தொடர்கள்
கவர் ஸ்டோரி
திருச்சூர் பூரம் ! கொள்ளை அழகு - ராம்

20240327090934282.jpg

பூரம் விழா என்பது வருடந்தோறும் கேரளாவில் நடக்கும் விழா. ஒவ்வொரு ஊரிலும் பூரம் விழா எடுப்பதுண்டு.

இது முக்கியமாக துர்கை மற்றும் காளி கோவில்களில் நடக்கும் விழா. கோடை அறுவடை முடிந்தவுடன் பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் அதாவது கொல்லம் மாவட்டங்களில் பூரம் விழா நடைபெறுகிறது.

20240327091643317.jpeg

திருச்சூர் பூரத்தை பொறுத்தவரையில் வடக்குநாதன் கோவிலில் நடைபெறும் பூரம் தான் கேரளாவில் மிகப் பிரசித்தி. பத்து லட்சம் பேருக்கு மேல் கூடும் திருச்சூர் பூரம் பார்க்கும் பாக்கியம் கிடைப்பது பெரும்பேறு.

வடக்குநாதன் கோவில் சார்ப்பாக தேக்கினிகாடு மைதானத்தில் நடைபெறும் பூரம் விழா ஏழு நாட்கள் நடக்கும் மிகப் பெரும் விழா. ஆறாவது நாள் தான் கிளைமாக்ஸாக மக்கள் வெள்ளம் கூடும் முக்கிய நாள்.

பூரம் பற்றி பார்க்கும் முன் கொஞ்சம் வடக்கநாதன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

20240327091252784.jpeg

20240327091348868.jpeg

தென்னக கைலாயம் என்று சொல்லப்படும் வடக்குநாதன் கோவிலை ஸ்தாபித்தவர் பரசுராமர்.

சுருக்கமாக தல புராணம்.

பிரம்மானந்த புராணம் படி வருணனை நினைத்து பரசுராமர் வேண்டிக் கொண்டாராம். கடலிலிருந்து ஒரு நிலப்பரப்பை உருவாக்கி கொடுக்கும் படி. அப்படி உருவானது தான் கேரளா.

பின்னர் இந்த நிலப்பரப்பில் ஒரு கோவில் எழுப்ப ஆசைப் பட்டு வடக்கே கைலாய மலைக்கு சென்றார். பரசுராமரின் கோரிக்கைக்கு இணங்கி அங்கிருந்து குடும்பத்துடன் புறப்பட்ட சிவபெருமான் ஒரு இடத்தருகே வந்ததும் நின்று விட்டார். அந்த இடம் தான் திருச்சூர்.

தன் பரிவாரங்களுடன் உடனடியாக சிவபெருமான் மறைந்ததும் ஒரு மிகப் பெரிய ஒளியை கண்டார் பரசுராமர். அந்த இடத்தில் ஒரு அரச மரத்தடியில் பெரிய சிவலிங்கம் தோன்றியிருந்தது. அதையே வழிபட்டார் பரசுராமர் என்பது ஐதீகம்.

பின்னர் கேரளாவை ஆண்ட மன்னர்கள் சிவலிங்கத்தை இன்னொரு இடத்திற்கு மாற்றி கோவிலைக் கட்டியுள்ளனர்.

மலையாளத்தில் காவு என்றால் கோவில்.

20240327091510512.jpg

வடக்குநாதன் கோவிலுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. ஆதி சங்கரரின் பெற்றோர் இந்தக் கோவிலில் தான் 41 நாட்கள் விரதமிருந்து பிள்ளை வரம் வேண்டினர். சிவபெருமான் அவர்கள் கனவில் வந்து கேட்டது. நீண்ட ஆயுளுடன் ஒரு சராசரி மகன் வேண்டுமா அல்லது குறைந்த ஆயுளுடன் ஒரு ஆகச் சிறந்த மகன் வேண்டுமா ?? அவர்கள் கேட்ட படி கிடைத்தவர் தான் ஆதி சங்கரர்.

15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு தீராத நோய் உள்ளவர்கள் வந்தால் தீரும் என்ற அசையாத நம்பிக்கை இருக்கிறது.

இப்படிப்பட்ட வடக்குநாதன் கோவில் இருக்கும் திருச்சூர் பூரம் விழாவிற்கு முக்கிய காரணம் சாக்தன் தம்புரான்.

20240327091538901.jpg

ராம வர்மா குஞ்சிப்பிள்ளை தம்புரான் தான் சாக்தன் தம்புரான். 17ம் நூற்றாண்டில் கொச்சியை ஆண்ட மன்னர்.

அவர் தான் திருப்பனித்துராவிலிருந்து திருச்சூருக்கு தலைநகரை மாற்றினார். அவருக்கு வடக்குநாதன் கோவிலில் ஏராள ஈடுபாடு, பக்தி.

தேக்கனிக்காடு மைதானத்தை கோவிலுக்காக அமைத்தவரும் அவரே.

அந்தக் காலத்தில் ஆராட்டுப்புழா பூரம் விழா தான் பிரதானமாக இருந்தது.

பூரம் விழாவில் மற்ற சின்ன கோவில்கள் ஊர்வலமாக வந்து கலந்து கொள்வது முறை. ஆராட்டுப்புழாவில் ஒரு வருடம் இப்படி செல்கையில் நேரமாகி விட்டதால் ஆராட்டுப் புழா பூரம் விழாவில் பங்கு கொள்ள இயலாது என்று சின்ன கோவில்களை தடுத்து விட்டனர். அவர்கள் சாக்தன் தம்புரானிடம் போய் முறையிட அவர் தான் உங்கள் கோவில் தெய்வங்களை வடக்கு நாதன் கோவிலுக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லி திருச்சூர் பூரம் விழாவிற்கு வித்திட்டவர். துவங்கி வைத்தவர் அவர் தான்.

சாக்தன் தம்புரான் பூரம் விழாவிற்கு வரும் கோவில்களை இரண்டு குழுக்களாக பிரித்தார்.

இன்றைய தேதிக்கு இப்படி இரண்டு குழுக்களாக கோவில்கள் பூரம் விழாவில் கலந்து கொள்கின்றன

மேற்கு குழுவில்

திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்,

லலூர் பகவதி கோவில்

அய்யந்தோல் கார்த்தியாயினி கோவில்

நெத்திலக்காவு பகவதி கோவில்களும்

கிழக்கு குழுவில்

பரமக்காவு பகவதி

பூக்கட்டிக்காரா காரமுக்கு பகவதி

செம்புக்காவு பகவதி

சூரக்கூட்டுகாவு பகவதி

பனமுக்கம்பள்ளி சாஸ்தா

கனிமங்கலம் சாஸ்தா கோவில்களும்

பூரம் விழாவில் இரண்டு குழுக்களாக பங்கு கொள்கின்றன.

கொடியேற்றுவதிலிருந்து துவங்குகிறது பூரம் விழா.

பூரம் விழாவிலிருந்து ஏழு நாட்கள் முன்னதாக நடைபெறும் கொடியேற்று விழா.

பூர விளம்பரம் என்பது நெத்திலிக்காவு பகவதியை சுமந்து வரும் யானை தெற்கு வாசல் கதவை நெட்டித் தள்ளி பூரம் விழா துவங்குவதை அறிவுறுத்துவது.

இது தான் பூர விளம்பரம்

இந்த ஒரு காட்சியே காணக் கண் கோடி வேண்டும்.

கொடியேற்றிய நான்காவது நான் சாம்பிளுக்கு வெடி வழிபாடு நடைபெறும்.

திருவம்பாடி பரமேற்காவு பகவதி கோவில்கள் நடத்தும் இந்த வெடி வழிபாடு நடத்த ஏகக் கெடுபிடி இடைப்பட்ட காலத்தில் இருந்த போதும் 2017ல் இருந்து தடை அகற்றப்பட்டது.

பூரம் விழாவில் கலந்து கொள்ளப் போகும் யானைகளுக்கு யானைப்பட்டம் தயாரித்து ஐந்தாவது நாள் அதை காட்சிக்கு வைக்கிறார்கள்.

திருவம்பாடி மற்றும் பரமேற்காவு பகவதி கோவில் தேவஸ்தானங்கள் இதைக் காட்சிக்கு வைப்பதை பார்ப்பதற்கே ஒரு பெருங்கூட்டம் வரும்.

பூரம் தினம் அன்று கனிமங்கலம் சாஸ்தா கோவிலில் எழுநெல்லிப்பு என்று சொல்லப்படும் சுப்ரபாதத்தில் துவங்குகிறது விழா.

பூரம் விழாவின் முக்கிய அம்சம் மடத்தில் வரவு என்று சொல்லப்படும் பஞ்சவாத்தியங்களின் முழக்கம்.

(மடத்தில் வரவு வீடியோ)

40 பேர் கொண்ட ஒரு இசை வாத்தியக் குழு திமிலா, மத்தளம், டிரம்பட், சிம்பல், மற்றும் எடுக்கா என்ற வாத்தியங்களைக் கொண்டு வாசிக்கும் இசை திருச்சூர் மொத்தமும் எதிரொலிக்கும்.

அதே போல வடக்குநாதன் கோவிலுக்குள்ளே துவங்கும் இளஞ்சித்திரை மேளம் மேளம், டிரம்பட், நாதஸ்வரம், சிம்பல் கொண்டு வாசிக்கப்படுவது. இதுவும் ஏக பிரசித்தி.

செவிக்குணவு கொடுத்தால் போதுமா.... விழிகளுக்கு ???

சுமார் ஐம்பது யானைகள் நெற்றியில் யானைப்பட்டம் கட்டிக் கொண்டு, மேலே மயிலறாகல் செய்யப்பட்ட சாமரங்கள், மற்றும் அலங்கார பூஷிதைகளாக கலந்து கொள்ளும் அந்த மெகா கிளைமாக்ஸ் தான் பூரத்தின் மிகப் பெரிய ஹைலைட்.

இந்த இடத்தில் கேரள கோவில் யானைகளைப் பற்றி சொல்ல வேண்டும். நம்மூரில் சினிமா ஹீரோக்களுக்கு இருப்பது போல கேரளாவில் கோவில் யானைகளுக்கு ஏராள விசிறிகள் உண்டு. ஒரு சில யானைகள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கின்றன. கேரளாவில் குருவாயூர் கேசவன் யானை அனைவருக்கும் பரிச்சயாமான பெயர் இல்லையா அது போல பல ஊர்களில் உள்ள யானைகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவைகள் யாவையும் திருச்சூர் பூரத்தில் கலந்து கொள்வதை பார்ப்பதற்காகவே மக்கள் அலைமோதுவார்கள்.

சின்ன சாம்பிளுக்கு....

புதுப்பள்ளி கேசவன்

20240327092351533.jpeg

செறுப்புளசேரி ராஜசேகரன்...

20240327092438447.jpeg

அந்தக் காட்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. படங்கள் தான் ஓரளவு அந்தக் காட்சிகளை உங்களுக்கு கடத்தும்.

20240327092535562.jpg

கடைசி நாள் வெடி வழிபாடு தான் திருச்சூர் பூரத்தின் முக்கிய அம்சம்.

கொசுறு செய்தி.

20240327094228392.jpeg

இந்த வருடம் பூரம் விழாவில் இரவு நேரத்தில் அத்தனை யானைகளும் ராமர் படத்தை தீமாக வைத்துக் கொண்டு கலந்து கொள்ள உள்ளூர் அரசு டென்ஷனாகி விட்டதாம்.

இதனால் மக்களை அங்குமிங்கும் நகர விடாமல் உள்ளூர் போலீஸ் தொந்தரவு கொடுக்க கடைசியில் அதிகாலை இரண்டு மணிக்கு சுரேஷ் கோபியை அழைத்து அவர் வந்து பஞ்சாயத்து செய்து, மற்ற கட்சிக் காரர்களும் அங்கே ஆஜராகி நீண்ட விவாதததிற்குப் பின் அதிகாலை மூன்று மணிக்கு நடக்க வேண்டிய வாணவேடிக்கைகள் ஏழு மணி காலையில் நடந்திருக்கிறது.

மக்கள் அதிகாலை வாணவேடிக்கைகள் பார்க்க நன்றாக இருக்கும் விடிந்ததும் நடத்தில் வெறும் சத்தம் மட்டும் தான் கேட்டது பார்க்க ஒன்றுமே இல்லை என்று தலையில் அடித்துக் கொண்டு கலைந்து சென்றார்களாம்.

இந்த கட்சிகாரர்களுக்கு ஶ்ரீ ராமர் பொதுவானவர் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமில்லாதவர் என்று யார் புரிய வைப்பது.

இந்த பகல் வெடிக்கட்டு என்று சொல்லப்படும் வாணவேடிக்கைகள் தான் பூரம் விழாவின் இறுதி நாள் அதாவது ஏழாம் நாள் நடைபெறும் நிகழ்ச்சி.

பகல் பூரம் என்று சொல்லப்படும் இந்த வைபவத்தில் உபச்சாரம் சொல்லி பிரியல் என்று நடக்கிறது. சுவராஜ் ரவுண்ட் என்ற இடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் மற்றும் பரமேற்காவு பகவதி கோவில் மூர்த்திகள் தத்தம் இடத்திற்கு மீண்டும் செல்வார்கள்.

இந்த நாள் இந்த நிகழ்வு தான் இந்த வருடம் அரசியலாக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் அதிருப்தியாக கலைந்து செல்லும்படி ஆகியிருக்கிறது.

20240327094257519.jpeg

திருச்சூர் பூரத்தின் பாசிடிவ் பக்கம்.

வடக்குநாதன் கோவிலில் நடக்கும் இந்த பூரம் விழா இந்துப் பண்டிகையாக இருந்தாலும் மதச் சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டு.

இஸ்லாமியர்கள் தான் பந்தல் கட்டுகிறார்கள். குடைகளுக்கும், அலங்காரத்திற்கும் கிறிஸ்துவர்கள் பங்களிக்கிறார்கள்.

கேரளாவின் மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு திருச்சூர் பூரம்.

இன்னும் சொல்லப் போனால் பண்டைய காலம் தொட்டு நம் நாட்டில் இது போன்ற விழாக்களும், தேர்திருவிழாவும், ஒவ்வொரு பண்டிகைக்குமான கொண்டாட்டங்களுக்கும் அடிநாதமாய் விளங்குவது சமுதாயத்தில் அத்தனை பேரையும் ஒன்றிணைப்பது தான்.

இறைவன் எல்லோருக்குமானவன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேரில் வணங்கினாலும் இது போன்ற பண்டிகைகளில், திருவிழாக்களில் கூட்டங்களில் நாம் ஒவ்வொருவரும் நம் சுய அடையாளத்தை தொலைத்து இறையருளால் ஒன்றிணைவது தான் பண்டிகைகளின் திருவிழாக்களின் நோக்கம்.

அடுத்த வருஷம் பூரத்தில் காணாம் !!!

பி.கு:

20240327093417414.jpg

ஒரு உப செய்தியாக ஆஸ்கர் அவார்டு வென்ற ஒலிப் பொறியாளர் ரசூல் பூக்குட்டி இந்த திருச்சூர் பூரத்தில் வரும் இசைக்காக ஒலிக்காக மட்டுமே தி சவுண்ட் ஸ்டோரி என்ற ஒரு திரைப்படமே எடுத்திருக்கிறார். திருச்சூர் பூரத்தில் வரும் ஒலியை பதிவு செய்வது தான் இந்த படத்தின் முக்கிய அம்சம். ஒரு சின்ன சாம்பிளுக்கு அந்த படத்திலிருந்து பூரம் பற்றிய பாடல் .