தொடர்கள்
ஆன்மீகம்
ஆரூர் ஆழித்தேரோட்ட அழகு!! - ஆரூர் சுந்தரசேகர்.

The beauty of Aaroor Azhitherottam!!

"திருவாரூர் தேரழகு" என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
ஆரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என சிறப்பு பெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த தேர் ஓடி கொண்டிருப்பதாக வரலாறுகள் தெரிவிக்கின்றது. அந்த காலத்தில் ஆரூர் தேரை இழுப்பதற்கு 12000 நபர்கள் தேவைப்பட்டார்கள் என்பதற்கு குறிப்புகள் உள்ளன.
ஆழித்தேரோட்ட திருவிழாவைத் திருநாவுக்கரசு நாயனாரும் , திருஞானசம்பந்த நாயனாரும் முன்னின்று நடத்தினார்கள் என்றும், அதனைக் காணவந்த சுந்தரமூர்த்தி நாயனார் மிகவும் பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.
ஆரூர் = ஆர்+ஊர், ஆர்-ஆத்தி அத்திமரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் ஆரூர் என்ற பெயரானது. தேவார பதிகங்களில் இந்த ஊரை ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 'திரு' சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், சப்த விடங்க தலங்களில் தலைமையானதாகும். இந்த கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12 தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதி உலா வரும் காட்சிகள் முக்கியமானது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 21ஆம் தேதி அன்று தமிழ்நாடு மற்றுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து, திருவாரூர் கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய மாட வீதிகளைச் சுற்றி வரும் போது, பக்தர்களுடன் ஆரூரா, தியாகேசா மற்றும் தேவாரம் கீர்த்தனைகள் மற்றும் அறிஞர்களால் வேதங்கள் ஓதப்பட்டது. சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ஆரூர் ஆழித்தேரோட்டச் சிறப்புகள்:
பாற்கடலில் உருவான தேவதாருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் போன்ற தேர் என்பதால் ஆழித் தேர் எனப் பெயர் பெற்றது. அசுரர்களுடன் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெறுவதற்கு முசுகுந்த மன்னன் உதவினார். அவருக்குப் பரிசாக ஏழு விதமான அதிவிசேஷமான மூர்த்தங்களை வழங்கினான் இந்திரன். இந்த மூர்த்தங்களைக் கொண்டு செல்வதற்காக தேவலோகத்தைச் சேர்ந்த ஸ்பதியான மயன் என்பவனால் உருவாக்கப்பட்டது தான் ஆழித்தேர் என்கிறது புராணங்கள்.
ஆழித்தேரோட்டம் பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரத்திலும், சைவ மகான்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூரில் ஆழி 'தேர்' திருவிழா பற்றிய குறிப்புகள் தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள தஞ்சாவூர் மராத்திய ஆட்சியாளர் ஷாஹாஜியின் (கி.பி. 1684-1712 ) மராத்தி மொழி எழுத்துக்களில் காணப்படுகின்றன.
திருவாரூர் தேர்த் திருவிழா கி.பி.1748 முதல் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடர்ந்து நடைபெற்றதற்கான ஆவணச் சான்றுகள் நூலகத்தில் உள்ளன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை பெற்ற இந்த ஆழித்தேர் என அழைக்கப்படும், இத்தேரின் ஆரம்ப உயரம் 30 அடிகள், பலவிதமாய் அலங்கரிக்கப்பட்டவுடன் தேரின் மொத்த உயரம் 96 அடிகளாகிவிடும். தியாகராஜர் கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளின் சிலைகளையும் இந்த ஆழித்தேரில் சிற்பமாகக் காணலாம். இதன் எடை சுமார் 400 டன் வரை இருக்கும். ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த தேரில் 64 தூண்களும் 64 கலைகளையும், நான்கு குதிரைகள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. இதன் கலசத்தில் இரண்டு வெள்ளி குடைகள் அமைக்கப்பட்டிருக்கும். தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதைத் திருவாரூரைத் தவிர வேறு எங்கும் காண முடியாது.
இந்த தேரினை இழுப்பதற்கு ஒன்றரை டன் எடையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. இந்த வடம் என்ற கயிறுகளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய் மட்டைகளிலிருந்து உருவாக்கப்படுகின்றது.


பொதுமக்களால் மட்டுமே இழுக்கப்பட்டு வந்த தேர் தற்போது நவீனத் தொழில்நுட்ப உதவியால் தேரின் இருபக்கமும் நான்கு - ஒன்பதடி விட்டம் கொண்ட இரும்பு சக்கரங்கள் ஹைட்ராலிக் பிரேக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தேரை திருப்புவதற்கும் தேரினை நிறுத்துவதற்கும் புளிய மரத்தாலான 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரைப் வடம் பிடித்து இழுக்க, பக்தர்களுக்கு உதவும் வகையில் பின்பக்கத்தில் புல்டோஸர் இயந்திரம் மூலம் தேர் தள்ளப்பட்டு அதன் நிலைக்கு குறுகிய நேரத்தில் வந்து அடைகிறது.

"ஆரூரா தியாகேசா"

மேலும் யூடியூபில் தேடியதில் இந்த வீடியோ துல்லியமாக தேரோட்டத்தை படம் காட்டியது.

https://youtu.be/hFV7Zirsq9Q?si=F_JKl6ZM7pYYslnX