
வழக்கத்தை விட அன்று காலை சீக்கிரமாகவே எழுந்து ஜாகிங் கிளம்பினார் அய்யாசாமி.
அண்ணா, அரைக்கால் பர்முடாஸ் வேண்டாம்! புல் சார்ட்ஸ் போட்டுண்டு போங்கோ என்றாள் ருக்கு.
ஏன்? இதான் எனக்கு வசதியாக இருக்கு என்றார் அய்யாசாமி.
வசதியாகத்தான் இருக்கும், நாய்களுக்கும், என்ற ருக்குவின் வார்த்தைகளை அலட்சியம் பண்ணிட்டு கிளம்பினார்அய்யாசாமி.
அன்று மனிதர்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது.
ஆனால் ருக்கு சொன்னது போலவே அன்று நாய் துரத்தியதில் ஜாகிங் பண்ண முடியாமல் ரன்னிங் செய்து வியர்த்துவிறுவிறுத்துதான் போனார் அய்யாசாமி.
ஓய்வாக அருகேயிருந்த ஒரு நீரில்லா வாய்க்காலின் மேல் உள்ள பாலத்தில் அமர்ந்து இருந்தார், கண் முன்னேமயிலாடுதுறை - சீர்காழி
ரயில் மார்க்கம் தெரிய, பேரூந்து ஓடாத சாலையையும்,
ரயில் ஓடாத பாதையையும் ரசித்துக் கொண்டு இருந்தார்,
அந்த சமயத்தில் சரக்கு ரயில் ஒன்று பாதையில் வருவதையும், இளைஞன் ஒருவர் அருகே நிற்பதையும் கண்டஅய்யாசாமிக்கு மேலும் வியர்த்தது.
ஓடிச் சென்று தடுத்து நிறுத்திப் பார்த்ததும்,மேலும் மேலும் வியர்த்தது அங்கே நண்பன் ராமனின் மகன் அருண்,
பொறியியல் கல்லூரி பட்டத்துடன்,சரியான வேலைக் கிடைக்காமல் தந்தை வழங்கிய உதவாக்கரை என்றபட்டத்துடன் இருப்பவன்.
என்ன அருண் இது ? வா வீட்டிற்குப் போகலாம் என்று அழைத்ததற்கு வர மறுத்து நின்றான் அருண்.
எல்லோரும் தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம் என்பார்கள், நான் அப்படி சொல்லமாட்டேன்,
ஏனெனில் உயிர் போன்ற உயர்வான ஒன்றை விட ரொம்பத் துணிவு வேண்டும் என்று கூறி, உனக்கு என் வாழ்த்துகள்என்றார்.
முதன் முதலாக அன்றுதான் வாழ்த்துச்சொல்லையே கேட்ட அருண் குழும்பியபடி,அய்யாசாமியைப் பார்க்க,
நான் வாழ்த்து சொல்கிறேனே என்ற குழப்பமா ?
ஆமாம் அங்கிள் என்றான் அருண்.
உயிரை இழக்க இத்தனைத் துணிவாக முடிவு எடுத்த உனக்கு, உயிர் வாழ சரியான ஒரு முடிவு எடுக்க முடியாமலாபோய்விடும், வாழ்க்கை உயிர் வாழ்வதற்குத்தானே ஒழிய, போக்குவதற்கு இல்லைஎன்று நிறுத்தியவர், தவறாகவே இருந்தாலும் துணிந்து முடிவு எடுத்தமைக்குத்தான் வாழ்த்துகள் கூறினேன்.
நான் உனக்கு அறிவுரைகள் கூறவில்லை, கூறப் போவதுமில்லை, ஏனெனில் உலகில் மலிவானது அதுதான், ஆனால், பொறுமையாக யோசி என்று மட்டும் சொல்வேன், அப்படி நீ யோசித்தால், மாலை நம்மாத்திற்கு வா, நான் உன்னுடன்ஒரு கப் காபி சாப்பிடனும் என ஆசைப் படுகிறேன் என்ற அய்யாசாமி, நான் நடந்ததை கண்டிப்பாக ராமனிடம்சொல்லமாட்டேன் 'குட் டே' என்று கூறி கிளம்பினார்.
ஏண்ணா லேட்? வாக்கிங் போனேளா ? இல்லை என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டேளோ ? எனக் கவலையாயிடுத்துநேக்கு என்றாள் ருக்கு.
உன்னை விட்டு ஓடுவதுமில்லை, விலகுவதுமில்லை,
என டயலாக் சொன்னவர்,
ஒரு கப் காபி கொடேன் மனசே சரியில்லை என்றுக் கூறியவர், ராமனைப் பற்றி சிந்திக்கலானார்.
பாவம் ராமன் நடுத்தரக் குடும்பம், மூத்தவள் பெண் திருமணத்திற்கு தயாராகி இரண்டு வருடமாக இருக்கிறாள், அதன்சுமையாலே பிள்ளை அருணிடம் சுமையை பகிர நினைத்து, அது முடியாமல் போனதால் வந்த விரக்தியில் திட்டிக் கூடஇருக்கலாம், அதற்காக சிறு வயதிலே இத்தனை பெரிய முடிவு எடுப்பதா காலம் எங்கே போகிறது ?எனயோசித்தபடியே அருண் வரட்டும், பேசுவோம், வருவான் என ஆழ்மனத்தில் நம்பிக்கையோடு இருந்தார் அய்யாசாமி.
மாலை நெருங்கியும் அருண் வராததும் கவலை அதிகமானது, அய்யாசாமிக்கு.
ஏண்ணா ? மாடித்தோட்டம் போடப்போறேன் என எல்லாப் பொருளும் வாங்கி வச்சேளே ? இன்றைக்கு நாள் நன்னாஇருக்கு போய் விதைகளைப் போடுங்கோ என காலண்டரைப் பார்த்து ருக்கு சொல்லும் போதே, தயங்கியபடியேஅருண் அய்யாசாமி அகத்திற்கு வந்தான்.
வா, அருண் என்று இருவரும் கோரசாக அழைக்க,
ருக்கு இரண்டு பேருக்கும் காபி கொடேன்.
வா,அருண் மாடிக்குப் போயி் பேசிண்டே தோட்டத்தில் விதைகளைப் போடலாம் என அழைத்துப் போனார்.
ஒரு முடிவு எடுத்து திரும்ப இங்கே வந்தே பாரு, நீ ஜெயிச்சுட்டே அருண். இனி உன் வாழ்க்கையில் நல்லது மட்டுமேநடக்கும் என பாராட்டி அவனிடம் நம்பிக்கையை முதலில் விதைத்தார்.
அருண் இது வெண்டைக்காய் விதைகள், இதைப் பார்த்தால் உனக்கு என்ன தெரிகிறது? கேட்டார் அய்யாசாமி.
வெறும் விதைகள். என்றான் அருண்.
ஆம் வெறும் விதைகள்தான், ஆனால் தன்னுள்ளே உயிர் ஆற்றலை தக்க வைத்துள்ளது, அது உனக்குத் தெரிகிறதா ? கேட்டார்.
இல்லை, என்றான் அருண்.
தட்ஸ் இட்.
இந்த விதை முளைத்து செடியாகி பயனுள்ள வெண்டைக்காய்களை அடுத்தவர்களுக்கு அளிக்கப்போகிறேன் எனஅறிந்தா இதையெல்லாம் செய்கிறது? இல்லை.
இந்தா அருண், இந்த விதையை அந்த வளர்பையில் அழுத்தி விடு என்றார், இந்த பையை நாளை மறுநாள் வந்து பார்என சொல்லி அனுப்பி வைத்தார்.
அழகாய் கேள்வி குறிகளாய் முளைத்து கிளம்பி இருந்தது.
வாழ்க்கையும் இப்படித்தான் முதலில் கேள்விக்குறியோடுதான் துவங்கும், மண்ணில் வீழ்ந்ததும், தன்னிடம் உள்ளஉயிர் ஆற்றலை வெளிப்படுத்தி, முளைத்து வெளியே கிளம்பி வீரியமான செடியாகி, பயனாக காய்களைக் பிறருக்குஅளிக்கும்.
ஒரு சிறு விதையே தான் மண்ணில் புதைந்தும், அடுத்தவருக்கு பயன்பட வேண்டும் என மண்ணை முட்டிக் கிளம்பும்போது,
சதையைக் கொண்டு மூடிய நம் உடலை, அருமையான உயிரை, மாய்த்துக்கொண்டு யாருக்கும் பயன் அளிக்காமல்சாகலாமா ? எனக் கேட்டார் அய்யாசாமி.
நண்பன் ராமனின் குடும்பத்திற்கு ஒரு நல்ல நம்பிக்கையான விதையை உருவாக்கி கொடுத்து விட்டார் அய்யாசாமி.
விதைகளை நீங்கள் விதைத்தது வளர் பையில் மட்டுமல்ல, வளர வேண்டிய பையனிடமும்தாண்ணா, என்ற ருக்கு,ஆமாம் எப்போ நீங்க சமர்த்தானேள் ? கேட்டாள்.
பழக்க தோஷம்தான் என்றார் அய்யாசாமி சிரித்தபடி

Leave a comment
Upload