தொடர்கள்
பொது
எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

20240221150718827.jpg

என் வாழ்க்கையில் என்றும் என் நினைவில் நிற்பவை பட்டியலில் எங்கள் தோட்டம் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இன்றைய தலைமுறை குழந்தைகள் எப்போதும் உபயோகப்படுத்தும் வீடியோகேம், கம்ப்யூட்டர், செல்போன் இவையெல்லாம் அப்போது எங்களுக்கு இல்லை.தொலைக்காட்சியிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான நிகழ்ச்சிகள் சில நாட்களில் மட்டும் தான் இருந்தன.அதனாலோ என்னவோ விடுமுறை நாட்கள் முழுவதும் நானும் என் உடன் பிறந்தவர்களும் தோட்டத்திலேயே அதிக நேரம் செலவிடுவோம்.

20240221150828677.jpg

ஜென்டில்மேன் படத்தில் வரும் “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்; என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்; என் நெஞ்சை சொல்லுமே”என்ற இந்த பாடலைக் கேட்கும் சமயங்களில் எல்லாம் நான் சிறுவயதில் என் உடன் பிறந்தவர்களுடன் ஆனந்தமாக கழித்த எங்கள் தோட்டமும் அதன் நினைவுகளும் தான் என் மனதில் தோன்றும்.இன்றும் அப்படித்தான்,இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது.என் மனதில் இருக்கும் நினைவுகளை எழுத்து வடிவில் காண ஆசைப்பட்டு, இதனை எழுத ஆரம்பித்தேன்.

20240221150950591.jpg

நான் பிறந்து வளர்ந்த சிறிய டவுனில்,எங்கள் வீட்டின் பின்புறத்தில் பெரியத் தோட்டம் இருக்கும். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது புழக்கடை கதவுக்கு இரண்டு பக்கமும் புதிதாக இரண்டு அறைகள் கட்டப்பட்டன.அப்போது மாடிக்குப் போக படிக்கட்டு கட்டப்படவில்லை. புழக்கடை கதவு திறந்த உடன்,இடது பக்கத்தில் முருங்கை மரமும் பெரிய மாமரமும் இருக்கும். வலது பக்கத்தில் துணி துவைப்பதற்கு ஏதுவாக பெரிய கல் போடப்பட்டிருக்கும். அதற்கு முன்பாக கிணறு இருக்கும்.கிணற்றில் ராட்டினம் இருக்கும் தளத்தை தாங்க, கிணற்றின் பக்கவாட்டில் தூண்கள் இருக்கும்.

20240221151031971.jpg

நான் என் உடன் பிறந்தவர்களோடு அந்த தூணில் கால் வைத்து ஏறி, மொட்டை மாடிக்குச் சென்று துரடு கொண்டும் கையாலும் மாமரத்தில் இருக்கும் மாங்காய்களை பறித்து சாப்பிட்டு மகிழ்வேன்.தற்போது பிள்ளைகள் அணியும் Shorts,Track pants எல்லாம் எங்களிடம் இல்லை.பாவாடையை இழுத்துச் சொறுகி ஏறுவேன்.கிணற்றின் மேல் பரப்பில் பாதிவரை தான் ஒரு தகரம் போட்டு மூடி வைத்திருப்பார்கள்.மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கும்போது,மேல் தளத்திலிருந்து பின்பக்கமாக திரும்பி மெதுவாக வலது காலை இறக்குவேன்.வலது பாதம் தூணின் மேல் நுனியை தொட்டவுடன் இடது காலை இறக்குவேன்.அது எனக்கு Adventurous activity ஆக இருந்தது.எப்படித்தான் அவ்வளவு தைரியமாக ஏறினேன்,இறங்கினேன் என்று இப்போது நினைத்தால் மிகவும்ஆச்சரியமாக இருக்கின்றது.“இளங்கன்று பயமறியாது” என்று சும்மாவா சொன்னார்கள்.

20240221151149909.jpg

புதிதாக கட்டிய இரண்டு அறைகளின் தளத்திற்கு தண்ணீர் ஊற்றியது எல்லாமே நானும் என் உடன்பிறந்தவர்களும் தான்.கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்தி பக்கத்தில் இருக்கும் பீப்பாயில் ஊற்றுவோம்.தளத்தின் மேலிருந்து தாம்பு கயிறு கட்டப்பட்ட குடத்தை பீப்பாயின் உள்ளே இறக்கி, தண்ணீர் குடத்தை மேலே எடுத்து தளத்தில் ஊற்றுவோம். இவற்றை நான் உற்சாகத்துடன் பள்ளியின் கோடை விடுமுறையில் செய்தேன்.அப்போது எனக்கு இது Fun activity யாக இருந்தது. எங்கள் தெருவில் அந்த காலத்தில் அனைவரின் வீட்டிலும் தோட்டம் இருக்கும். தோட்டத்து மதில் சுவரின் மேல் குரங்குகள் வரிசையாக அணிவகுத்துப் போகும்.எங்கள் தோட்டத்தில் மாங்காய்களை பார்த்தவுடன் ஓடிவரும். நான் பயந்து ஓடிப்போய் புழக்கடை கதவை தாழிட்டுக்கொண்டு,ஜன்னல் வழியாக குரங்குகளின் செய்கையை வேடிக்கை பார்ப்பேன்.மாங்காய் சிறிது பழுத்தவுடன் பறிக்க வேண்டும் என்று மரத்தில் ஆங்காங்கே நான் பார்த்து வைத்த மாங்காய்களை கடித்து சாப்பிடும்.அவற்றையெல்லாம் பார்த்து, எனக்கு அழுகை வரும் போல இருக்கும்.குரங்குகள் வந்துவிட்டுப் போன பிறகு புயல் அடித்து ஓய்ந்தது போல் அந்த இடம் காட்சியளிக்கும்.தோட்டத்தின் தாழ்வாரம் முழுவதும் உதிர்ந்த மாம்பூக்களும்,சுள்ளிகளும்,கடித்துப் போட்ட மாங்காய் துண்டுகளுமாக ரணகளமாக இருக்கும்.

20240221151306513.jpg

கிணற்றுக்கு எதிரே உள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் தித்திப்பாக இருக்கும் எங்கள் உணவில் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது முருங்கைக்கீரை இருக்கும்.முருங்கைக்காய்களை அண்டை வீட்டாருக்கு கொடுத்து விட்டு வருவேன். எங்களுடன் வசித்த எங்கள் கொள்ளுப்பாட்டியின் கணவர் அதாவது மறைந்த எங்கள் கொள்ளு தாத்தாவின் பெயர் ‘முருகேசன்’ என்பதால் பாட்டி ‘முருங்கை’ என்ற பெயர் சொல்லாமல் மரத்துக்காய்,மரத்துகீரை என்றுதான் சொல்லுவார்கள் பண்டைய காலத்து பெண்கள் கணவர் பெயரை மட்டும் அல்ல;அவர் பெயர் போல வரும் பொருட்களைக் கூட உச்சரிப்பது மரியாதை குறைவு என்ற எண்ணத்தில் இருந்தவர்கள்.பாட்டியின் வாயிலிருந்து எப்படியாவது முருங்கைக்காய் என்ற வார்த்தையை சொல்ல வைக்க ‘குண்டக்க மண்டக்க’ என நான் கேள்விகள் கேட்டாலும் பாட்டி ரொம்ப உஷார்; அவர் வாயிலிருந்து இந்த வார்த்தையை மட்டும் வரவழைக்கவே முடியாது.

தோட்டத்தின் இடது பக்கத்தில் முருங்கை மற்றும் பெரிய மாமரத்திற்கு அடுத்து தரை அளவைவிட சற்று உயர்த்திப் போடப்பட்ட மொசைக்காலான சதுர வடிவிலான தாழ்வாரம் இருக்கும்.எங்கள் வீட்டிலேயே இதுதான் என்னுடைய Favourite spot. இதற்கு அடுத்து குட்டையான மாமரம்,வாழைமரம்,சுற்றிலும் ரோஜா,செம்பருத்தி, சிவப்பு மற்றும் மஞ்சள் கனகாம்பர செடிகளும் இருக்கும்.டிசம்பர் மாதத்தில் பூக்கக்கூடிய ஊதா,ரோஸ் மற்றும் வெண்மை நிறத்தில் ஊதா நிறக் கோடு உள்ள டிசம்பர் பூக்களும் எங்கள் தோட்டத்தில் இருந்தன.பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் உடனடியாக தோட்டத்திற்கு வந்து,செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவது எனக்குப் பிடித்தமான செயலாகும். விதைகளைப் போட்டு,அது துளிர்த்து பெரிய செடியாகும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியைப் பார்த்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என் கொள்ளுப்பாட்டி நண்பகல் 12 மணிக்கு தோட்டத்தில் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் பேய் பிடிக்கும் என்று சொல்வார்கள்.ஒரு நாள் நானும் என் உடன் பிறந்தவர்களும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும்.எங்கள் ஊரில் அப்போது நண்பகல் 12 மணிக்கு சங்கு ஊதுவார்கள். அது ஊர் முழுவதும் கேட்கும். ஒரு நாள் நாங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சங்கு சத்தம் கேட்டது. உடனே சிறுவர் சிறுமிகளான நாங்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டினுள் ஓட முயற்சித்தோம்.குட்டையான மாமர கிளையில் என் நீண்ட தலை முடி கொத்தாக சிக்கி என்னால் ஓட முடியவில்லை.என் சகோதரனால் முடியை விரைவாக எடுக்க முடியவில்லை.அதனால் அவன் முடியுடன் இருந்த சிறு கிளையை உடைத்து விட்டான்.முடியில் தொங்கிய சிறு கிளையுடன் உள்ளே ஓடி வந்தேன்.இன்று நினைத்துப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது.

எங்களுக்கு Entertainment spot -ஆக எங்கள் தோட்டம் தான் இருந்தது.அப்பா திருப்பதியிலிருந்து வாங்கி வந்த மரச்சொப்புகளை பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடுவது,சகோதர சகோதரிகளுடன் ஸ்கிப்பிங் ரோப்,கருங்கல்,நொண்டி விளையாட்டு, பாட்டியுடன் பல்லாங்குழி, தாயம்,பரமபதம் ஆகியன விளையாடியது இந்தத் தோட்டத்தில்தான்.கதை ப்புத்தகங்கள் படிப்பது, தோழிகளுடன் அரட்டை என அனைத்தும் தோட்டத்து தாழ்வாரத்தில்தான் நடக்கும்.பள்ளியில் அறிவியல் பாடத்திற்கான படங்களும் இங்குதான் உட்கார்ந்து வரைவேன். தோட்டத்தின் நடுவே சிறு சிறு டைல்ஸ் பதிக்கப்பட்ட நீண்ட தாழ்வாரம் தோட்டத்தின் முகப்பிலிருந்து மதில்சுவர் வரை இருக்கும்.இங்குதான் பாடப்புத்தகங்களை நடந்து கொண்டே படிப்பதுண்டு.மாலை நேரத்தில் மாமரங்களில் இருந்து இதமான காற்று வீசும்.எங்களுக்கு அன்றைய ஏ சி யாக இருந்தது இந்த மாமரங்கள்.அப்பா சில சமயங்களில் சாயந்திர வேளையில் சதுர தாழ்வாரத்தில் நாற்காலியில் உட்காருவார்.நாங்கள் அவரை சுற்றி உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்போம்.என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எங்கள் தோட்டத்திற்கு பெரும் பங்கு உள்ளது.

எங்கள் வீட்டில் அம்மாவிற்கு வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்த பணிப்பெண் அலமேலு அம்மா,எனக்கு Hair stylist ஆக இருந்தார்.அவர், என் நீண்ட கூந்தலில் விதவிதமாக அலங்கார பின்னல் போட்டு அழகு பார்த்தது தோட்டத்தில் இருக்கும் இந்த தாழ்வாரத்தில் தான். ஒவ்வொரு பண்டிகைக்கும் தோட்டத்தின் பங்கு இருக்கும்.பண்டிகை நாட்களில் மாமரத்து இலைகளை தோரணமாக வீட்டின் முகப்பில் கட்டி விடுவேன்.பூக்களையும், வாழை இலைகளையும் தோட்டத்திலிருந்து எடுத்து வருவேன்.அம்மா விழா நாட்களில் நாரில் பூ கட்டி, ஒற்றை ஜடையின் நடுவில் மல்லிபூச்சரத்தையும்,ஓரங்களில் கனகாம்பர பூச்சரங்களையும் தலையில் வைத்து விடுவார்கள்.பொங்கலுக்கு கதிரவனை கும்பிடுவதும், கரும்பு உட்கார்ந்து சாப்பிடுவதும் தோட்டத்தில்தான்.பொங்கலுக்கு வீட்டிற்கு வெளியே கோலங்கள் போடுவதற்கு முன்னால், தோட்டத்தில் உட்கார்ந்து கோல நோட்டில் கோலங்களை வரைந்து வைத்துக் கொள்வேன்.கார்த்திகை தீபத்திற்காக விளக்குகளை தயார் செய்வதும் இங்குதான். பிள்ளையார் சதுர்த்திக்கு கிணற்றடியில் பிள்ளையாரை வைத்து, அவர் தொப்பையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து வணங்கி,கிணற்றில் போட்டு விடுவோம்.ஆயுத பூஜைக்கு சைக்கிளுக்கும்,இதர வாகனங்களுக்கும் மற்றும் அப்பாவின் அலுவலக அறையிலும் அலங்கரிக்க, தோட்டத்தில் உட்கார்ந்து பல வண்ண காகிதங்களிலிருந்து முக்கோண வடிவங்களை வெட்டி எடுப்பேன்.எனக்கு அன்றைய Craft work இதுதான்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க டிரையல் இங்கு தான் எடுப்பேன்.நான் பட்டாசு வெடிக்க எல்லோரையும் போல ஆசைப்படுவேன்;ஆனால் பயப்படுவேன்.ஊதுவத்தி மூலம் பட்டாசை கொளுத்த முயலும் போது,அதில் நெருப்பு பற்றுவதற்குள் பயத்தால் ஓடி வந்து விடுவேன்.அண்டை வீட்டு சிறுவர்,சிறுமிகள் என்னை பார்த்து கிண்டல் செய்யக்கூடாது;நான் பயப்படாமல் கெத்தாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதற்காக தோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு டிரையல் பார்ப்பேன்.

என் வாழ்க்கையின் சில மறக்க முடியாத தருணங்களுடன் எங்கள் தோட்ட நினைவுகளும் பின்னிப் பிணைந்து இருக்கிறது. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அப்பா முதன்முதலாக கார் வாங்கியதை Surprise -ஆக சொன்னது,அக்கா குழந்தைக்கு வேடிக்கை காட்டி சோறு ஊட்டியது,என் மாமியார் என்னை பெண் பார்க்க வந்தபோது தங்கள் உறவினர்களை அறிமுகம் செய்து வைத்தது,என் கணவர் என்னை முதன்முதலாக புகைப்படம் எடுத்தது,என் குழந்தை பிறந்த பிறகு,வெயிலில் பத்து நாட்கள் சிறிது நேரம் வைத்திருந்தது,அவள் வளர்ந்த உடன் பொம்மைகளுடன் வெகு நேரம் விளையாடிக் கொண்டிருந்தது என அத்தனையும் இங்கு தான் நடந்தது.இப்படி வாழையடி வாழையாக எங்கள் தோட்ட நினைவுகளும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கிடைக்கும் என்று இருந்தபோது மனதில் இடி விழுந்தது போல, வீடு விற்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு விற்கப்பட்டு விட்டது.

எங்கள் வீட்டை வாங்கியவர் தோட்டத்தில் மட்டும் எந்த வித மாறுதலும் செய்யாமல் அப்படியே வைத்திருந்தார்.நான் எங்கள் ஊருக்கு வரும்போது, முடிந்த போது பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று எங்கள் தோட்டத்தை பார்த்துவிட்டு வருவேன்.இப்படியே நாட்கள் உருண்டோடின.எங்கள் தோட்டத்தை பார்த்து சில காலங்களாயின.எங்கள் ஊருக்கு வந்தாலும் விழாக்களில் கலந்து கொண்டு உடனடியாக கிளம்பி விடும்படியான சூழ்நிலை இருந்து கொண்டிருந்தது. அன்றும் அப்படித்தான்; ஒரு விசேஷத்திற்காக ஊருக்கு வந்தேன்.இன்று எப்படியும் தோட்டத்தை பார்த்துவிட்டுதான் வரணும் என்ற திட்டமிட்டு,பக்கத்து வீட்டுக்கு மாடிக்குச் சென்று நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.வீட்டை வாங்கியவர் தோட்டத்தை இடித்து அதன் விளிம்பு வரை கட்டிடத்தை விரிவுபடுத்தி விட்டிருந்தார்.கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே படியில் இறங்கி வந்தேன்.

எங்கள் தோட்டத்தை என்னால் நேரில் பார்க்க முடியாவிட்டால் என்ன,என் மனக்கண்ணால் எப்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்

.ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் என் மனதில் ‘பசுமரத்தாணி போல’ எங்கள் தோட்டத்து நினைவுகள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன.