தொடர்கள்
அனுபவம்
எங்க ஊர் 'வெயில்' வேலூர் மரியா சிவானந்தம்

20240326181626343.jpg

“எங்க ஊர் வேலூர்” என்று சொன்ன அடுத்த நொடியே , “என்ன வெயிலூரா?” என்று கேலியுடன் எழுப்பப்படும் எதிர் கேள்விகள் இன்று பழகி விட்டன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊரின் பெருமைகள் ஏராளம்.

"அன்று

சிப்பாய் கலகத்தில் சிந்திய குருதிக்கு

இன்றும் நின்று
கட்டியம் கூறும் கோட்டை
பட்டுச் சேலையின் தலைப்பைப் போல
நகரைச் சுற்றி வரும் மலைகள் .

பாலாறு கரை புரண்டு ஓடிய போது
பசுமை செழித்த வயல்கள்
அன்பும் நட்பும் கொண்டு

அரவணைக்கும் உள்ளம் கொண்ட மக்கள்
இத்தனைக்கும் சொந்த ஊர் எங்க ராய வேலூர்

என்று நான் ஊர்ப்பெருமை பேசுவதுண்டு .

20240326181723502.jpg

“பழம் பெருமை பேசுகிறேன்” என்று முகம் சுளிக்க வேண்டாம். பண்டைய பெருமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இன்றும் பல சிறப்புகளைக் கொண்டது எங்கள் ஊர்.

மருத்துவத்தில் இந்தியாவுக்கே வழி காட்டிடும் சி.எம்.சி மருத்துவமனை, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் திறமை மிக்க பொறியாளர்களை உருவாக்கி உலக அரங்கில உலவவிடும் வி ஐ டி பல்கலைக்கழகம். நிஜ தங்கத்தில் உருவக்கப்பட்ட அம்பிகையுடன் கூடிய தங்கக்கோயில் என்று இன்றைய பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

20240326181826814.jpg

கடந்த சில ஆண்டுகளாக கோடையில் வேலூரின் வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தன் ரெகார்டை தானே அது முறியடிப்பதால் , தனக்கொரு ஒப்புமை இல்லாத தகைமை கொண்டதாக எங்க ஊர் இருகிறது .மற்ற நகரங்கள் 100 டிகிரியைத் தொட்டு சென்சுரி அடிக்க முயலும் போது நம்ம ஊர் அனாயசமாக 110 ஐ தாண்டி விடும்.இந்த ஆண்டும் விதி விலக்கல்ல.பிப்ரவரியில் ஆரம்பிக்கும் வெயில் வெப்ப அளவின் க்ராப் ஏறிக் கொண்டே சென்று , மே மாதத்தில் அனல் கங்குகளை வீசி எறிந்து தகிக்க வைக்கும், மே மாதம் இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் . கோடை மழை பொழியும் வரை இந்த மண்ணும் , மக்களும் காத்திருக்க வேண்டும்.

20240326181932871.jpg

வேலூரின் வெயிலுக்கு காரணம் உலக உருண்டையில் அதன் இருப்பிடம் என்று சொல்வது நிஜம் என்றாலும், அதன் சுண்ணாம்பு சத்து மிக்க மண், தாவரங்கள் இல்லாத , வெப்ப அலைகளை தடுக்க இயலாத மலைக் குன்றுகள் என்று மேலும் இயற்கை காரணங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொல்வதுண்டு. தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது . அதன் திரவ, திட ,வாயுக் கழிவுகள் இந்த வெப்ப நிலைக்கு காரணம் என்றும் சொல்லலாம்.

எப்படியும், எங்களுக்கு வெயில் விதிக்கப்பட்டுள்ளது . அதை இயற்கை ஒவ்வொரு ஆண்டும் கருணை இன்றி வழங்கி வருகிறது. தகிக்கும் பகல்களும், புழுக்கம் நிறைந்த மாலை வேலைகளும் , உறக்கம் தொலைக்கும் இரவுகளும் எங்களுக்கு பழகி விட்டது. குழந்தைகளும் , முதியவர்களும் படும் பாடு சொல்லில் அடங்காதது .”ஒரு இலை கூட அசைய மாட்டேங்குது” என்ற வசனத்தை இரவு நேரத்தில் ,காற்றுக்காக காத்திருக்கும் வாசல் மனிதரிடம் கேட்கலாம்.

வீட்டில், அலுவலகத்தில் இருப்பவ்ர்கள் ஓரளவு இந்த வெயில் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் . ஆனால் வெளியில் சென்றுதான் தன் பிழைப்பைத் தேடும் மக்கள் நிலைமையை நாம் சிந்திக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிய போது வெளியில் சென்று கேபிள் பதித்தல், பழுது பார்த்தல், வாடிக்கையாளரைச் சந்தித்தல் என்று பணி நிமித்தம் வெயிலில் செல்ல நேரும்.அப்போது எளிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கண் கொண்டு காண முடியாது .

20240326182328839.jpg

கட்டிடத் தொழிலாளர்கள், செங்கற் சூளையில் வேலை செய்பவர்கள்,சிறு வியாபாரிகள் தவிர, காவல் துறையினர் மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் , நெடுஞ்சாலைத் துறையினர் போன்றவர்கள் நிச்சயமாக வெயிலில் பணி செய்துதான் தீர வேண்டும். குடை, தொப்பி, சரியான காலணி, சின்ன கூடாரம் சகிதம் வேலை செய்ய எல்லோராலும் முடிவதில்லை .

உருகி வழியும் தார் சாலையில்,சூரியனின் வெங்கதிர்கள் தாக்க இப்பணியாளர்கள் தம் கடமையை நிறைவேற்றியாக வேண்டும்

வேலூரில் 111 டிகிரி இருந்த சமயத்தில் வெயில் காட்சிகளை படமாக்கி நான் எழுதிய கவிதை ஒன்று இப்போதும் பொருத்தமாக இருக்கிறது. படித்துப் பாருங்கள் .எங்கள் துயரம் புரியும் .

“கொதிக்கும் செங்கற்களை
இறக்கி அடுக்கி

தலையில் சுமக்கும் தொழிலாளர்.

குழாய் பதிப்பு , கேபிள் பழுது
தகிக்கிற வெம்மையில்
தள்ளி வைக்க இயலா பணிகள்.

சிறு நிழலில் கடை விரித்த
நடை பாதை வணிகர்கள்!

அனற்கப்பும் குடை நிழலில்

வியர்வை
வழிய வழிய காவலர் .

மூடிய துவாலையில்
குழந்தையின் முகம் மறைத்து
விரையும் பெண்.

உருகி வழியும் வெயிலில்
ஒத்தி வைக்க இயலா பணிகள்.

வேலூரில் இன்று 111 டிகிரி
வெயில்.!வெயில் .!வெயில் !

ஊடே
அனிச்சையாய்
“எல்லா கால்களிலும்
செருப்பிருக்கா?” என
கவனித்தே. .,கவலையுடன்
நகரும் என் கண்கள் !"

வேலூர் வெயில்தான் இப்படி என்று இந்த வருடம் சேலம் மகள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இப்போது தகவல்படி சேலம் வெப்ப அளவில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறதாம்.கானல் நீர் ஓடும் சாலைகளை பகல் நேரத்தில் பார்க்க முடிகிறது .

என்னை எங்கு சென்றாலும் துரத்தி அடிக்கிறது வெயில்.எல்லாம் இயற்கையின் செயல் என்று நொந்துக் கொள்ள வேண்டி உள்ளது.

வெயிலைப் போலவே மார்கழியில் குளிரும் வேலூரில் உச்சம் தான் . அந்த சமயத்தில் அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம்

இப்போதைக்கு ஒரு மழை வந்து அடிக்க வேண்டும், எங்கள் மனமும், மண்ணும் குளிர வேண்டும் .

இல்லையென்றால் நம்ம விகடகவியார் கெட்டப்பிலாவது இருக்க வேண்டும். !!

20240326210418583.jpeg