தொடர்கள்
அனுபவம்
விகடகவி கடந்து  வந்த பாதை - மரியா சிவானந்தம்


20221025195823657.jpg

இன்று உங்கள் அன்புக்குரிய 'விகடகவி' ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது .

குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

என்னும் புறநானூற்று பாடல் வரிகளுக்கு ஏற்ப , கண் முன் வளர்ந்து வரும் மழலையின் வளர்ச்சியும் ,செயல்களும் மனதுக்கு மகிழ்ச்சி தருவது போலவே , உங்கள் கண் முன் பிறந்து, தவழ்ந்து , பேசி ,சிரித்து தளர் நடையிடும் 'விகடகவி 'டிஜிட்டல் வீக்லியின் வளர்ச்சி வாசகர்களின் மனதுக்கு பேருவகை தருவதல்லவா ?

20221025212649917.jpg

இந்த ஆறாண்டு பயணத்தில் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்தால் நெகிழ்வையும் , மகிழ்வையும் தருகிறது. அச்சு இதழ்கள் மெல்ல மெல்ல வாசகர்களை இழந்து வரும் சூழலில்,தொடங்கிய சில மாதங்களில் இணைய இதழ்கள் மூடுவிழா நடத்துகையில், விகடகவி இணைய இதழ் இலவச இதழாக முகிழ்ந்து ,வெற்றி நடை போடுவது சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்.

20221025212256510.jpg

29.11.2017 அன்று தான் முதல் இதழ் இணையத்தில் வெளியானது. ஆனந்த விகடன் இதழ் குழுமத்தில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்க ஆசிரியர் மதன் சார், ராவ் சார் பாலஸ்வாமிநாதன்,ஜாசன், சுதாங்கன்,சுபா வெங்கட் ,, . போன்ற பெருமை மிக்க எழுத்தாளர்கள் புகைப்பட நிபுணர் மேப்ஸ் ஒன்று கூடி இதழைத் தொடங்க அதே குழுமத்தில் மாணவ நிருபர்களான சதீஸ் அப்பு தாஸ்,ஹாங்காங் ராம்,ராஜேஷ் கன்னா, ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி, , இவர்களும் வேங்கட கிருஷ்ணன், ஸ்ரீதர் வெங்கடேசன், ஆர்னிகா நாசர் என்று பலரும் கை கோர்க்க 'விகடகவி 'பிறந்தது .

20221025221818351.jpg

விகடகவி மின்னிதழ் தொடங்க இதுநாள் வரை எங்களுடன் கைகோர்த்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு தங்களையே அர்பணித்த புகைப்பட நிபுணர் மேப்ஸ் , தினகரன் அரிய பணிகள் எழுத்தில் அடங்காது.

திறமை மிக்க எழுத்தாளுமைகள், புகைப்பட கலைஞர்கள். ஓவியர் அரஸ் என்று ஆர்வத்துடன் செயல்பட்டனர் . அரசியல் ,ஆன்மிகம் , கலை, இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி, முகநூல், வாட்சப், ராசிபலன் என்று புகுந்து விளையாடியது விகடகவி டீம் . சமூக பொறுப்புள்ள ஒரு நடுநிலை இணைய இதழாக இதை கொணர்வதில் எல்லாரும் முழு மூச்சுடன் செயல் படுகின்றனர். பின்னாட்களில் ஆரூர் சுந்தரசேகர் , தில்லைக்கரசி சம்பத் ,மரியா சிவானந்தம், பா. அய்யாசாமி மேலும் பல எழுத்தாளர்கள் இந்த குழுவில் இணைந்து எழுதி மக்களின் வாசிப்பு சிறக்க ஒத்துழைக்கிறார்கள் .

விகடகவியின் வெற்றிக்கு அதில் வெளிவந்த தொடர்கள் முக்கிய பங்காற்றின . மதனின் "ஹாய் மதன் ", 'வந்தார்கள் வென்றார்கள் ', ஹாய் டியர் மதன் , சுதாங்கனின் 'டேஞ்சர் தேசம், ஜாசனின் 'மாண்புமிகு மனிதர்கள்,மகேந்திர பல்லவர் ' ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதியின் ,'பிரபஞ்சமெங்கும் பெரியவா, ராஜேஷ் கன்னாவின் 'எங்க வாத்தியார் ,உலகை உலுக்கிய வழக்குகள் , வேங்கடகிருஷ்ணனின் ' வாசி ,நேசி, ருசி ,ரசி . நேசித்த புத்தகங்கள் ,' ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதிய 'வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் நினைவுகள் " என்.குமாரின் 'பட்டாம் பூச்சி பேசுகிறது " காவேரி மைந்தனின் 'காதல், உலகப் பொதுமறை' போன்ற தொடர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை .

இலக்கியத் தொடர்களான 'ஒலிக்கும் சிலம்பு ,அருந்தவச் செல்வி, குறுந்தொகை துளிகள் இவற்றுடன் 'அரசியல் வானில் அரசிகள், புவியை அசைத்த தத்துவங்கள் ,பயணத் தொடர்களும் மரியா சிவானந்தம் பங்களிப்பில் வெளி வந்து பாராட்டுக்களைப் பெற்றவை.

இனிக்கும் இஸ்லாம், ஒலிக்கும் சிலம்பு இரண்டும் புத்தகங்களாக வெளி வந்தவை .ஆன்மிக எழுத்தாளர் ஆரூர் சுந்தரேசன் அவர்களின் அளப்பரிய பங்களிப்பில், சிவபக்திக்கு வித்திட்ட நாயன்மார்கள், ஆரோக்கியம் நம் கையில் போன்ற தொடர்களுடன் ,தற்போது எழுதி வரும், "பாரதத்தின் மலைக்கோவில்கள் உள்ளிட்ட தொடர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தவை .

சிறப்பு கட்டுரைகள் வீடியோக்கள், வீடியோ பேட்டிகள் ராமின் ஸ்பெஷாலிட்டி.அவ்வப்போது நம்மை ஹாங்காங் சுற்றி காட்டுவார் ராம். அரசியல் களமோ ,சமூக அவலமோ அதிரடி கருத்துக்களை ஆணித்தரமாக எழுதுவது 'தில்லைக்கரசி சம்பத்தின் சிறப்பு .

வீடியோக்கள், புகைப்படங்கள் மேப்சின் கைவண்ணத்தில் விகடகவியை மிளிர வைத்தன. சதிஷ் அப்புதாஸ் நம்மை வாரா வாரம் ஊட்டிக்கு அழைத்துச் செல்வார் தன் எழுத்துக்களால் .

20221025212900916.jpg

விகடகவி குழுவில் எழுதும் அனைவருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் எழுதுகிறார்கள். கவிதை, சிறுகதை ,பேட்டி கட்டுரைகள் எல்லாமே தனித்துவத்துடன் எழுதப்படுகின்றன .

விகடகவியில் எழுதுவது பெருமைக்குரிய சங்கதி . நம் ஆன்மீ எழுத்தாளர் ஆரூர் சுந்தரசேகரின் அனுபவத்தைக் கேளுங்கள் .

"நான் 02 அக்டோபர் 2018 அன்று டி .வி.எஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் சில ஆன்மிக மாத இதழ்களில் ஆன்மிக கட்டுரைகள் எழுதி வந்தேன் . அந்த சமயத்தில் எனது சித்தப்பா ஆரூர் சுப்பிரமணியன் 'விகடகவி ' என்னும் டிஜிட்டல் வார இதழில் 16-4-2019 இதழ் பக்தி ஸ்பெஷல் என வெளிவருகிறது .நீ அதற்கு ஆன்மிக கட்டுரை எழுதி அனுப்பு என்று வற்புறுத்தினார். விகடகவியில் ஆனந்த விகடனில் இருந்த மதன் சார் ,ராவ் சார் ,சுபா மேடம் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் எனக்கு சிறிது அச்சம் இருந்தது .எனது தந்தை 'உனக்கு தெரிந்ததை எழுதி அனுப்பு என்று ஊக்கப்படுத்தனார்.

எனக்குள் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மகான் திருக்கச்சி நம்பிகளிடம் நேரில் பேசிய பெருமாள் என்ற சிறு கட்டுரை மூலம் சிறு மழலையாக அடி எடுத்து வைத்தேன் . இன்று விகடகவி ஆறாவது வருடத்தில் என்னையும் விகடகவியின் குடும்ப உறுப்பினராக்கி ,'ஆரூரார் என்ற அந்தஸ்து கொடுத்து ஆன்மிக கட்டுரைகள் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்த விகடகவி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"

ஆரூராரின் அனுபவத்தைப் போலவே இங்கு உள்ள ஒவ்வொருவரும் தம் அனுபவத்தை சொல்லக் கூடும் .

நடந்து வந்த பாதையில் தடைக்கற்களோ முட்களோ இல்லாமல் இருக்குமா என்ன ?? அப்படித்தான் விகடகவியின் யூடியூப் பக்கம் காணாமல் போனது சமீபத்தில் நிகழ்ந்தது. பல லட்சக்கணக்கான பார்வைகள் கடந்த வீடியோக்களை இழந்து விட்டாலும் மீண்டும் துவங்கியிருக்கிறோம் எமது யூடியூப் பக்கம். உங்கள் ஆதரவை நம்பித்தான்.

www.youtube.com/@vikatakavimagazine

தொடர்ந்து எமது வீடியோக்கள் இந்த யூடியூப் பக்கத்தில் வலையேற்றப்படும். சப்ஸ்கிரைப் செய்து வைக்கவும்.

தன்னலமற்ற அர்பணிப்புடன் விகடகவி டீம் பணியாற்றி வருவதால் விகடகவி டிஜிட்டல் மின்னதழ் வெற்றிகரமான ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுவரை ஒத்துழைப்பு தந்த வாசகர்கள் தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை தர வேண்டுகிறோம். விகடகவியின் வாசகர்கள் ஆகிய உங்களுக்கு எங்கள் விகடகவி குழுமத்தின் சார்பாக நன்றியும் வணக்கத்தையும் தெரிவிக்கிறோம்.

பாதையோ நெடிது ,பயணம் இனிது .

ஐந்தாண்டு கதைகளை ஒரு வாரத்தில் பேசி விட முடியாது .

-பயணம் தொடரும்