தொடர்கள்
கவர் ஸ்டோரி
மதுரையில் கள்ளழகர் !- செ.சிவபாலன்

2024032517300098.jpeg

மதுரையில் சித்திரைத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

சைவமும், வைணவமும் இணைந்த மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தினை மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றிணைத்து ஒரே விழாவாக ஆக்கினார்.

மதுரை வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூரில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்று வருகிறது. பின்னாளில் இத்திருவிழா கள்ளழகர் மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் ,தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாக கதையும் உண்டு .

மண்டூக மகரிஷிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

அதன்படி சுதபமுனிவர் என்ற மகா முனிவர் , திருமாலிருஞ்சோலை என்கிற இடத்தில் நூபுர கங்கை என அழைக்கப்படும் சிலம்பாற்றில் நீராடிக்கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் அந்த ஆற்றங்கரையோரம் துர்வாச முனிவர் நடந்து வந்துக்கொண்டிருந்தார். சுதப முனிவரோ உல்லாசமாக ஆற்றில் நீராடிக்கொண்டிருந்ததால், வேகமாக வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரை கவனிக்கவில்லை.

20240325173059969.jpeg

துர்வாச முனிவர் பற்றி உலகம் அறிந்தது தானே!

துர்வாசருக்கு கோபம் மூக்கின் மேலே வந்து கொதித்தெழுந்து நின்றார்.

அச்சமயத்தில் தான் நம் சுதப முனிவர் துர்வாசரை கவனித்து “ஆஹா ! துர்வாசரிடம் மாட்டிக்கொண்டோமே !”என பதைபதைத்து இரு கைக்கூப்பி கண்ணீர் மல்க நின்றார்.

எந்த கண்ணீர் துர்வாச முனிவரை அசைக்கும்? “ மண்டூகமாக ஆவாய் !” என விட்டார் சாபத்தை..! “ஐயா..! சாபவிமோசனம் அருளுங்கள்” என சுதப முனிவர் துர்வாசரிடம் கதற , துர்வாசரும் சிறிது கோபம் தணிந்து “ சரி..! சாபம் விட்டது விட்டது தான்.

என்னால் கூட மாற்ற இயலாது. ஆனால் வைகை ஆற்றங்கரையில் இந்த தவளை ரூபத்திலேயே மகாவிஷ்ணுவை நினைத்து தவம் இரு. உன் சாபம் தீரும்” என்று கூறி சென்றார்.

சுதபமுனியும் அவ்வாறே தவம் இயற்ற மகாவிஷ்ணு அழகர் ரூபத்தில் நேரில் பிரசன்னம் ஆகி சாப விமோசனம் அளித்தார் என்பது தல வரலாறு.

மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்க அழகராக உருமாறி வந்த மகாவிஷ்ணு, தேனூர் வழியாக மலைப்பட்டி, அலங்காநல்லூர் மற்றும் வயலூர் வந்ததாக நம்பிக்கை நிலவுகிறது.

மன்னர் காலத்தில் அழகர் மண்டூக மகரிஷியை மீட்கும் விழா வருடந்தோறும் வண்டியூர் கிராமத்தில் நடந்து வந்ததாகவும் , கிபி 1653 ல் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவரால் கட்டப்பட்ட தேனூர் மண்டபத்திற்கு மாற்றியதாக வரலாறு கூறுகிறது.

மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக்குவிஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டமும் நடந்தது.

சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

20240325173527828.jpeg

கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நடந்தது.

அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர்.

வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.

20240325173850564.jpeg

கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது

இரவு 10 மணியளவில் கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.

நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இன்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

காலை 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்.

20240325173810770.jpeg

எப்போதும் போல் மயில் பீலியால் செய்த விசிறி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முன்பு விசிறி தாத்தா கையில் ஏந்தி நடினமாடியது ஹைலைட்.

அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டாடை உடுத்தி கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர்.

வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி உள்ளார்.

பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய வைபவத்தினை காண மதுரை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர்.

வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

20240325173935294.jpeg

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது..

அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும். ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

தற்போது தமிழகம் முழுவதும் தாங்க முடியாத கடும் வெப்பம் நிலவி வருகிறது.

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனால் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பக்தர்கள் கள்ளழகரிடம் பிராத்தனை செய்தனர்.