தொடர்கள்
வலையங்கம்
வாக்குறுதியா ?? வெறும் வடையா ??

வாரி வழங்கப்படும் வாக்குறுதிகள்

20240222174145508.jpg

திமுகவைப் பொறுத்த வரை தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். சட்டமன்றத் தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு மானியம் 100 ரூபாய், பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு, டீசல் விலை ரூ.3 குறைப்பு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்று சொன்னார்கள். ஆனால், அது எதையுமே செயல்படுத்தவில்லை அதற்கு பதில் முதல்வர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக பெருமை பேசி வருகிறார்.

இப்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தியா முழுவதும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழகத்தில் நீட் விலக்கு சமையல் எரிவாயு விலை ₹ 500 , கல்விக் கடன் அனைத்தும் தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது பற்றி பத்திரிகையாளர் கேட்டபோது மத்தியில் ஆட்சிக்கு வரப்போவது நாங்கள்தான். எனவே இது நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டால் கூட இதில் எது எது சாத்தியம் என்பதை மக்கள் யோசிக்க மாட்டார்களா என்பது பற்றி யோசிக்க முதல்வர் மறந்துவிட்டார். உதாரணத்துக்கு தமிழகத்தை போல் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது திமுக தேர்தல் அறிக்கையில். ஆனால், மத்திய அரசு வழங்க நினைத்தாலும் அதை மாநில அரசு தான் செயல்படுத்த முடியும். இதற்கு மத்தியில் ஆளும் அரசு சம்மதிக்குமா என்பது கேள்வி.

இதே போல் தான் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுதோறும் மகளிர்க்கு ஒரு லட்சம் ரூபாய் என்று சொல்லி இருக்கிறது. திமுக இந்த முறையும் கல்விக் கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது. பெரும்பாலான கல்வி கடன் வழங்குவது தேசிய வங்கிகள் தான் கல்விக் கடன் தள்ளுபடி என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதை ஒரு மாநில கட்சி செயல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இப்படி எல்லாம் மக்கள் எங்கு யோசிக்க போகிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் நினைத்தால் அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடாக தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

மக்கள் வாக்கு இயந்திரத்தில் தங்கள் முடிவை சொல்லும் போது இந்த வாக்குறுதிகளின் தாக்கம் வெளிப்படும் !!