தொடர்கள்
ஆன்மீகம்
நன்மை பயக்கும் நமஸ்காரம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Beneficial salutations..!!

நமஸ்காரம் என்பது "வணக்கம்" அல்லது "மரியாதையுடன் கூடிய வாழ்த்து" என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். தமிழிலும் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. நமஸ்காரம் செய்வது என்பது நம் அகங்காரத்தைக் குறைக்கும். நான் என்ற எண்ணத்தைப் போக்கும்.
" என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை ;எல்லாம் உன் செயல் "என்று இறைவனைச் சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்.
"நமஸ்காரம்" என்ற வார்த்தைக்கு, 'வளைதல்' அல்லது 'சரண் அடைதல்' என்றும் பொருள் கூறப்படுகிறது.
நாம் ஒருவரை வரவேற்கும் போதும், விடைபெறும் போதும் அல்லது மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் போதும் நமஸ்காரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

வேதத்தில் நமஸ்காரம்:

Beneficial salutations..!!
நமஸ்காரம்

நமஸ்கரிக்கும் வழக்கம் என்பது நம் வேத காலத்திலிருந்தே இருந்திருக்கின்றது. நான்கு வேதங்களில் இரண்டாவதான யஜுர் வேதத்தின் இருதயம் போன்று மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஸ்ரீ ருத்ரம். இந்த மந்திரத்தின் சிறப்புப் பகுதியாக ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது நமகம்.
"ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ" (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்) நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்த பலன் கிடைக்கும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மிகவும் மகத்தான பலனைத் தரக்கூடியது.

Beneficial salutations..!!

சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரத்தில், நின்ற திருத்தாண்டகம் எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம், தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் நின்ற திருத்தாண்டகம் பாடும்போதும், கேட்கும்போதும் சிவனை நமஸ்கரிப்பது சிறந்த பலனைத் தரக்கூடியது.

“மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே”. (நின்ற திருத்தாண்டகம்).

சர்வ தேவ நமச்காரஹா கேசவம் பிரதிகட்ச்சதி – செய்யும் எல்லா நமஸ்காரங்களும் கேசவனையே அடைகிறது என்று சாஸ்திரம் கூறுகின்றது.
சூர்ய நமஸ்காரம் வேத காலத்திய பழமை வாய்ந்தது.
இதனால் நமக்கு நல்ல தேக ஆரோக்கியமும், தெளிவான கண் பார்வையும், நீடித்த ஆயுளும், நல்லறிவும், பெரும் புண்ணியத்தையும் தரக்கூடியது. சூர்ய பகவான், ஸஹஸ்ர வியாகரண பண்டிதர் என்றும் அனைத்துக் கலைகளுக்கும் நாயகன் என்றும் லோக குரு என்றும் பத்ம புராணம் கூறுகின்றது.

கோயில்களில் நமஸ்கரிக்கும் முறை:

Beneficial salutations..!!

கோயில்களில் தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, கொடிமரம் இருந்தால் கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும். கோயில் கர்ப்பக்கிரகம் கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் நாம் முறையாக நமஸ்காரம் செய்ய வேண்டும். மேலும் அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஐந்து வகை நமஸ்காரங்கள்:

Beneficial salutations..!!

ஓரங்க நமஸ்காரம், திரியங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் என்பன ஐந்து வகை நமஸ்காரங்கள்.
ஓரங்க நமஸ்காரம்:
தலை குனிந்து வணக்கம் செய்தல் ஓரங்க நமஸ்காரம்.
திரியங்க நமஸ்காரம்:
தலைமேல் இரு கைகளையும் கூப்பி வணங்குவது.
பஞ்ச அங்க நமஸ்காரம்:
தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் தரையில் படுமாறு வணங்குவது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் . பஞ்சாங்க நமஸ்காரம், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியது..

Beneficial salutations..!!

சாஷ்டாங்க நமஸ்காரம்:
நெற்றி, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான ஆறு அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:
நெற்றி, மார்பு, கைகள், முழங்கால்கள் மற்றும் பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது..
சாஷ்டாங்க நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம் - இவ்விரண்டும் ஆண்களுக்கு மட்டுமே உரியன.

அறிவியலும் சூரிய நமஸ்காரமும்:

Beneficial salutations..!!

இறைநம்பிக்கை என்பது ஒரு மனிதனின் உடல் மற்றும் மனதில் நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என நவீன விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அனைவரும் இதை நம்பிக்கையுடன் வழிபட்டு, பிரபஞ்ச சக்தியின் ஆற்றலைப் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்காகவே கோயில் வழிபாடு மற்றும் நமஸ்காரம் போன்றவற்றை ஏற்படுத்தினர்.

​ Beneficial salutations..!!  ​

அறிவியலும் நமஸ்காரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஏனெனில் நமஸ்காரம், குறிப்பாகச் சூரிய நமஸ்காரம், உடல் நலம் மற்றும் மன நலத்திற்கான அறிவியல் பூர்வமான நன்மைகளைக் கொண்டுள்ளது. அறிவியல் சூரிய நமஸ்காரத்தின் பலன்களை உறுதிப்படுத்துகிறது, இதில் செரிமான மண்டலத்தைத் தூண்டுவது, தூக்கமின்மையைக் குறைப்பது, மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும். இது யோகா மற்றும் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புண்ணியங்களைத் தரும் நமஸ்காரம் :

Beneficial salutations..!!

பெற்றோருக்கு ஒரு முறை, இறைவனுக்கு மூன்று முறை, சன்னியாசிகளுக்கு நான்கு முறை என நமஸ்காரம் செய்ய வேண்டும் என நம் முன்னோர்கள் வழிவகுத்துள்ளனர்.அதேபோல் பெரியவர்களுக்கு நாம் நமஸ்காரம் செய்யும் போது அவர்கள் நமக்கு ஆசீர்வாதம் செய்வார்கள். கோயிலில் இறைவனைத் தவிர யாருக்கும் நமஸ்காரம் செய்தல் கூடாது.
பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், கோயில்களிலும், புண்ய க்ஷேத்திரங்களிலும் மற்றும் புண்ய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் செய்யக் கூடிய நமஸ்காரங்கள் பலமடங்கு புண்யங்களைத் தரக்கூடியது.

Beneficial salutations..!!

“லோகா சமஸ்தா சுகினோ பவந்து …!!”

Beneficial salutations..!!