தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

தமிழக முதல்வரை மிஸ்டர் ரீல் அவர் வீட்டில் பார்க்கப் போனபோது... “எப்பப் பார்த்தாலும் இட்லி தோசை தானா... நேற்று டில்லியில் சாப்பிட்டோமே.. தால் மக்கானி, பட்டர் நான்.. அது எல்லாம் இங்கு இல்லையா” என முதல்வர் கேட்க... அப்போது அங்கு வந்த திருமதி முதல்வர்... “இரண்டு நாள் டெல்லியில் நார்த் இந்தியன் டிஷ் எல்லாம் சாப்பிட்டு, ரொம்ப மாறிட்டீங்க” என்று அவர் செல்லமாக முதல்வர் கன்னத்தை தட்ட.. அதற்கு முதல்வர்.. “அச்சா அச்சா” என்றார்.

அங்கிருந்த மிஸ்டர் ரீல்.. “உங்களுக்கு இந்தி தெரியுமா” என்று ஆச்சரியத்துடன் கேட்க... அதற்கு திருமதி முதல்வர்.. “அச்சா சொன்னாரே.. அந்த ஒரு வார்த்தை தான் தெரியும். அதுகூட.. நேத்து சோனியா, மோடி, ராகுல் காந்தி அடிக்கடி சொன்னாங்க. அது ஏதோ நல்ல வார்த்தை என்று தெரிஞ்சுக்கிட்டு, அதை சொல்கிறார். நேத்து எங்க நாத்தனார் கனிமொழி போயிட்டு வரேன் என்று சொன்னபோது கூட, அச்சா சொன்னார். அவங்க பாவம் ஒரு மாதிரி குழம்பிப்போய் வீட்டுக்கு போயிட்டாங்க” என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “டெல்லி பயணம் எல்லாம் எப்படி..? நீங்க கேட்டதெல்லாம் ‘ஓகே’ என்று பிரதமர் சொல்லிவிட்டாரா” என்று கேட்க... அதற்கு முதல்வர்... “பிரதமருக்கு ரொம்ப சந்தோஷம். அவர் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் கூட அவருக்கு இவ்வளவு கடிதம் எழுதுதியது கிடையாதாம். 30 நாளில் 28 கடிதங்கள் எனக்கு அனுப்பி இருக்கீங்க, அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார். அப்போது நான், தமிழ்நாடு முதல்வர் எல்லோரும் பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஒரு பழக்கவழக்கமாக இருக்குன்னு, தலைமைச்செயலாளர் சொன்னார். நானும் பழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று கடிதம் எழுதினேன் என்று பதில் சொன்னேன்” என்றார் முதல்வர்.

அப்போது மிஸ்டர் ரீல்... “நீட் தேர்வு ரத்து விஷயம் பற்றி பேசினீர்களா” என்று கேட்க... அதற்கு முதல்வர்... “எப்படி பேசாமல் இருப்பேன்.. எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்லி இருக்கிறோம், அதை நம்பி எங்களுக்கு வாக்குப் போட்டு, எங்களை ஆட்சியில் உட்கார வெச்சிட்டாங்க... எங்க நிலைமையை பாருங்க, யோசிங்க” என்றேன். அதற்குப் பிரதமர்... “தேர்தல் வாக்குறுதி பற்றி.. தேர்தல் முடிந்த பிறகும், ஆட்சியில் உட்கார்ந்த பிறகும், யோசிக்கிற ஒரே கட்சி தலைவர் நீங்கதான். உங்கள பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. எப்படியும் கொரானா மூன்றாவது அலை இருக்குனு டாக்டர்கள் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க... அதனால நீட் தேர்வு வெச்சுடுவோம். வெச்சுட்டு எல்லோரையும் ஆல்பாஸ்னு சொல்ல சொல்றேன் என்று சொன்னார். அவர் சொன்ன யோசனை நன்றாக இருந்தது. உடனே ஆல் பாஸ் அறிவிப்புக்கு, அட்வான்ஸ் நன்றி என்று சொல்லி இன்னொரு சால்வையை அவருக்கு போட்டேன்” என்றார் முதல்வர்.

அப்போது மிஸ்டர் ரீல்... “அமித்ஷாவை நீங்கள் பார்க்க போகலையா” என்று கேட்டபோது... “பிரதமர் மோடி தான் வேண்டாம், பார்க்காதீங்க. ஏற்கனவே மம்தா பானர்ஜிய, டிவியில், பேப்பரில் பார்த்தால் அவருக்கு பிரஷர் அதிகம் ஆகுது. நீங்கள் போனால் இன்னும் அதிகமாகும். டாக்டர் பிரஷர் அதிகமாகும் விஷயத்தை எல்லாம் கொஞ்சம் காலம் தவிர்த்திடுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதனால தயவுசெய்து போகாதீங்க... அதையும் மீறி பார்த்தா, ஆல் பாஸ் மேட்டர் கேன்சல் என்று பயமுறுத்தினார். நான் அப்பவே அங்கேயே சொல்லிவிட்டேன்.. உள்துறை அமைச்சரை பார்க்க போக மாட்டேன் என்று அவர் கையில் அடித்து சத்தியம் பண்ணிட்டு, சேனிடேஷன் பண்ணிக்கொண்டேன்” என்றார் முதல்வர்.

அப்போது மிஸ்டர் ரீல்... “நிதியமைச்சரையாவது பார்த்திருக்கலாமே” என்று கேட்க... அதுக்கும் “மோடி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உங்க நிதியமைச்சர் 4000 கோடி பாக்கி நீங்க தரணும் என்று சொன்னபோது... விவரம் அனுப்புங்க, நான் பார்த்துவிட்டு தருகிறேன் என்று சொல்ல... உங்கள் நிதியமைச்சர் அனுப்பிய விவரத்தை கூட்டிப் பார்த்தால், நாலு லட்சம் கோடி வருகிறது. அதைப் பார்த்து அவங்க மயக்கம் ஆயிட்டாங்க. ஒரு பெண், அதுவும் இந்தி தெரிஞ்ச தமிழ் பெண், அவங்கள போய் ஜிஎஸ்டி பாக்கி கேட்டு, நீங்க தொந்தரவு செய்யத் தான் போறீங்களா” என்று கேட்டார் பிரதமர்.

அப்போது என் மனைவி... “போகமாட்டார் அண்ணா என்று இந்தியில் பிரதமரை பாசமாக, அண்ணா என்று அழைத்து சொன்னதும்”... பிரதமர் உணர்ச்சிவசப்பட்டு, “உங்களுக்கு இந்தி தெரியுமா என்று தமிழில் கேட்க... என் மனைவி தெரியும் என்று ஹிந்தியில் சொல்ல... உடனே அவர் என் மனைவியிடம், இந்தியில் பேச ஆரம்பிக்க... இரண்டு பேரும் ரொம்ப நேரம் இந்தியில் பேசினார்கள். பேசி முடித்ததும்... பிரதமர் என்னை பார்த்து, எல்லாவற்றையும் நான் என் சிஸ்டர்கிட்ட சொல்லிட்டேன். அவங்க உங்களுக்கு சொல்லுவாங்க, நீங்க புறப்படுங்கள்” என்று என்னை அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு இல்லம் வந்ததும், என் மனைவியிடம் பிரதமர் என்ன சொன்னார் என்று கேட்டேன். அதற்கு என் மனைவி, “அடுத்த தடவை தேர்தல் அறிக்கை ரெடி பண்ணும்போது ஒரு வார்த்தை அவர்கிட்ட கேட்க சொன்னார். நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, நகை கடன் ரத்து, எரிவாயு மானியம் என்று நீங்கள் சொன்னது எல்லாமே மத்திய அரசு சம்பந்தப்பட்டதாம். இவர் பாட்டுக்கு வாக்குறுதியை வாரி வழங்குகிறார். இப்ப பணத்தை கொண்டான்னு கேட்டா, நான் எங்கே போவேன். உங்க நிதியமைச்சர் வேற, இது மக்கள் வரிப்பணம் என்று சொல்கிறார். வரி போட்டா கறுப்பு கொடி காட்டறிங்க என்று உங்களைப் பற்றி பெருமையாக சொன்னார் என்று சொல்லி சிரித்தார்” என்று முதல்வர் ஸ்டாலின் சொல்ல...

பிரதமர் உங்களுக்கு எது வேண்டுமானாலும், நேரடியாக என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று சொன்னார் என்று நிருபர்களிடம் டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னாரே... அது இதுதானா என்று மிஸ்டர் ரீல் யோசித்தபடி புறப்பட்டார்.