தொடர்கள்
விளையாட்டு
இந்தியாவின் பெருமை குகேஷ்-தில்லைக்கரசிசம்பத்

20240325183216403.jpg
கனடாவில் நடைபெற்ற FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் டி குகேஷ் 17 வயதில் வென்று உலக சாதனை படைத்துள்ளார். குகேஷ் இந்த பட்டத்தை வென்றதன் மூலம் இந்த வருட இறுதியில் நடைப்பெறும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் கனடா டொரன்ட்டோவில் ஏப்ரல் 3 முதல் நடைப்பெற்று வந்தது. இப்போட்டிகளில் 8 வீரர்கள் 8 வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

இதில் ஐவர் இந்தியர்கள். 3வது சுற்றில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதல் இடம் வகித்தாலும் அவருக்கு மிக நெருக்கத்தில் 8 புள்ளிகளுடன் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சி, காருனா என மூவர் குகேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இருந்தாலும் 14 வது சுற்றில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுடனான குகேஷின் ஆட்டம் டிராவில் முடிந்ததை அடுத்து இருவருக்கு தலா 1/2 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனால் குகேஷ் 9 புள்ளிகள் பெற்ற நிலைமையில் 8 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த மற்ற இரு வீரர்களான நெபோம்நியாச்சி- பேபியானோ காருனா ஆகியோரின் ஆட்டமும் டிராவில் முடிவுற்றதில் அவர்களும் தலா 1/2 புள்ளிகள் பெற்று 8.5 புள்ளிகளே பெற முடிந்தது. இதை தொடர்ந்து 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தை வென்ற குகேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

குகேஷ் தனது 17 வயதிலேயே ஃபிடே சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ளார்.

குகேஷ்-ஹிகாரு இறுதி போட்டியை நேரலையில் கவனித்த உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் “குகேஷின் 10 வது நகர்வு (cxd4 )சரியில்லை . எனக்கு பிடிக்காத நகர்வு இது “ என்று கூறியவர் தொடர்ந்து குகேஷின் 11 வது (b4 )நகர்விலேயே “ இது என்ன இப்படி ஒரு அழகான, அருமையான நகர்வு.! ? நான் சத்தியமாக எதிர்பார்க்கவேயில்லை. இப்படி ஒரு நகர்வை என்னால் சிந்திருக்கக்கூட முடியாது. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற நகர்வை நான் இதுவரையில் எங்கேயும் கண்டதில்லை!” என ஆச்சரியத்தில் வியந்தார்.

எதிர் போட்டியாளர் ஹிகாருவும் குகேஷின் அதே 11வது நகர்வை மிக பிரமாதமான ஒன்று எனவும் அதன் பிறகான ஆட்டம் தனக்கு இனி சாதகமாக இருக்காது என்பதை அக்கணமே உணர்ந்ததாக கூறி குகேஷை பாராட்டினார்.

குகேஷ் க்ராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற உலகின் மூன்றாவது இளையவீரர் , செஸ் ரேட்டிங் 2700 வாங்கிய உலகின் மூன்றாவது வீரர், 2750 ரேட்டிங் வாங்கிய உலகின் முதல் இளம்வீரர் என பல பெருமைகளுக்கு உரியவர். குகேஷ் சென்னையில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்.

ஆந்திராவின் கோதாவரி டெல்டா பகுதியை பூர்வீகமாக கொண்ட குகேஷின் தந்தை மருத்துவர் ரஜினிகாந்த் தாயார் பத்மா நுண்ணுயிரியலாளர் (microbiologist) இருவரும் சிறு வயதிலிருந்தே குகேஷ் வெற்றிகள் பல பெற பக்கத் துணையாக நின்று வருகிறார்கள்.
அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளியில் படித்த குகேஷின் செஸ் திறமையை பள்ளியிலேயே கண்டறிந்த அவரது பள்ளிப்பயிற்சியாளர் குகேஷை சர்வதேச அளவில் தயாராக உதவினார். பின்னர் 2020 ல் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் பயிற்சி பள்ளியில் குகேஷ் சேர்ந்ததிலிருந்தே அவருக்கு ஏறுமுகம்தான். இதில் தமிழக அரசின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவில் நடக்க இருந்த 'ஒலிம்பியாட் 2022' போட்டிகள் தடைப்பட்ட போது, அதனைத் தமிழ்நாடு அரசு தாங்கள் நடத்துவோம் என பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியிருந்தது. அப்போட்டிகளில் தான் குகேஷ் தங்கம் வென்று முதன் முதலாக உலகத்தின் கவனத்தை பெற்றார்.

தொடர்ந்து குகேஷின் திறமையை கண்கூடாக கண்டு தமிழகஅரசு பல நிதி சார்ந்த உதவிகளை ஊக்குவிப்புகளாக செய்தது. முக்கியமாக கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டியில் குகேஷ் கலந்து கொண்டார்.

அப்போட்டியில் குகேஷ் தோல்வியடைந்த நிலையில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்து வென்றால் மட்டுமே கனடாவில் நடைப்பெறும் இந்த ஃபிடே சாம்பியன் போட்டியில் கலந்துக்கொள்ளும் தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் குகேஷ் இருந்தார். இந்த காரணத்திற்காக தமிழக அரசு சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் Chennai Grandmaster tournament என்ற போட்டியை ஏற்பாடு செய்தது.

ஆம்.. குகேஷுக்காக மட்டுமே இப்போட்டிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இங்கிலாந்திலிருந்து 12 மணி நேரம் பிரயாணம் செய்து சென்னைக்கு வந்த குகேஷ் நேராக இந்த சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்றார். அதன் மூலம் அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு புள்ளிகளை பெற்றார்.

தற்போது கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதால் உலக செஸ்சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். இளம் செஸ் வீரர் குகேஷின் எதிர்காலத்திற்காக அவருடன் நின்ற தமிழக அரசின் இச்செயல் மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வருட இறுதியில் நடைப்பெறவிருக்கும் போட்டியில் குகேஷ் நடப்பு செஸ் உலக சாம்பியனான சீனாவின் 31 வயதான டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

குகேஷ் உலக செஸ்சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற நமது மனமார்ந்த வாழ்த்துகள்.