
இந்திய ரயில்வே துறை சரக்கு போக்குவரத்து சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ‘ROQIT’ என்ற தனியார் தொழில்நுட்ப துணை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது ரயில் மூலம் சரக்கு அனுப்ப வேண்டுமெனில், ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று, சரக்கு விவரங்களை காகிதத்தில் எழுதி தரவேண்டும். அந்த சரக்கு எந்த ரயிலில் போகும், சரக்கு எங்கு உள்ளது என்ற விவரங்களை யாரும் கண்காணிக்க முடியாது. அதேபோல், அந்த சரக்கு எப்போது டெலிவரியாகும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. நாமே சரக்கை ரயில்நிலையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். இதனால் பலரும் தங்களின் சரக்குகளை அனுப்புவதற்கு தனியார் பேருந்து, லாரி மற்றும் கூரியர் நிறுவன சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ரயில்வே, சிறிய சரக்கு சந்தையில் மிகக் குறைவான பங்கையே கொண்டுள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய முழு டிஜிட்டல சேவை மூலம் ரயில்களில் சரக்கு அனுப்பும் முறையை, முதல்கட்டமாக அடுத்தாண்டு (2026) முதல் இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, நமது செல்போனில் ‘ROQIT’ செயலியை திறந்து, சென்னை மயிலாப்பூர் மற்றும் கோவை முகவரியை கொடுக்க வேண்டும். மேலும், சரக்கின் எடை மற்றும் விவரங்களை குறிப்பிட்ட வேண்டும். இவற்றை குறிப்பிட்ட பின்னர், 3 விருப்பத் தேர்வுகள் வரும். அதாவது, சரக்கு சென்றடைய 1,2,3 நாளா எனக் காட்டும். நமது விருப்பத்தை தேர்வு செய்து, அதற்கான பணத்தை ஆன்லைனில் கட்ட வேண்டும். அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கு வாகனம் வந்து, அதில் உங்களின் சரக்கை எடுத்து செல்லும். மேலும், நமது சரக்கு எங்கு உள்ளது என்பதை செல்போனிலேயே அறிந்து கொள்ளலாம் (எப்படி ஸ்விக்கி, சூமோட்டோவில் உணவு எங்கு வருகிறது என்பதை போல்!) குறிப்பிட்ட நேரத்தில் பெறுபவரின் வீட்டுக்கு சரக்கு சென்று சேரும்.
இச்சேவை முதல்கட்டமாக அடுத்தாண்டு துவக்கத்தில் தெற்கு மத்திய ரயில்வேயில் (ஐதராபாத், விஜயவாடா, திருப்பதி பகுதிகளில்) சோதனை முறையில் துவங்கப்படும். பின்னர், அடுத்தாண்டு இறுதி மற்றும் 2027-ம் ஆண்டுக்குள் படிப்படியாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி ROQIT நிறுவன சிஇஓ கூறுகையில், ‘‘எங்களுக்கு வாகன துணை நிறுவனம் உள்ளது. அவர்கள் மின்வாகனங்களை உருவாக்குகின்றனர். இவ்வாகனங்கள் வீடுவரை வந்து சரக்கு எடுக்கவும், வழங்கவும் பயன்படுத்துவோம். இதனால் முற்றிலும் மாசில்லாத சரக்கு போக்குவரத்து சேவையை வழங்க முடியும்!’’ என்று உறுதியுடன் தெரிவித்தார்.

Leave a comment
Upload