
தமிழ் இலக்கியம் எனும் பெருங்கடலில் பயணிக்கும் அலங்கார நாவாய்களாக அழகு சேர்த்தன பல இலக்கிய வகைமைகள். ஒவ்வொரு வகைமையிலும் ஒரு புலவர் என்று சிறப்புற்று விளங்கியவர்கள் உண்டு. கீழ்க்கண்ட தனிப்பாடல் வழியே அவர்களின் திறனை அறிந்து கொள்ளலாம்.
வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற்கு உயர் கம்பன் கோவையுலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாய பகர்சந்தம் படிக்காச
லாதொருவர் பகரொணாதே
இன்று புகழேந்திப் புலவரின் நளவெண்பாவிலிருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.
பாண்டி நாட்டைச் சேர்ந்த புகழேந்திப் புலவர் கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் சமகாலத்தவர் என்று அறிய வருகிறது. ‘உவக்க புகழேந்தி’ என்றே படிக்கும்தோறும் உவகையூட்டும் உவமைகளுடனான பாடல்களியற்றும் புலவராக அறியப்படுகிறார்.
மகாபாரதத்தில், ஆரண்ய பருவத்தில் நளோபாக்யானம் என்ற கிளைக்கதை உண்டு.
இது நிடத தேசத்து நளன் கதையைக் கூறுவது. இதைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தன் ஒப்புயர்வற்ற வெண்பாக்களால் புகழேந்தியார் அளித்த காவியமே நளவெண்பா ஆகும்.
நளனிடம் ஒரு அன்னப்பறவை தமயந்தியைப் பற்றி வர்ணிக்கிறது. தமயந்தியிடம் பெண்மை அரசோச்சும் அழகை சொல்லும் இந்தப் பாடலைப் பார்ப்போம் ;-
நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு
தமயந்தியின் பெண்மை ராஜாங்கத்தில், மகளிருக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் யானைப்படை, குதிரைப்படை தேர்ப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளாக உள்ளனவாம்;
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களும் அவள் நல்லாட்சி புரியும் வகையில் வழிகாட்டும் நல்லமைச்சர்களாம்;
தமயந்தியின் பாதங்களில் சப்திக்கும் காற்சிலம்புகளோ அணிமுரசாக ஆர்ப்பரிக்கின்றனவாம்;
வேற்படையாகவும் வாட்படையாகவும் அவளுடைய அழகிய கண்களே ஆயுதங்களாக விளங்குகின்றனவாம்;
நிலவினைப் போன்ற தமயந்தியின் குளிர்ந்த முகமெனும் வெண்கொற்றக் கொடையின் கீழ், பெண்மை என்ற அரசாட்சியையே நடத்திக் கொண்டிருக்கிறாளாம்.
புகழேந்தியார் தான் எவ்வளவு கச்சிதமாக ரசனை மிகச் சொல்லி விட்டார்?!

Leave a comment
Upload