ஶ்ரீ சத்ய சாய்பாபா அன்றைய சென்னை மாகாணத்தில் உள்ள புட்டபர்த்தி கிராமத்தில் (இன்றைய ஆந்திரப்பிரதேசம்) ரத்னாகரம் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், மீசரகண்ட ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாக 1926. நவம்பர் 23-ம் தேதி அவதரித்தார். இவரது இயற்பெயர் சத்திய நாராயண ராயூ.
ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட ஶ்ரீ சத்ய சாயிபாபா தன் 85ஆவது வயதில், 24 ஏப்ரல் 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மகா சமாதியானார். இங்கு அமைந்துள்ள பிரசாந்தி நிலையம், அமைதியின் உயர்ந்த கோயில் எனக் கருதப்படுகிறது.
சத்ய சாயி மாவட்டம்:
புட்டபர்த்தியின் பழைய பெயர் கொள்ளப்பள்ளி. சித்ராவதி நதிக்கரையில் 60 வீடுகளே கொண்ட சின்னஞ்சிறிய கிராமமான இந்த பகுதி, எறும்பு மற்றும் பாம்புப் புற்றுகளால் நிரம்பி இருந்ததால், காலப்போக்கில் புட்டப்பள்ளி என்றும், பின்னர் அதுவே மருவி புட்டபர்த்தியானது.
அடிப்படை வசதி எதுவுமின்றி சின்ன சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தி இன்று விமான நிலையம், இரயில் நிலையம், பல்கலைக் கழகம், சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனை உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சர்வதேச நகரமாக வளர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, 2022 முதல் புட்டபர்த்தியைத் தலைமையிடமாகக் கொண்ட சத்ய சாயி மாவட்டமாக மாற்றப்பட்டது.

பிரேமா ப்ரவாஹினி' ரத யாத்திரை:
ஶ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவரது போதனைகளை எடுத்துச் செல்லும் 'பிரேமா ப்ரவாஹினி' என்ற ரத யாத்திரை இந்தியா முழுவதும் வலம் வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், மற்றும் இரத்த தானம் போன்ற சேவைகள் நடத்தப்படுகின்றன.
உயர் மருத்துவ அறிவியல் கழகம்:
வறுமை, நோய், துன்பம் ஆகியவற்றை நீக்கி “அன்பே மருந்து” என்பதை நடைமுறைப்படுத்தியவர் பகவான் சத்ய சாய்பாபா.
ஶ்ரீ சத்ய சாய்பாபாவால் 1991-ம் ஆண்டு உயர் மருத்துவ அறிவியல் கழகம் உருவாகியது. இன்று வரை 3.4 லட்சம் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இங்கு இதயம், சிறுநீரகம், எலும்பியல், கதிரியக்கவியல், மயக்கவியல், கண் மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்த வங்கி என உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. இந்த அனைத்து மருத்துவ சேவைகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவமனை இலவச சிகிச்சைக்கு மட்டுமின்றி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் இஸ்ரோவுடன் இணைந்து தொலை மருத்துவம், தொலைக் கல்வித்திட்டங்களும் இதில் அடங்கும். இந்த மருத்துவமனை ஒரு புனித கோயிலாகத் திகழ்கிறது.

சத்தியம், சிவம், சுந்தரம்:
சத்தியம், சிவம், சுந்தரம் சென்னையில் தியான முறைகள் பல வழிகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில், சத்சங்கம் (ஆன்மீகக் கலந்துரையாடல்கள்), பக்தி தியானம், வெவ்வேறு குருமார்களின் கீழ் செய்யப்படும் தியான முறைகள் ஆகியவை அடங்கும்.
சத்ய சாய் சேவா சங்கம்:

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகாசமாதிக்குப் பிறகும், அவரது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அவரது போதனைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து, இந்த சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிக்கின்றனர். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கங்கள் இன்றும் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களால் தொடங்கப்பட்ட பணியைத் தொடர்ந்து நடத்துகின்றன. மேலும் அவரது தன்னலமற்ற அன்பும், உலகளாவிய ஆன்மீகப் போதனைகளும் லட்சக் கணக்கானவர்களை, இந்த சமூக சேவைகளில் ஊக்கப்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

ஶ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா:
இந்த வருடம் நவம்பர் 23 தேதி அன்று ஶ்ரீ சத்ய சாயி மாவட்டம் – புட்டபர்த்தியில் நடைபெறும் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் மாநில விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே அறிவிப்பின் படி புட்டபர்த்தியை மையமாகக் கொண்டு 13 நவம்பர் முதல் 23 நவம்பர் 2025 வரை பத்து நாட்கள் சிறப்பு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. 23 ஆம் தேதி அவதார தினத்திற்கான ஏற்பாடுகள் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரால் சிறப்புக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஶ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் ₹100 மதிப்புள்ள நினைவு நாணயம் மற்றும் சிறப்பு நினைவு தபால் தலையைப் பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டார்.

“நம்பிக்கை இருக்குமிடத்தில் அன்பு இருக்கும்;
அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்;
அமைதி இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும்
சத்தியம் இருக்குமிடத்தில் ஆனந்தம் இருக்கும்;
ஆனந்தம் இருக்குமிடத்தில் இறைவன் இருப்பான்.”
-ஸ்ரீ சத்ய சாயி பாபா
ஶ்ரீ சத்ய சாய்பாபாவை நினைவு கூர்ந்து போற்றுவோம்..!!
ஶ்ரீ சத்ய சாய்பாபாவின் அருளாசியைப் பெறுவோம்..!!!




Leave a comment
Upload