன் தங்கை அவனிடம், " நேற்று நம் பகுதிக்கு வந்திருந்த ஒரு பெண், நம்மையெல்லாம் பிச்சைக்காரர்கள் என்று சொன்னாள். நாம் பிச்சைக்காரர்களா ஜியா?" என்று கேட்கிறாள்.
" எந்த வேலையும் செய்யாமல் மற்றவர்களிடம் பணமோ பொருளோ பெறுபவர்கள் தான் பிச்சைக்காரர்கள். நான் உழைக்கிறேன்; உனக்கு தேவையானவற்றை நான் வாங்கித் தருகிறேன். நாம் பிச்சைக்காரர்கள் அல்ல. " என்று தன் தங்கையிடம் பெருமிதத்தோடு கூறுகிறான்.
வேலைக்கு கிளம்பும் முன் காலை உணவைத் தயார் செய்துத் தங்கையைச் சாப்பிட வைக்கிறான். மதியத்திற்குத் தேவையானதைச் சமைத்து , சுத்தமான குடிநீரை ஒரு பாட்டிலில் வைத்து இதை மதியம் மறக்காமல் சாப்பிட வேண்டும் என்று தங்கையிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான். அங்கே வசிக்கும் ஒரு வயதான பாட்டியின் பொறுப்பில் தங்கையை விட்டு செல்கிறான்.
அத்தனை எளிமையான சூழலிலும் கூடத் தன் தங்கையை ஒரு இளவரசியைப் போலப் பார்த்துக் கொள்கிறான் அவன். முதல் காட்சியே அவன் தங்கை மீது வைத்திருக்கிற அதீதப் பிணைப்பை மிக அற்புதமாகக் காட்டுகிறது.
இவர்களைப் போன்ற ஆதரவற்ற ஜாகீர் என்ற சிறுவன் இவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறான். ஜியாவும், ஜாகீரும் ஒன்றாகத்தான் வேலை பார்க்கிறார்கள். ஜாகிருக்கும் பியாலியின் மிக அன்பு உண்டு.
தங்களுடையப் பொருட்களை இதைப் போன்ற ஆதரவற்ற சிறுவர்களிடம் தந்து போக்குவரத்துச் சிக்னல்களில் விற்பனை செய்ய சொல்லும் ஒரு தாதாவிடம் இவர்கள் இருவரும் வேலை செய்து வந்தார்கள்.
அந்த தாதா இவனுடைய தங்கையை வேலைக்கு அழைத்து வருமாறு சொல்கிறார். ஜியா மறுக்கிறான். என்னிடம் வேலை செய்பவர்களுக்கு தான் இந்தப் பகுதியில் வசிக்க இடம் தருவேன். எந்த வேலையும் செய்யாமல் உன் தங்கை இங்கே இருக்க முடியாது இல்லையென்றால் நீ அவளுக்கான வாடகையை எனக்குத் தர வேண்டும் என்று இரக்கமே இன்றி நிபந்தனை விதிக்கிறான்.
ஆனாலும் கூட தன் தங்கைக்காக மாத வாடகை கொடுத்து விடுவதற்கு ஜியா சம்மதிக்கிறான்.
அந்தப் பகுதியில் இருக்கும் தையலகத்தில் கிடைக்கும் உபயோகமற்ற துணிகளைக் கொண்டு தன் தங்கைக்கு விதவிதமான உடைகளை இவனே உருவாக்கித் தருகிறான். அவனைச் சுற்றி கிடைக்கும் ஒவ்வொரு குப்பையில் இருந்தும் மிக அழகழகானப் பொருட்களை உருவாக்குவதில் அவன் கை தேர்ந்தவனாக இருந்தான். அப்படி அவன் அவன் தங்கையைப் போல மிக அழகான ஒரு பொம்மையைக் கழிவுப் பொருட்களைக் கொண்டு உருவாக்கினான்.
ஒருமுறை அவன் சிக்னலில் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் பொழுது, இந்த அழகிய பொம்மை ஒரு வாகனத்தில் இருக்கும் நபரை கவர்கிறது. 100 ரூபாய் கொடுத்து அந்தப் பொம்மையை வாங்கி கொள்கிறார்.
ஆனால் அந்தப் பணத்தையும் அடியாட்கள் பறிக்கும்பொழுது ஜாகீர் இவனுக்காக குரல் கொடுக்கிறான். அப்போது ஒரு அடியாளை ஜாகீர் பயங்கரமாகத் தாக்கி விடுகிறான். அங்கிருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்து ஜாகிர் வேறு இடம் சென்று விடுகிறான். ஜாகிரின் நண்பன் என்பதால் ஜியாவும் அவனது தங்கையும் அந்த இடத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
தங்குவதற்கு போக்கிடம் இன்றி கால் போன போக்கில் இருவரும் நடக்கிறார்கள். ஒரு உணவு விடுதியில் தன் தங்கைக்கு உணவை வாங்கித் தெருவோரத்தில் அமர்ந்து அவளுக்கு சாப்பிட கொடுத்துக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் நல அமைப்பினரின் கண்களில் படுகிறார்கள். அவர்கள் இருவரையும் குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு தேவையான உணவு, தங்குமிடம் , படிப்பு அனைத்தும் கிடைக்கும் என்றாலும் கூட தன் தங்கை, பெண்கள் தங்கும் விடுதியில் தான் தங்க வேண்டும் என்பதை அறிகிறான். அவனால் ஒருபோதும் தங்கையைப் பிரிந்து இருக்க முடியாது என்பதால் அவர்களிடமிருந்தும் தப்பித்து ஓடுகிறார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜாகிரைச் சந்திக்கிறான். ஜாகிர் ஒரு ஆங்கிலோ இந்தியரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவரின் மூலமாக ஒரு முஸ்லிம் பெரியவரிடம் இவனுக்கு வேலை கிடைக்கிறது.
தங்கையைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க இடம் தேடுகிறார்கள். இடம் கிடைக்கும் வரை சில நாட்கள் செல்வா என்ற நபரின் அறையில் தங்கிக் கொள்ள ஜாகிரின் நண்பன் ஏற்பாடு செய்கிறான். ஆனால் செல்வாவைப் பார்த்தாலே குழந்தை பியாலிக்குப் பயமாக இருக்கிறது.
அதனால் தான் வேலை செய்ய போகும்பொழுது தங்கையை அழைத்துச் சென்று முதலாளிக்கு அருகே அமர வைத்துவிட்டு அவன் வேலை செய்ய சென்று விடுவான். அந்த முதலாளியின் பேத்தி இந்தக் குழந்தையை தங்களுடன் விளையாட அழைத்துச் செல்வாள். அவர்களுக்கு அழகிய இந்தக் கலகலப்பானக் குழந்தையை மிகவும் பிடித்து விடுகிறது.
அங்கும் அவன் தேவையற்ற பொருட்களைக் கொண்டு விதவிதமான அழகியப் பொருட்களை உருவாக்குகிறான். அது அந்த பெரியவருக்கும் ஆங்கிலோ இந்தியருக்கும் பிடித்து போய் விடுகிறது. அவன் உருவாக்கும் பொருட்களை கொச்சின் பகுதிக்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். அந்த வருவாயில் ஒரு பகுதி அவனுக்கும் தரப்படுகிறது.
தன் தங்கைக்கு பிடித்தார் போல சிறகுகள் கொண்ட ஒரு அழகிய வீட்டைக் கழிவு பொருட்களிலிருந்து அற்புதமாக உருவாக்கித் தருகிறான். அவன் தங்கை பியாலியை அங்கு இருக்கும் பள்ளியில் சேர்க்கிறான். மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் ஒரு சிக்கல் வருகிறது.
தன் தங்கைக்கு விமான நிலையத்தை காட்டிக்கொண்டு திரும்பி வரும் பொழுது அவன் ஒரு விபத்தைச் சந்திக்கிறான். அதில் தன் தங்கையைப் பிரிகிறான். விபத்தில் சிக்கிய அவனை குழந்தைகள் நல அமைப்பினர் காப்பாற்றி சிகிச்சை செய்து, விடுதியில் தங்க வைக்கிறார்கள்.
தன் தங்கையை பிரிந்து அங்கே இருக்க முடியாமல் அங்கிருந்து தப்பித்து விடுகிறான். தன் வீடு இருந்த பகுதியில் வந்து பார்த்தால் அந்த வீடும் அங்கே இல்லை ; அவன் தங்கையும் அங்கே இல்லை;
அவன் தங்கையைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையைச் சந்திக்கிறான்.
முன்பொரு முறை சிக்னலில் அவனிடம் பொம்மையை வாங்கிச் சென்ற மனிதர் மிகப்பெரிய கலைஞர். அவர் கொச்சியில் நடைபெறும் பைனாலேவின் முக்கிய நபர். வெகு நாட்களாக அவர் ஜியோவை தேடிக் கொண்டிருந்தார். அவனைப் பற்றி கேள்விப்பட்டு அவன் உருவாக்கிய குடிசையைப் பார்த்து வியந்து போகிறார்.
அவன் திறமை ஒரு வீட்டுக்குள் தங்கி விடக்கூடாது ; சிறகு விரித்து உலகம் முழுவதும் பறக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
பைனாலேவில் அந்த வீட்டை காட்சிப்படுத்துகிறார். மனம் மகிழ்ந்தாலும் கூட தன் தங்கையை காணாமல் சோர்ந்து போய் நிற்கும் அவனை வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு அந்தக் கலைஞர் சொல்கிறார்.
உள்ளே சென்று பார்த்தால் அந்த வீடு முழுவதும் விதவிதமான ஓவியங்கள் மாட்டி விடப்பட்டிருக்கிறது. அத்தனை ஓவியங்களையும் வரைந்தவள் அவனது தங்கை பியாலி. நீல நிற உடையில் ஒரு தேவதையைப் போல தன் தங்கை நிற்பதைப் பார்த்து மகிழ்ந்து ஓடிச் சென்று அணைத்துக் கொள்கிறான்.
அவனது அற்புதமான திறமை அவர்கள் இருவர் வாழ்க்கையிலும் சிறகுகளைக் கொடுத்து உயரப் பறக்க வைக்கப் போகிறது.
இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரங்களான ஜியா மற்றும் பியாலியின் நடிப்பு அனைவரையும் கவரும். . குறிப்பாக, பியாலியாக நடித்த குழந்தை பார்பி ஷர்மாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மெல்லிய தென்றலைப் போன்று நம் உணர்வுகளை தழுவிச் செல்லும் ஒரு சிறப்பான திரைப்படம்.

Leave a comment
Upload