தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 44- மரியா சிவானந்தம்

20251020211352198.jpg

அவளது காதலன் திரும்பி வந்து விட்டான்.

அவன் வருகைக்காக காத்திருந்த தலைவி ஓடோடிச் சென்று அவனை வரவேற்க ஆவலுடன் எதிர் கொள்கிறாள்.

தலைவனின் முகமும், தோற்றமும் அவளுக்கு நூறு கதைகளைக் கூறுகின்றன.

அவன் எங்கிருந்து வந்துள்ளான் என்பதை அவன் சொல்லாமலே அவள் புரிந்துக் கொள்கிறாள்.

அவன் நெஞ்சில் உலர்ந்த சந்தனமும், தோளில் துவண்ட மாலையும் அவன் பரத்தையின் வீட்டுக்குச் சென்று திரும்பி வந்த கதையைச் சொல்கிறது.

தழுவச் சென்ற கைகளைப் பின்னே இழுத்துக் கொள்கிறாள்.

“உன்னைத்தொட்டு தழுவுதல், எச்சில் பட்ட தட்டில் உணவு கொள்வதற்கு சமம்” என்று வெறுப்புடன் பேசுகிறாள்.

இந்த மருத நில நாயகியின் கூற்றைக் கேளுங்கள்:

“அறுவடைக்குக் காத்திருக்கும் நெல்லை அரியச் சென்ற உழவர்கள் எழுப்பும் ‘தண்ணும்மை’ என்னும் முரசின் ஒலியில் அதிர்ந்து வயலில் உள்ள பறவைகள், அங்குள்ள மருத மரத்தின் தாழ்ந்து வளைந்த கிளைகளில் ஏறிக் கொள்ளும்.

பறவைகள் அமர்ந்திட, மருத மரத்தின் பூக்கள் வயலில் உதிரும்.

தன்னைத் தேடி வருபவருக்கு எல்லாம் தேர்களைப் பரிசாக வழங்குபவன் இருப்பையூரின் தலைவன் விரான் என்பவன். இருப்பையூரின் அழகு போல அழகு மிக்கவள் நான்

அத்தகைய என் அழகு குறைந்தாலும் குறையட்டும். உன்னை என் அருகில் வர அனுமதிக்க மாட்டேன்.

என் உள்ளம் விரும்பாவிட்டாலும், என் கைகள் உன்னைத் தொடவும், தழுவிக் கொள்ளவும் துடிக்கின்றன.

ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன்.

பரத்தையின் வீடு சென்று அவளைத் தழுவியதால், அவள் உடலில் பூசிய சந்தனம் உன் மார்பில் உலர்ந்து உள்ளது,

அவளைத் தழுவும் போது உன் தோளில் சூடிய மாலை துவண்டு விட்டது. இவற்றைக் காணும் போது, உன்னைத் தொட என் மனம் விரும்பவில்லை.

உன்னைத் தீண்டும் போது ஒரு எச்சில் பாத்திரத்தைத் தீண்டும் உணர்வே எனக்கு ஏற்படுகிறது.

இனி நீ எனக்கு வேண்டாம். நீ என்னைத் தேடி வரவும் வேண்டாம்.

“உன்னிடம் உறவு கொண்ட பரத்தையுடன் நீ வாழ்க“ என்று வெறுப்புடன் மொழிகிறாள்.

அனபைப் பொழியும் நங்கையே, வெறுப்பை உமிழும் போது அக்காதலனின் நிலமை பரிதாபத்துக்குரியது.

அதுவும் “பிறர் சாப்பிட்ட அழுக்கடைந்த எச்சில் தட்டு, நீ” என்று அவனைத் தூக்கி வீசும் நிலை மிகவும் இரங்கத்தக்கது.

கண்ணகி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெண் இவள்.

கணிகையின் வீட்டுக்குச் சென்று திரும்பிய கோவலனை ‘சிலம்புள கொள்மின்’ என்று கூறி அணைத்தாள் கண்ணகி.

ஆனால் இப்பெண்ணரசியோ “இனி என்னிடம் வராதே’ என்று அவனை ஒதுக்கி விடுகிறாள்.

காதல் கரைந்து மனம் வெதும்புகையில் ஏற்படும் மாற்றத்தை விவரிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் பரணர்.

பறவைகள் குடியிருக்கும் நெல் வயலின் அழகைகக் கூறும் மருத்திணைக்குரிய பாடல் இது.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார

விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!

நற்றிணை 350

மேலும் ஒரு நல்ல பாடலுடன் மீண்டும் சந்திப்போம்

தொடரும்