தொடர்கள்
ஆன்மீகம்
ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் ? தவக்கால சிந்தனை - மரியா சிவானந்தம்

20240222170057193.jpg

கிறிஸ்துவர்களின் தவக்காலம் எனப்படும் "லென்ட் " நாட்கள் வரும் வாரத்தில் முடிவடைகிறது .

குருத்து ஞாயிறு தொடங்கி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு வரை ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக இந்த தவக்காலம் அனுசரிக்கப்ப்டுகிறது .

இக்காலங்களில் , இயேசு கிறிஸ்து அனுபவித்த சிலுவை மரணத்தையும் ,உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து தியானிப்பது வழக்கம். பைபிளில் எழுதப்பட்டுள்ளபடி அந்த சிலுவை மரணத்தையும் அதன் வழியாக மனுக்குலம் பெற்றுக் கொண்ட மீட்பையும் மீண்டும் ஒருமுறை மனதில் சிந்திப்பதுண்டு .

மிகச் சிறப்பாக இயேசுவின் மரணத்தருவாயில் ,சிலுவையில் தொங்கியபடி அவர் உச்சரித்த ஏழு வாக்கியங்களை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்கிறோம் .

முதல் வாக்கியம் :

இயேசு சிலுவையில் அறையப்பட்டு , மூன்று ஆணிகளில் தொங்கிக் கொண்டு இருக்கையில் அவரைக் சுற்றி நின்று கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்த யூத மக்களைப் பார்த்து கூறியது

“தந்தையே , இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்கிறது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை ” (லூக்கா 23:34)

உன்னதமான மன்னிப்பின் மேன்மையை உணர்த்தும் மொழி இது

இரண்டாம் வாக்கியம்

இயேசுவை சிலுவையில் அறைந்த போது இரண்டு பக்கங்களிலும் இரண்டு கள்வர்களை அறைந்தனர் . அதில் ஒருவன் இயேசுவைப் பரிகாசம் செய்கையில் , மற்றொரு கள்வன் ," நாம் நாம் செய்த குற்றங்களுக்காக சிலுவையில் இருக்கிறோம். குற்றமற்ற இவரை நீ கேலி செய்யாதே " என்றான்

அதற்கு இயேசு

“ நீர் இன்று என்னோடு வான் வீட்டில் இருப்பீர் என்று உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ” (லூக்கா 23:43

இறுதியில் அந்த கள்வன் மோட்சத்தையும் திருடி விட்டான் என்று சொல்வார்கள்

மூன்றாவது வாக்கியம்

சிலுவையின் அடியில் இயேசுவின் தாய் மரியாள் அழுது கொண்டு இருக்க, அவரை விட்டு அகலாமல் இருந்த அன்புக்குரிய சீடர் யோவான் எனப்படும் அருளப்பரிடம் மரியாளை ஒப்படைத்து சொன்ன வாக்கியம் இது

3 “இயேசு தம்முடைய தாயை நோக்கி: அம்மா , இவரே , உன் மகன் என்றார். பின்பு தம் அன்புச் சீடரை நோக்கி:இவரே , உம் தாய் என்றார்” (யோவான் 19:26-27).

இறைவனே என்றாலும் அன்னையின் பாசத்துக்கு கட்டுப்பட்டவர் என்பதை சொல்லும் வாக்கியம் இது

நான்காம் வாக்கியம்

4 “ஏலீ! ஏலீ! லெமா சபக்தானி' என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).

என் இறைவா ,என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்ற பொருள்படும் இந்த நான்காம் வாக்கியம் ,இயேசு உடலும் ,உணர்வும் கொண்ட மனிதனாகவும் வாழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு

ஐந்தாம் வாக்கியம்

“தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)

வருத்தும் நன்பகல் வெயிலும் , இரவு முதல் அடைந்த துன்பங்களும் , பெற்ற கசை அடிகளும் யேசுவைக் களைப்புற செய்தன , அவர் நா உலர்ந்து தண்ணீருக்காக தவித்த போது சொன்ன வாக்கியம் இது .

“என்னை வேண்டி தேடும் ஆன்மாக்களுக்காக நான் தாகமாக இருக்கிறேன்” என்னும் உட் பொருள் கொண்ட வாக்கியம் இது .

ஆறாம் வாக்கியம்

“எல்லாம் நிறைவேறிற்று ” (யோவான் 19:30)

யூத படை வீரன் ஒருவன் புளித்த திராட்சை ரசத்தை கடற்பஞ்சில் தோய்த்து ஒரு கம்பில் கட்டி அதை இயேசுவின் தாகத்தை தணிக்க முயன்றான் . இயேசு அதை குடிக்க விரும்பவில்லை .

தான் இந்த பூமிக்கு பிறப்பெடுத்த நோக்கம் நிறைவேறியது என்று சொன்னதே இந்த ஆறாம் வாக்கியம்

ஏழாம் வாக்கியம்

“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) என்று இறுதி வாக்கியமாக கூறி தன் உயிரைத் துறந்தார் .

மரணத் தருவாயில் ஒருவர் உரைக்கும் சொற்கள் சக்தி வாய்ந்தவை, உயிரோட்டம் மிக்கவை . அவ்வகையில் இயேசு உரைத்த ஏழு வாக்கியங்களும் மகத்துவம் மிக்கவை . மனுகுலத்துக்கு வாழ்வையும் ,வழியையும் அளிக்க வல்லமை கொண்ட சொற்கள் .

அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்கள்