
குரலிசையான் - குரல் இசையான் – தேவா
இடம் :
சங்கீத வித்துவான் குரலிசையான் வீடு.
வித்துவான், தனைக்காண வந்த ரசிகரை வரவேற்றார்.
வித்துவான்: உட்காருங்கோ.
ரசிகர்: உங்க பெயர் வித்யாசமா இருக்கே? உங்க குரல் உங்களுக்கு இசைந்து வராதுன்னு சின்ன வயசிலேயே அப்படி பேர் வச்சுட்டாங்களோ?
வித்துவான்: சேச்சே, நீங்க தப்பா புரிஞ்சிண்டு இருக்கீங்க. குரல் இசையில் மேதையாய் வருவான்னு தீர்க்கதரிசனத்தோட பேர் வச்சிருக்காங்க.
ரசிகர்: இரண்டு விதமா புரிஞ்சுக்கற ஒரு பெயர்! அது கிடக்கட்டும், நேத்து இசை விழா(த) சபாவுல உங்க கச்சேரி ஓஹோன்னு அமைச்சுட்டுதே!!
வித்துவான்: ரொம்ப சந்தோஷம்.நீங்க வந்திருந்தீங்களா? கச்சேரி முழுக்க இருந்தீர்களா?
ரசிகர்: பின்ன பாதியில எழுந்து கிளம்ப முடியற மாதிரியா இருந்துது?
வித்துவான்: ஆஹா...என் பாக்கியம்.
ரசிகர்; உண்மையில்.வெளியில விடாது மழை வலுக்க பெய்ததே?
வித்துவான்: ?...?....?.... அது சரி...ஓஹோன்னு இருந்ததா எப்படி சொல்றீங்க?
ரசிகர்: நிறைய பேர் கை தட்டிண்டே இருந்தார்களே?
வித்துவான்: எந்த பாட்டு உங்களுக்கு பிடித்தது?
ரசிகர்; எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருந்ததால குறிப்பிட்டு சொல்ல முடியல
ஆனா, ஆனந்த பைரவி, லதாங்கி, ஆந்தோளிகா, ரேவதி ன்னு அடுக்கிட்டேளே!
வித்துவான்: ஓ..ராகமெல்லாம் சரியா கண்டு பிடிக்கிறேளே!
ரசிகர்: நீங்க தான், பாடப்போற ராகம், பாட்டு எல்லாத்தையும் முக நூலில் போட்டுட்டேளே! ஆந்தோளிகா அபாரமா இருந்துது..
வித்துவான்: அது மட்டும் எப்படி சொல்றீங்க? ராக ஞானம் இருக்குன்னு தானே அர்த்தம்?
ரசிகர்: பக்கத்து சீட்டுல ஒரு மாமா, தீப்பெட்டி லேபிள் சைசுல ஒரு பேப்பர்ல குறிப்பெடுத்துண்டே ஆந்தோளிகா அபாரம்னு முழுமுணுத்துண்டு இருந்தார்.
ஒண்ணு மட்டும் கண்டு பிடிச்சேன். மூணு கச்சேரியை ஒரே மேடையில ஒரே நேரத்துல ஏற்பாடு பண்ண சபா காரியதரிசியை பாராட்டுறேன்.
வித்துவான்: அப்படீன்னா?
ரசிகர்: நீங்க தனியா பாடறீங்க... வயலின் தனியா வாசிக்கிறார்...மிருதங்கம் அவர் பாட்டுக்கு நிறுத்தாம வாசிச்சிண்டே இருக்கார்...
வித்துவான்: ஐயா, உங்களுக்கு கோடி நமஸ்காரம், கிளம்பறீங்களா..நான் அடுத்த கச்சேரிக்கு டென்சன் ஆகாமல் தயாராகணும்.
ரசிகர்: அவசியம் கிளம்பறேன். அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.
எங்க 'தம்பட்டம்' பத்திரிகையில் மியூசிக் ரிவியூ எழுதறவர் நேற்று லீவு. அதனால புகைப்படக்கலைஞரான என்னை ரிவியூ எழுத அனுப்பினாங்க. உங்களை ஒரு மரியாதை நிமித்தமா பாத்துட்டு போக வந்தேன். நான் நிறைய கச்சேரிகளுக்கு போட்டோவுக்கு போறதால, பெருசா ஒண்ணும் தெரியல்லேன்னாலும்,காதில் தொடர்ந்து சங்கீதம் வந்து விழும். கச்சேரிகளை ஒப்பிட்டு பார்த்து தரவரிசை கூற இயலும்.
வித்துவான்: அடடே, இதை மொதல்லேயே சொல்லப்படாதோ?இசை பற்றி தெரியல்லேன்னா என்ன? இரண்டு காதுகள் கேட்க இருக்கே...அது போதுமே...சித்தே இருங்க...காபி தரச்சொல்லறேன்.. குடிச்சுட்டு கிளம்புங்க.எழுத்தில் ஜமாய்ச்சிடுங்க.
ரசிகர், காபியை குடிச்சிட்டு, எழுத்தில் மட்டும் தான் ஜமாயக்கமுடியும் என்று வித்வானுக்கே தெரிஞ்சிருக்கே என்று முணுமுணுத்துக்கொண்டே கிளம்பினார்.-

Leave a comment
Upload