
சிவகாசி அருகே நாராணபுரம் பகுதியை சேர்ந்த தவசிகுமார் என்பவர், அப்பகுதியில் அச்சக தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி, 50 வயதான பாண்டிமாதேவி. இத்தம்பதியின் 2 மகன்களுக்கு திருமணமாகி, தங்களின் மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். முன்னதாக, சிறுவயது முதலே பாண்டிமாதேவிக்கு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வம். இதனால் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வசேத பளு தூக்கும் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற 19 பேரில் ஒருவராக சிவகாசியை சேர்ந்த 50 வயதான பாண்டிமாதேவியும் பங்கேற்றுள்ளார்.
இப்போட்டியில் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டோருக்கான பளு தூக்கும் போட்டியில், சிவகாசியை சேர்ந்த பாண்டிமாதேவி லாவகமாக 310 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் முதலிடம் பிடித்ததில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பின்னர் சிவகாசி திரும்பிய பாண்டிமாதேவிக்கு சக வீரர், வீராங்கனைகள் உள்பட கிராம மக்கள் பிரமாண்டமாக வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து பாண்டிமாதேவி கூறுகையில், ‘‘சிறுவயது முதலே நான் உடலை பேணி பாதுகாப்பதற்கு சீரான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எந்த துறையிலும் சாதனை படைக்க, வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். 37 வயதுக்கு பிறகே, எனக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது 50 வயதில் சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். வருங்காலங்களில் இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கவும் ஆசைப்படுகிறேன்!’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
நம்மூரில் பெண்களுக்கு குடும்ப பாரத்தை விட 310 கி.லோ எளிதாகவே இருக்கக் கூடும்.

Leave a comment
Upload