தொடர்கள்
கவர் ஸ்டோரி
பீஹாரின் மகள் "மைதிலி தாக்கூர்”-லண்டனிலிருந்து கோமதி

20251021193216199.jpeg

மைதிலி தாக்கூர் தற்பொழுது நடைபெற்ற பீகார் தேர்தலில், அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

ஹிந்துஸ்தானி மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர்.

நான்கு வயது முதல், தனது தாத்தாவிடம் சங்கீதம் பயின்று, பின்பு தன் தந்தையிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

பீகாரை சேர்ந்த மதுபானியில் பிறந்த இவரது இசைத் திறனை கண்டறிந்த இவரது தந்தை ரமேஷ் தாக்கூர், மைதிலியின் இசைத் திறனை மேம்படுத்த டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.

பத்து வயது முதலே மைதிலி தாகூர் பல மேடைகளில் பஜன் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடத் துவங்கினார்.

இவரது சகோதரர்களான ஆயச்சி மற்றும் ரிஷவ் தாக்கூர் ஹார்மோனியம், தபலா வாசிப்பில் வல்லுநர்கள்.

மைதிலி இவர்களோடு சேர்ந்து பல பாடல்களைப் பாடி வலைத்தளத்தில் வெளியிட்டு,பல்லாயிரக்கணக்கான ரசிகர்கர்களை சம்பாதித்துள்ளார். இவரது யூ டியூப் சேனல் ஐந்து மில்லியன் சந்தாதாரரை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு "அயிகிரி நந்தினி" பாடலை, புதுமையான கணீர் குரலில் பாடுவதை கேட்ட தருணத்தில் தான் இவரை நான் கவனிக்க துவங்கினேன்.

கம்பீரமான குரலோடு இவர் பாடும் எந்த ஒரு பாடலையும், ரசித்து பாடும் தன்மையும் பாராட்டுதலுக்குரியது.

ஹிந்தி நிகழ்ச்சிகளான இந்தியன் ஐடல், ரைசிங் ஸ்டார் என பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதோடு, பல விருதுகளும் பெற்றுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும் இவருக்கு சிறப்பு அழைப்பு அளிக்கப்பட்டது.அந்த விழாவில் சபரியை பற்றி இவர் பாடிய பாடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நெட்ஒர்க்18 நடத்திய "Rising Bharat Summit" என்னும் நிகழ்வில், மைதிலிக்கு மோடி விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழ் நாட்டிற்கு இவரது முகம் பரிச்சியமானதே!

கண்ணான கண்ணே...என இவர் பாடிய பாடல் வளைதளத்தில் மிகவும் பிரபலமானவை.

இவரது தமிழ் உச்சரிப்புக்கு தனி பாராட்டுகள். பாடல்கள் பாடுவதோடு, மிதிலாவில் தோன்றிய பாரம்பரிய கலை வடிவமான மதுபனி கலையை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

தன் இசைப் பயணத்தில், இந்தக் கலையின் கூறுகளை படைப்பாற்றலுடன் இணைத்து, அதன் கருப்பொருட்கள் மற்றும் வடிவங்களை தனது யூ டியூப் காணொளிகளில் சேர்த்து வருகிறார்.

தன் சொந்த மண்ணின் பெருமையை பரப்புவதை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர், தனது தொகுதியான அலிநகரை "சீதாநகர்" என்று பெயரிடப் போவதாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கான செயல்களில் ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார்.

இவரது வெற்றி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று .

2k கிட்ஸ் என்று நாம் குறை கூறும் இந்தத் தலை முறையைச் சார்ந்த ஒரு பெண், எந்த ஒரு அரசியல் பின்புலமும் இன்றி, அரசியலுக்குள் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளது மிகப் பெரிய சாதனையாகும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கப் பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு மைதிலி தாக்கூர் ஒரு மிகப் பெரிய சான்று.

இவரது வெற்றி இன்னும் பல இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஊக்கமளிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க இயலாது.

மாற்றம் வேண்டும் என்று பேச்சோடு நில்லாமல், செயலில் காட்டியிருக்கின்றனர் அலிநகர் தொகுதியை சார்ந்த வாக்காளர்கள்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சார்ந்த பினோத் மிஷ்ராவை, கிட்டத்தட்ட பதினோறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, மைதிலி தாக்கூரை வெற்றி பெறச் செய்து, இந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

இந்த ஆக்கப்பூர்வ அரசியல் மாற்றம், மற்ற மாநிலங்களிலும் கூடிய விரைவில் ஏற்படும் என்று நம்புவோம்!

https://www.youtube.com/shorts/lcvGK0d5j4w

https://www.youtube.com/watch?v=Qe5WDG55U3s&list=RDQe5WDG55U3s&start_radio=1

https://www.youtube.com/watch?v=wNxdMZn-VNA&list=RDwNxdMZn-VNA&start_radio=1

https://www.youtube.com/shorts/uAPipnII9EU