
தமிழறிஞர்கள் அடிக்க வருவார்கள் இருந்தாலும் கால்பந்தை விட ஃபுட் பால் வேர்ல்ட் கப் என்று சொல்வதில் ஒரு 'கிக்' இருக்கத்தான் செய்கிறது.
(ஆறாம் ஆண்டில் விகடகவி, உலகக் கோப்பை கால்பந்து ஒரே சமயத்தில் என்ன செய்யலாம். நாம் இணைந்து கொண்டாட வேண்டாமா ??? கடைசி வரியை கடைசியாக படியுங்கள். )
நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் உலகக் கோப்பை கால் பந்து உலகத் திருவிழா தான்.
முதல் முறையாக உலகக் கோப்பை ஒரு இஸ்லாமிய நாடான கத்தாரில் நடக்கிறது.
சர்ச்சை இல்லாத திருவிழாவா ? நிறைய இருக்கிறது.
கத்தார் ஒரு சின்ன நாடு.
மொத்தமே மூன்று மில்லியன் அதாவது முப்பது லட்சம் பேர் தான் மக்கள் தொகை. கால் பந்து நடக்கும் போது பத்து லட்சம் பார்வையாளர்கள் வந்தால் தாங்குமா ??
அதற்காக வரும் விருந்தாளிகள், பார்வையாளர்கள் தங்குவதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். இரண்டு மூன்று குட்டி ஊர்களை கட்டுவதுடன் சொகுசுக் கப்பலையும் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இருந்தாலும் பல பேருக்கு கடல் பயணம் ஒத்துக் கொள்வதில்லையே.அவர்களெல்லாம் ஊருக்குள் தங்குகிறார்களாம்.
உலகக் கோப்பையில் விளையாட தகுதிச் சுற்று இருக்கிறது. வழக்கமாக இது வரை கத்தார் தகுதிச் சுற்றில் தேர்வாகி உலகக் கோப்பை விளையாடியதே இல்லை.

ஆனால் இந்த முறை அவர்கள் தான் நடத்துகிறார்கள் என்பதால் பின் வாசல் வழியாக தேர்வுச் சுற்று இன்றி உலகக் கோப்பை விளையாடலாமாம்.
(எப்படியாவது இந்தியாவில் உலகக் கோப்பை வைத்து தொலையுங்கள். அப்படியாவது தகுதிச் சுற்றில் தேர்வாகாமல் உள்ளே நுழைந்து விடலாம். நோகாமல் நோன்பி)
பல முதல் முறைகள் இந்த உலகக் கோப்பையில் இருக்கிறது.
இஸ்லாமிய நாட்டில் முதல் உலகக் கோப்பை.
முதல் முறையாக ஒரு பெண் நடுவர் ஆண்கள் விளையாட்டுப் போட்டிக்கு ரெஃப்ரீயாக இருக்கிறார்.

வழக்கமாக மே, ஜூன் அல்லது ஜூலையில் தான் உலகக் கோப்பை வரும். அந்த சமயத்தில் கத்தாரின் வெப்பத்தில் கால்பந்தில் காற்று சூடாகி வெடித்து விடும். 40 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கும் என்பதால் நவம்பர் மாதம் கத்தாரில் உலகக் கோப்பை. இதனால் ஐரோப்பிய லீக் மற்றும் கால் பந்து லீக் போட்டிகள் ஏக சிக்கலாகியிருக்கிறதாம் பாவம்.
அப்படியும் நவம்பரில் ஒன்றும் பெரிதாக குளிர் இல்லை கத்தாரில். 30 டிகிரி வாக்கில் போகுமாம். அதனால் உயர் ரக குளிர் சாதன வசதிகளை செய்து வைத்திருக்கிறது கத்தார் அரசு.
வேறு பிரச்சினை என்னவெனில் பிரபா வைன் ஷாப் பிரச்சினை தான். இஸ்லாமிய நாடு என்பதால் சரக்கடிக்க அனுமதியில்லை. சரக்கில்லாமல் ஃபுட் பாலா ??
ஸ்டேடியத்தில் பீர் குடிக்காமல் விளையாட்டைப் பார்த்தே பழக்கமில்லாத கால்பந்து ரசிகர்கள் முதல் முறையாக தவித்து போய் விட்டார்கள். அரை போதையில் கால்பந்து பார்த்தால் தான் அவர்களுக்கு ஜென்ம சாபல்யம் ஆகும். அதனால் கத்தாரில் ஃபுட்பால் ஃபேன் பார்க் என்று அங்குங்கு சரக்கடிக்க தனி ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கின்றனர்.
கால்பந்து போட்டிகள் நடக்கும் ஸ்டேடியங்கள் எல்லாமல் ஒரு மணி நேர பயண தூரத்தில் தான் இருக்கிறது. இதனால் சில நாட்களில் ரசிகர்கள் இரண்டு போட்டிகளை கூட பார்க்க முடிகிறது.

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது கத்தார்.

இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் நடத்தப்படும் என்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் இது தான்.
இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ம்ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது.
வெளிநாட்டு பெண்களுக்கு சில சலுகைகள் கொடுத்திருக்கிறது கத்தார் அரசு.
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பெண் ரசிகர்கள் இங்குள்ள கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
உள்ளூர் பெண்கள் புர்கா போன்ற ஆடையைக் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. வெளிநாட்டு ரசிகைகள் இதுபோன்ற ஆடைகள் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், வெளிநாட்டுப் பெண் ரசிகைகள் உடலை மறைக்கும் வகையில் ஆடையை அணிய வேண்டும்.
பெண் ரசிகைகளின் ஆடைகள் முழங்கால்கள் வரை மறைப்பது போல இருக்க வேண்டும். ஸ்லீவ்லெஸ் டேங்க் டாப்ஸ் மற்றும் இரட்டை அர்த்த வாசகங்கள் கொண்ட டாப்ஸ்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. ஆண்கள் தங்கள் மேலாடைகளை முழுவதுமாக கழற்றினால் அபராதம் விதிக்கப்படும்.
அதே போல திருமணமாகாத ஆண் பெண் அங்கு சேர்ந்து இருக்க முடியாது. இருந்தாலும் ஒரே அறையை வெளிநாட்டு பயணிகள் தங்கிக் கொள்ளலாம் என்று விதிமுறையை தளர்த்தியிருக்கிறது கத்தார்.
மற்றபடி இந்த உலகக் கோப்பையில் இரசிகர்களுக்கு பெரிய வருத்தம் என்னவெனில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும் போர்ச்சுகலில் ரொனால்டோவுக்கும் இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும்.
இதில் மெஸ்ஸி அதை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். ஆனால் ரொனால்டோ இன்னமும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் இது தான் அவர்களுக்கு கடைசி உலகக் கோப்பை என்பதால் கால்பந்து இரசிகர்களுக்கு வருத்தம் தான்.
உள்ளூர் கால்பந்து கிளப் FCmadras உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் கால்பந்து குறித்த சில கேள்விகளை முன் வைத்ததில் சில சுவாரஸ்யமான பதில்கள் இங்கே......
என்னென்ன அணிகள் விளையாடுகிறது எப்படி அவர்கள் ஜெயித்து ஃபைனல் வருவார்கள் என்ற தகவல் ஏராளமாக வலைதளங்களில் இருக்கிறது. இருந்தாலும் இங்கே பார்வைக்கு.

விளையாட்டு நேரத்தை பொறுத்தவரை இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அதிக பட்ச நேரமாக இரவு 12.30 ஆட்டம் துவங்கு 90 நிமிடங்களில் முடிந்து விடும். அகாலமான நேரத்தில் முழித்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கால் பந்து கால் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 9,10,11 தேதிகளிலும், அரை இறுதிப் போட்டிகள் டிசம்பர் 14, மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறும்
இறுதிப் போட்டி டிசம்பர் 18ந் தேதி தோஹா கத்தாரில் உள்ள அல் துமாமா விளையாட்டரங்கில் இந்திய நேரம் 6.30 மணிக்கு துவங்கும். எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு விளையாடும் என்பது 2020 அமோகமாக இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக இருக்கும் என்று ஊகித்த நம் ஜோசியக்காரர்களால் கூட சொல்ல முடியாத விஷயம்.
மிகச் சரியாக இந்தந்த அணிகள் இத்தனை கோல்கள் போட்டு ஜெயிக்கும் என்று வாசகர்கள் காமெண்ட் எழுதி அனுப்பலாம். (info@vikatakavi.in) அது சரியாக இருக்கும் பட்சத்தில் விகடகவி சார்பில் ஒரு சிறந்த உணவகத்தில் ஆசிரியர் குழுவுடன் பெரிய டின்னர் டிரீட் காத்துக் கொண்டிருக்கிறது. (அதிகபட்சம் ஒருவர் வெற்றி பெற்றால் 5 பேர் வரை கலந்து கொள்ளலாம்)
ஆனால் உங்கள் முடிவுகள் கச்சிதமாக இருக்க வேண்டும்.
கீழே காமெண்ட்டிலும் உங்கள் கோல் கணக்கை போடலாம்.

Leave a comment
Upload