தொடர்கள்
ஆன்மீகம்
காதற்ற  ஊசி கற்பிக்கும் பாடம் என்ன? -மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

தனக்கு மகனாக பிறந்த ஈசன் தனக்கு உணர்த்திய "காதற்ற ஊசியும் வாராது
காண் கடைவழிக்கே என்ற ஒற்றை வரியில், வாழ்வின் நிலைமையை உணர்ந்து ராஜ வாழ்க்கையை துறந்தவர் ‘திருவெண்காடர்.’ அன்னார் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து,சென்னை திருவொற்றியூரில் ஓர் ஆடி உத்திராடம் நாளில் முக்தியடைந்தார். இவர் பிறந்த இடம் புகார்ப்பட்டினம்.ஆதலால், இவர்பட்டினத்தார் எனவும் அழைக்கப்படுகிறார்.
அவர் தக்க பருவம் வந்ததும் சிவகலை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்கள் கடக்கின்றன. ஆனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

திருவிடைமருதூரில் சிவசருமன், சுசீலை அந்தணத் தம்பதியர்கள் மிகவும்
வறுமையில் வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம்
கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும்,சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் (பட்டினத்தார்) சேர்ப்பிக்குமாறும் கூறினார்.அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறினார்.

மறுநாள் ஈசன் ஆணைப்படியே அனைத்தும் நடந்தன.மருத மரத்தடியில்
கிடைத்த குழந்தைக்கு ‘மருதவாணன்’ என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும்,
சிறப்போடும் வளர்த்து வருகிறார். மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது
இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வெளிநாடுகளில் ஒருமுறை வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான். திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என திருவெண்காடர் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத்
துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும்தான். கப்பலிலும் எருவிராட்டியும்,
தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப்போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்? எதைக்கொண்டு போகப்போகிறோம். எதுவும் இல்லை என்னும் உண்மையை புரிந்து கொண்டார்.

அனைத்துச் சொத்துக்களையும் விட்டுவிட்டு உடனடியாகத் துறவு
மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் கிடைத்த சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்த தமக்கையார்,
அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுத்தார். இதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த
அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து, அவர் ’ஒரு சித்தர்’ என்பதனை புரிந்து கொண்டனர்.

தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து
அவருடைய பூத உடலுக்கு எரியூட்டுவதாய் பட்டினத்தார் கூறியிருந்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிட்டப்போது, சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார்.
சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் சிதையை அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அவற்றை அகற்றிவிட்டு சிதையின் மீது பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தி,

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி எனத் தொடங்கும் பாடல்களை பாடி அவருடைய பூத உடலுக்கு தீ மூட்டினார்.இப்படி அவர் பாடியதும் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களில்
பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத்
தொகுப்பில் உள்ளன. இறுதியாக அவர் சென்னை திருவொற்றியூர் வந்த பட்டினத்தார்,
தனக்கு முக்தி அங்குதான் என்பதை உணர்ந்தார்.அங்கு இருந்த சிலரை அழைத்து
தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட, அவர்களும் அப்படியே மூடினார்கள்.
மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே அவருக்கு கோயில் எழுப்பப்பட்டது.

வங்காள விரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார், தனிச்சந்நிதியில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். செல்வமும்,புகழும்,பதவியும் நிரந்தரமல்ல.
இந்த இயந்திர உலகத்தில் இரையை தேடுவதுடன் இறையையும் தேடும் திறனை
இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம்.அவர்கள் பட்டினத்தார் போன்ற சித்தர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம்.