தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை - செல்லாதே அங்கே, யார் அழைத்தாலும் ! மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20251113070549253.jpeg

ஒரு பேராசிரியர் என்றும் பேராசிரியர் என்பார்கள். அவன் பேராசிரியர் தொழிலை விட்டுவிட்டு நிருபரானான். ஒரு நிருபர் என்றுமே நிருபர் என்ற வாசகம் இல்லாவிட்டாலும், 1977இல் பத்திரிகையாளர் ஆனவன், அன்றும் இன்றும் அதே ஜர்னலிஸ்ட்தான் நிருபர், துணையாசிரியர் என்று பதவிப் பெயர்கள் மாறினாலும் கூட.


அசல் நிருபர் பொறுப்பில் இருந்து விலகி அமெரிக்க செய்திமடல் ஆசிரியர் ஆனபோதும் பிற பத்திரிகை ஆசிரியர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியதாயிற்று. எல்லாப் பத்திகையாசிரியர்களும் அவன் நண்பர்கள் ஆனார்கள். ஒன்றரை வருடத்திற்குப் பிறகு, அதாவது 1985இல் தூதரகத்தில் தன்னுடன் பணியாற்றிய மூத்த ஆசிரியர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு ராஜினாமா செய்தான். அந்த நேரத்தில் டைரக்டர் நெரில் நில்லர் அமெரிக்கா போயிருந்தார்.


திரும்பி வந்ததும், அவன் விலகியதைக் கேள்விப்பட்டு வருத்தப்பட்டார். இரண்டு பேருக்குள் மனஸ்தாபம் என்றால், அவனை வேலையில் வைத்திருந்து இன்னொருவரையும் அல்லவா விலகச் செய்திருக்க வேண்டுமென்று டெப்டி டைரக்டரை அவர் கடிந்து கொண்டார். தூதரகத்தில் இருந்து விலகிச் சென்ற அவன் சில பிரபல நிறுவனங்களில் உள்வட்டப் பத்திரிகைகளை (ஹவுஸ் ஜர்னல்) பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வந்தான். அப்போதும் தொழில் எழுத்து தான்.


சுமார் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு டைரக்டர் நெரில் மில்லர் அவனை தூதரகத்தில் பணியில் அமர்த்திவிட்ட பிறகே தான் தாய்நாடு திரும்புவது என்று முடிவு செய்தார். அந்த நேரம் பார்த்து, அரசியல் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது. தான் நேர்காணல் செய்த 11 நபர்களையும் துணைத்தூதர் நிராகரித்துவிட்டார். அப்போது நெரில் மில்லர் பதவி விலகிச்சென்ற அவனையே அழையுங்கள் என்றார். அப்படி இரண்டாவது முறையாக கிடைத்த அழைப்பு தான் அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணி செய்யும் வாய்ப்பு. செய்தித்துறையில் பணியாற்றியதற்கும், வெளியுறவுத்துறையில் பணியாற்றியதற்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர்கள் கேட்டபோது, அவன் சொன்னான், ‘முதல் பதவியில் நான் அமெரிக்காவின் அவுட் ட்ரே, அதாவது அமெரிக்க விஷயங்களை வெளியே எடுத்துச் சொல்வது. இரண்டாவது பொறுப்பில் அவன் இன் ட்ரே, அதாவது இந்திய விஷயங்களை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வது. இதிலும் அவனுக்கு பல பத்திரிகை ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பு இருந்தது.


அரசியல் ஆலோசகர் என்ற முறையில் அவனும் அரசியல் செய்திகளைத் திரட்ட பொதுக்கூட்டங்களுக்குச் சென்றான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாதபடி. அதனால் அவன் மறுநாள் பத்திரிகைகளில் வெளிவரக்கூடிய செய்திகளை முன்னதாகவே அறிந்துகொள்ள முடிந்தது. கூடுதல் தகவல்களையும் பெற முடிந்தது. அது தூதரகத்திற்காக அவன் ரிப்போர்ட்கள் எழுதுவதற்கு உதவியாக இருந்தது. அவனது ஆங்கிலத்தை அமெரிக்கர்கள் ரசித்தார்கள்.


ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, திமுகவிலிருந்து இரண்டு பேர்கள் தான் தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். ஒரே வாக்கியத்தில் அதை ஆங்கிலத்தில் எழுதினான். துணைத்தூதர் சொன்னார், ‘இந்த ஒரு வாக்கியத்திற்கு பிறகு வேறு ஏதேனும் எழுத வேண்டுமா? கட்டுரை முடிந்துவிட்டதே’ என்றார். அவ்வப்போது அவன் சில அரசியல்வாதிகளை அவர்களின் வீடுகளில் சந்தித்திருக்கிறான். அவர்களும் அவன் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வருவது உண்டு. அனேகமாக அரசியல் கட்சித் தலைவர்களும், எல்லா பத்திரிகையாசிரியர்களும் நன்றாக பழக்கமானவர்களே. அதனால் அவனுக்குத் தன் அரசியல் ஆலோசகர் பதவிப் பொறுப்பை திருப்திகரமாக நிறைவேற்ற முடிந்தது.


ஒரு பொதுத்தேர்தலில் இந்தியாவின் கட்சிகளின் நிலைமை எப்படி இருக்கும்? யார் ஜெயிப்பார்கள்? மாநிலத்தின் நிலைமை எப்படி? என்பதையெல்லாம் விளக்கி அவன் துணைத்தூதர் மூலமாக வாஷிங்டனுக்கு ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தான். துல்லியமாக அவன் முடிவுகளை கணித்ததற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை பாராட்டி ரொக்கப் பரிசு கொடுத்தது.
சில முக்கிய தேசிய சர்வதேச அரசியல் நிகழ்வுகளின் போது அவனது கணிப்பு என்ன என்பதை பிரபல தமிழ் ஆங்கிலப் பத்திரிகையாசிரியர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அவன் கணிப்பு சரியாக இருந்ததால் பத்திரிகை உலகத்திலும் அவனுக்கு மதிப்பு இருந்தது. அது அவனது பிறந்த வீடுதானே?
ஒருமுறை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே எமர்ஜென்சி அறிவித்தபோது இரண்டு பிரபல பத்திரிகை ஆசிரியர்கள், ‘ஏன் திடீரென்று ஜெயவர்த்தனே நெருக்கடி நிலைமையை
அறிவித்திருக்கிறார். என்ன செய்யப்போகிறார்? உங்கள் ஊகம் என்ன’ என்று கேட்டார்கள். அவன் சொன்னான், ‘அடுத்த மூன்று மாதங்களில் அங்கே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவார்’ என்றான். அது அப்படித்தான் ஆயிற்று.


ஒரு பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னதாக மணிசங்கர ஐயர் பதவிலிருந்து விலகியபோது இரண்டு மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், ‘அவர் தேர்தலில் போட்டியிடுவாரா?’ என்று கேட்டார்கள். அவன் சொன்னான், ‘இந்தத் தேர்தலில் மணிசங்கர ஐயர் போட்டியிட மாட்டார். ராஜீவ் காந்திக்கு தேர்தல் பிரச்சாரகராக இருப்பார். அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடும்’ என்றான். அது அப்படியே நடந்தது. ‘ஜெயலலிதாவை விட்டு மூத்த கட்சிப் பிரமுகர்கள் பிரிந்தார்களே, என்ன ஆகும்?’ என்று கேட்டார்கள். ‘சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் அந்தக் கட்சிக்கே திரும்பி வருவார்கள்’ என்றான். அதுதான் நடந்தது.


அவன் அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழ்நாட்டில் ஏற்படுத்திவரும் தாக்கத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். பிரபல இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் நன்கு பழக்கமானார்கள். அதே நேரம் அகதிகளுக்கு உதவி செய்யும் அமைப்பை நடத்திக் கொண்டிருந்த சந்திரகாசன், தமிழ்த்தொண்டு செய்து கொண்டிருந்த மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோர் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். ஆனாலும் அவன் இலங்கை சென்றுவர தூதரகம் அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம் அந்த சமயத்தில் இலங்கையின் கிளிநொச்சியில் மூன்று அமெரிக்கர்கள் கடத்தப்பட்டு, மிகுந்த பிரயாசைப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் தான். அது இலங்கை அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் தலைவலியாக இருந்தது.


அமெரிக்க தூதரகத்தின் அரசியல் ஆலோசகராக இருக்கும் அவன் இலங்கைக்குச் சென்றால் கடத்தப்படலாம் என்ற பயம் இருந்தது. அது ஊகம்தான். இருந்தாலும் அப்படி அவன் கடத்தப்பட்டால் அது இந்தியா, அமெரிக்கா, இலங்கை ஆகிய மூன்று அரசாங்கங்களுக்கும் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அவன் இலங்கை செல்ல அனுமதிக்கப்படவில்லை.


பின்னர் ஹிண்டுவில் துணையாசிரியராக மீண்டும் சேர்ந்தபோது இலங்கைக்குச் சென்றான். அங்கு பரராஜசிங்கம் என்ற பத்திரிகையாளர் அவனை தன்னுடன் ஒரு நாள் தங்கச் சொன்னார். அதற்காக அவர் அருகில் இருந்த போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அவனது பாஸ்போர்ட் பற்றிய தகவல்களைக் கொடுத்து அவன் இன்னார் என்ற விபரங்களையும் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று நிலைமை எப்படியோ? அன்று விருந்தாளிகளை அரசாங்கத்தின் ஒப்புதலுடன்தான் இலங்கைத் தமிழர்கள் தங்கள் வீட்டில் தங்க வைக்க முடிந்தது. இதையெல்லாம் அவன் மீண்டும் பத்திரிகையாளராக ஹிண்டுவில் எழுதினான். அவன் பேனாவில் இருந்த மை உண்மை.