தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 1 -பித்தன் வெங்கட்ராஜ்

20240221163331451.jpg

சங்க இலக்கியங்களின் இனிமையைக் கூறும் புதிய தொடர் இது. அறிவியலும், இலக்கியமும் சங்கமிக்கும் இந்த தொடரில் உங்களுக்கு தமிழ் அமுதை அளவின்றி பரிமாற வருகிறார் பொறியாளர் மற்றும் கவிஞர் .பித்தன் வெங்கட் ராஜ் .

20240221163402324.jpg

“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”

என்று வணங்கினார் திருமூலர் பெருமான். எந்தவொரு நற்செயலையும் தொடங்கும்போது யானைமுகக் கடவுளை வணங்கித் தொடங்குவர். யானைமுகனான விநாயகரின் சிறப்பைப் பலர் அறிந்திருந்தாலும் யானையின் சிறப்புகளை அறிந்தவர் வெகுசிலரே.

யானையும் கடலும் பார்க்கப் பார்க்கச் சலிக்கவே சலிக்காது என்பர். யானையையும் கடலையும் ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்திடமுடியாது. சுற்றி சுற்றிப் பார்க்கவேண்டும் இரண்டையும் !

யானைகள் கொஞ்சம் பெரிய பட்டாம்பூச்சிகள்.

அவை காதுகளை அசைக்கும் தருணம் அத்தனை அழகானது. அதேசமயம், யானைகள் மிகவும் வலிமையான விலங்குகள். அவற்றால் மனிதரைவிட வேகமாக ஓடமுடியும். போலவே, யானைகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். அவற்றின் நினைவுத்திறன் மற்றும் அறிவுக்கூர்மை மிகவும் வியப்புக்குரியன. அண்மைய ‘தெப்பக்காடு யானைகள் முகாமில் விகடகவி’ தொடரில்கூட திரு.ஒப்பிலி அவர்கள் யானைகளின் அறிவுக்கூர்மை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

20240221163610871.jpg

யானைகள் பற்றிய இன்னொரு வியப்பான தகவல் என்னவென்றால், அவற்றால் 1 முதல் 20 ஹெர்ட்ஸ் அளவிலான Infra Sonic ஒலி அலைகளை உண்டாக்கவும் உணரவும் முடியும் என்பதுதான். யானைகள் தம் கண்களுக்கிடையிலுள்ள நெற்றிப்பகுதியிலிருந்து இத்தகைய ஒலி அலைகளை உண்டாக்குகின்றன என்கின்றனர் அறிஞர்கள். 20ஹெர்ட்ஸ்க்கும் குறைவாக உள்ளது “குறையொலி” ஆகும். இதனை மனிதர்களால் கேட்கமுடியாது.

இந்த நுட்பமான ஒலி அலைகளின் மூலமும் யானைகள் தங்களுக்குள் தகவல் தொடர்பு கொள்கின்றன. யானைகள் கூட்டமாக இருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பிரிந்துசென்றும், மீண்டும் ஒரே இடத்தில் ஒன்றுசேர இவ்வகையிலான தகவல்தொடர்பையே மேற்கொள்கின்றன என்கின்றனர் அறிஞர்கள். சுமார் 10 கி.மீ சுற்றெல்லைக்குள் இருந்து வரும் இந்த Infra Sonic ஒலி அலைகளை யானைகளால் உணரமுடியுமாம்.

இவை நிகழ்கால நவீன கண்டுபிடிப்புகள்.

இது ஒரு புறமிருக்க, சங்கம் மருவிய காலமான கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்த புல்லங்காடனார் என்னும் புலவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை என்னும் நூலில் பின்வருமாறு பாடுகிறார்.

இரசங்கொண் டின்றே னிரைக்குங் குரலைப்

பிரசை யிரும்பிடி பேணி வரூஉ

முரசருவி யார்க்கு மலைநாடற் கென்றோள்

நிரைய மெனக் கிடந்த வாறு. ( கைந்நிலை)

2024022116365517.jpg

அதாவது, ‘தேன்குடித்த தேனீக்கள் எழுப்பும் ஒலியைக் கேட்டுத் தேடிவரும் கரிய பெண்யானைகளைக் கொண்டதும், முரசுபோன்று ஒலிக்கும் அருவிகளைக் கொண்டதுமான மலையின் தலைவனுக்கு (மலைநாடன்) என் தோள் இப்போது நரகமாகிவிட்டது’ என்கிறாள் தலைவி.

பொதுவாக, யானைக்குப் பிடிக்காத ஓர் உயிரினம் ‘தேனீ’ என்பர். யானையை விரட்டுவதற்காகத் தேனீக்களை வளர்ப்பதுகூட வழக்கத்தில் உள்ளது. யானைகள் மனிதக்குடியிருப்புகளுக்குள் நுழைந்து சேதம் இழைக்காமலிருக்க தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவியைக்கூடக் கரூரைச் சேர்ந்த அபிநவநாகராஜன் என்னும் ஒரு மாணவர் கண்டுபிடித்தார்.

ஆயினும் நம் புலவர் தேனீக்களின் ஒலிகேட்டுப் பெண்யானைகள் தேடிவரும் என்று கூறியிருப்பது வியப்புக்குக்குரியது. தேனீக்களின் வயிற்றுப்பகுதியிலிருந்து உண்டாகும் மிக மெல்லிய ஒலியைக்கூட யானைகளால் உணரமுடியும் என்பதை அப்போதே அறிந்திருக்கிறார் புலவர்.

20240221163731185.jpg

அருவியில் விழும் நீரின் ஓசை முரசு கொட்டுவதைப் போல் இருக்கிறது என்று கூறும் அழகியலும், ‘என் தோள்கள் தலைவனுக்கு நரகம்போல் தெரிகிறது’ என்று புலம்பும் தலைவியின் சோகமும் ஒருபக்கம் இருந்தாலும், யானையின் இந்த அதீத ஒலியுணர் திறனை ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னரே, எந்தவொரு நவீன அறிவியல் உபகரணங்களும் இல்லாத காலத்திலேயே தம் பாடலில் குறிப்பிட்டிருக்கும் தமிழ்ப்புலவர் புல்லங்காடனார்க்கு ஒரு தமிழ் முத்தம் தந்தோம்.

அவர்க்கும் நமக்கும் எவர்க்கும் தேனாய் இனிக்கும் நம் தமிழுக்கு இத்தொடரில் இது முதல் முத்தம்!

தொடரும்…