தொடர்கள்
கதை
அப்பாவின் செருப்பு - சத்யபாமா ஒப்பிலி

20240326215809280.jpeg

பாளம் பாளமாய் வெடித்து வறண்டு தோல் இறுகிப்போயிருந்த அப்பாவின் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன.
"முகத்த வந்து பார்றா. காலையே வெறிச்சு பாத்துட்ருக்கயே", ரகசியமாக அண்ணன் சொல்ல, பதில் சொல்லாமல் காலருகே நன்றாக சப்பணமிட்டுக்கொண்டு அமர்ந்தான். கைகள் நடுங்க கால்களைப் பற்றிக் கொண்டான்.


"வயசாச்சு டா. என்ன பண்ண! யாருக்கும் கஷ்டம் குடுக்காம போய்ட்டாரு பாரு ! போய் முகத்தை பாரு, காரியத்த ஆரம்பிக்கணும் இல்ல" தோளில் கைபோட்டு மறுபடியும் அண்ணன் சொல்ல,
" நமக்காக எத்தனை நடந்திருக்கும் இல்ல இந்த காலு?"
தலையாட்டிக்கொண்டே அவனருகில் அமர்ந்தான் அண்ணன்.
"நேத்திக்கு சாயங்காலம் வரை நடந்துகிட்டு தான் இருந்தார். அம்மன் கல்யாணம் முடிஞ்சுது, அழகர் வந்து போனார். வீட்டுக்கு வந்து படுத்தவர் தான். காலைல எழுந்திருக்கல"
யாரோ யாரிடமோ சொல்ல இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.
" நல்ல வெய்யில். வயசு கொஞ்சமா ஆகுது! அந்த மீனாட்சி தேர டிவி ல பாத்தா என்ன! வெயில் தான் கொண்டு போய்டுச்சு"

அத்தை புலம்பிக்கொண்டிருக்க,
சில்லிட்டு போன கால்களில் அந்த வெயிலின் வெப்பத்தை தேடினான் அவன்.
சித்திரை திருவிழா என்றால் மதுரையே களை கட்டும். தன் வீட்டுக் கல்யாணம் போல் அப்பா களம் குதித்து விடுவார். வீட்டின் வழியே தான் தேர் போகும். வாசலில் தண்ணீர் பந்தல், மோர் அன்னதானமென்று, அவரை கையில் பிடிக்க முடியாது. முதல் தேர் வாசலைக் கடந்தவுடன், தன் இரு பிள்ளைகளையும் இரு தோளிலும் தூக்கிக் கொண்டு பின்னால் நடக்க ஆரம்பிப்பார். வெயில் கொதிக்கும். கால் சுடுமென்று குழந்தைகளை கீழே இறக்க மாட்டார். காலில் செருப்பு இல்லாமல், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லும் கூட்டத்திற்கு நடுவில் சந்தோஷமாக அவரும் நடப்பார். பிள்ளைகள் சற்று வளர்ந்ததும், எங்களால் கூட்டத்தில் எல்லாம் நடக்க முடியாதமுடியாதென்று விலகினாலும், தான் தேர் பின்னால் நடப்பதையும், அழகரை காண கடும் வெயிலிலும் செருப்பு போடாமல் நடப்பதையும் விடவே இல்லை.
அத்தையை திரும்பிப் பார்த்தான். இந்த வெயில் அப்பாவை ஒன்றும் செய்யாது.
"காலேஜ்க்கு எங்களை பாக்க வரும்போதாவது செருப்பு போட்டுக்கிட்டா என்னப்பா?"
" அட போடா, நேத்திக்கு அந்த சனியன எங்கேயோ தொலைச்சுட்டேன். எனக்கு இது வேண்டாம் ன்னு சொன்னா உங்கம்மா கேக்கறாளா, போட்டுக்கிட்டே போகணும்னு பிடிவாதம். எங்கேயோ போனேன் விட்டுட்டு வந்துட்டேன்."
"போனா போகுதுப்பா, அதுவே அண்ணாவோட பழைய செருப்பு தானே! வேற வாங்கிக்கோங்க"
" எல்லாம் வாங்கிக்கலாம், நீ புதுசு வாங்கிகிட்டு உன் செருப்பை குடு!" சிரித்துக்கொண்டே கூறுவார்.
"கால் சுடலயாப்பா ?"
" சுடும் தான். கொஞ்ச நேரத்துல கால் பழகிக்கும்"
"நல்ல சாப்பிடுங்க, நல்ல படிங்க.." கையில் பணத்தை திணித்து விட்டு மஞ்சப்பையுடன் நடக்கும் அப்பா அவன் நினைவுக்கு வந்தார்.
அவர் பாதத்தை வருடினான்.
" இதுக்கு தான் செருப்பு போட்டுக்கணும்னு சொல்றது! வெயில்ல நடந்து நடந்து கால் எல்லாம் காச்சுப்போய் இருக்கு. பின் னு உள்ள போக மாட்டேங்குது!" அப்பா காலை மடியில் வைத்து முள் எடுத்துக்கொண்டே சொன்னான்.
"என்னடா செய்ய! உங்கம்மா ஆசையா வளக்கற செடி, ஆடு வந்துட்டு. ஓடி போய் விரட்டினேன், கால்ல முள்ளு குத்திடுச்சு. அதுக்கெல்லாம் என்ன செய்ய முடியும் ?" பின்னால் குடைந்து முள்ளை வெளியில் எடுக்கும் போதும் முகத்தில் ஒரு சினுங்கலும் இருக்காது.
தான் முள்ளை எடுத்த இடத்தை தடவிக் கொடுத்தான்.
"அப்பா, உங்களுக்கு வயசாச்சு. முன்னாடி மாதிரி வெயில் எல்லாம் தாங்காது. தயவு செஞ்சு செருப்பு போட்டு நடுங்க."
தான் வாங்கி வந்த செருப்பை அப்பாவிடம் குடுத்தான்.
"அடேயப்பா! ஆயிரம் ரூபாயா! நீ ஒன்னு பண்ணு, இதை நீ வைச்சுக்கோ, உன்னோடத குடு. என்னாலெல்லாம் இதை போட்டுக்கிட்டு நடக்க முடியாது. ஆயிரம் ரூபா குடுத்து செருப்பு வாங்குவாங்களோ!" திட்டிக்கொண்டே நடந்து போன அப்பாவை நினைத்துக் கொண்டான் அவன்.
மத்தியானம் சாப்பாடு மறந்து போன போது , ஹால் டிக்கெட் மறந்து போன போது, பரீட்சை பணம் கட்ட மறந்து போய் கையில் பணம் இல்லாமல் அப்பாவை வரச்சொன்ன பொது, தனக்கு பிடித்த பெண்ணை பெண் பேச அவர்கள் வீட்டுக்கு வந்த போது, தனக்கு குழந்தை பிறந்த சமயம் கையில் அம்மன் குங்குமத்துடன் ஓடிவந்த போது, திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட அவசரமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது..அப்பாவின் செருப்பில்லாத கால்களே நினைவுக்கு வந்தது.
அவனை விலக்கி விட்டு அப்பாவின் காரியங்களை கவனிக்க ஆரம்பித்தார்கள். பாதத்தை தாண்டி முகத்தை பார்க்கும் பொழுது வாய் விட்டு அழுதான்.
பின் கூட்டத்தை விட்டு விலகி அமர்ந்தான். செருப்புகளால் நிறைந்த வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாம் ஒவ்வொன்றாக மறைய, மிஞ்சி இருந்த வீட்டாரின் செருப்புகளில் ஓரமாக, புதிதாக இருந்தது அப்பாவின் செருப்பு.