
சர்ரியலிசம். இது ஐரோப்பாவில் தோன்றிய ஒரு கலை இலக்கிய கோட்பாடு. சர்ரியலிசம் என்கிற ஆங்கில வார்த்தையை 'மிகு யதார்த்தவாதம்’ எனத் தமிழில் மொழிபெயர்க்கலாம். அதாவது தூக்கத்தில் மனதிற்குள்ளிருந்து வருகிற கனவுகளைச் சித்தரிக்க முற்படும் கலைப்பரிமாணமாக சர்ரியலிசம் உருவெடுத்திருக்கிறது. அதாவது கனவு மற்றும் அதியுண்மை கலந்த ஒன்று. யதார்த்தமாக நடைபெறும் ஒரு விசயத்தில், நம்முடைய ஆழ்மன, அதியுண்மைகள் வழி தெறிக்கும் சிந்தனைகளை, அதனோடு புகுத்துவதை ‘சர்ரியலிசம்’ என்று சொல்லலாம். “
ரியலிசம் என்பது நாம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதன்படி நடப்பது. இந்தச் சமூகம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிற பாதையில் செயல்படுவது. ஒருவருக்கு வணக்கம் சொல்வது போல. ஆனால், சர்ரியலிசம் என்பது மனது அப்பட்டமாக என்ன நினைக்கிறதோ அதை காட்சிகளில் வெளிப்படுத்துகிறது. உதடு வணக்கம் சொன்னாலும் மனதுக்குள் ‘இவன் ஏன் வந்தான்’ என நினைக்கலாம். இப்படி ஒரு விளக்கத்தை கவிக்கோ அப்துல் ரஹ்மான் சர்ரியலிசத்துக்கு கொடுத்திருக்கிறார். சர்ரியலிச படைப்பிற்கு உதாரணமாக வங்கமொழியில் வெளிவந்த ‘ஜோனக்கி’ என்கிற படத்தை பற்றிப் பார்க்கலாம். இது ஒரு காதல் கதை. ஜோனக்கி என்றால் மின்மினிப்பூச்சி என்று அர்த்தம். இருண்மைக்குள் விட்டுவிட்டு மிளிரும் அந்த ஒளித்துகளைப்போல நாயகி மனதில் அவளின் இளமைக்கால பதின்பருவ காதலனின் முகமும், அவனோடு பகிர்ந்து கொண்ட பழத்தின் வாசமும், அவர்கள் சேர்ந்திருந்த காலத்தின் நினைவலைகளுமாக முன்னும்பின்னும் என மாறிமாறி வந்து அங்கே ஒரு ரஸவாத அனுபவத்தை நிகழ்த்துகிறது.
நாயகி வசதியானவள். நாயகன் எளியவன். அதனால் அந்த திருமணம் நடக்க அவளின் குடும்பம் அனுமதிக்கவில்லை. அவள் வீட்டில் உள்ளவர்கள் வயதாகி மரிக்க, அவள் தனிமையில் அவளுக்கும் வயதாகி அவனின் நினைவுகளோடு வாழ்கிறாள். அவள் விரும்பிய அந்த நபர் வயோதிகமாகியும் திருமணம் செய்யாமல் இவளை பார்ப்பதற்காக தினந்தினம் வந்து, அந்த மாளிகையில் வந்து அவளை சந்திக்க முயற்சிக்க, ஒவ்வொரு முறையும் அந்த காவலாளி திருப்பி அனுப்பி விடுகிறான். அவனும் மௌனமாக அங்கிருந்து நகர்ந்து விடுகிறான்.
அவள் அந்த வீட்டிலுள்ள பாதாள அறையில் வசிக்கிறாள். அங்கே மரங்களின் வேர்கள் மட்டுமே தெளிவாக காட்சியளிக்கிறது. ஒரு வகையில் இந்த காதலில் பலவிதமான கனவுகளின் காட்சி ரூபங்கள் வழியாக இந்த காதலின் ஆழம் உணர்த்தப்படுகிறது. வசனம் இல்லாமலேயே காட்சிமொழி வழியாக தத்ரூபமாக காதலை உணர்த்துகிற படம் இது.
சராசரி பொதுபுத்தி கொண்ட, பேதங்களால் மனதை நிறைத்து வைத்திருக்கிறவர்களுக்கு மரங்களின் கிளைகள், இலைகள், காய்கள், கனிகள் மட்டுமே தென்படுகின்றன. அவற்றின் ஆதாரமான வேர் பண்புகள் தென்படுவதில்லை என்பதை இதில் வருகிற புதிர்தன்மை கொண்ட காட்சிகள் வழியாக இந்த படைப்பு நம் சிந்தனையை புரட்டிப்போடுகிறது.
இறுதியில் ஒரு நாள் அந்த காவலாளி அவனை அனுமதிக்கிறான். அவன் மரணப்படுக்கையில் இருக்கிற நாயகியை சந்திக்கிறான். அப்போது அவள் அவர்கள் முன்பு சேர்ந்து சாப்பிட்ட பழத்தின் வாசத்தை ஒரே நேரத்தில் உணர்கிறார்கள். அவன் அவளுக்கு பிடித்த அந்த பழங்களை பை நிறைய வாங்கி வந்திருக்கிறான்.
அவளின் கண்கள் இறுதியாக மூடுவதற்கு முன்னால் அவனை முதன்முதலில் பார்த்த அந்த பதின்பருவ சிறுவனாக பார்க்கிறது. இறுதியாக அவளின் உதடுகள் மூடுவதற்கு முன்னால் அவனை நோக்கி அந்த ரஸவாத புன்னகையை உதிர்க்கிறது.

Leave a comment
Upload