தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 44 - மதன்

போர்க்களங்கள்… பொல்லாப்பு..!

20210518144710284.jpeg

மனைவி மும்தாஜ் மறைந்ததிலிருந்தே மன்னர் ஷாஜஹானுக்குச் சற்றுப் போதாத காலம் தொடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்..? இயற்கையும் முகம் திருப்பிக் கொண்டது. 1632-ம் ஆண்டில் தட்சிணப் பிரதேசங்களையும் குஜராத்தையும் பயங்கரமான பஞ்சம் பீடித்தது. அப்துல் ஹமீது லாஹோரி என்பவர் (அக்பருக்கு அப்துல் ஃபஸல் மாதிரி, ஷாஜஹானுக்கு லாஹோரி!), அப்போது தலைவிரித்தாடிய பஞ்சத்தைப் பற்றி விவரமாகக் குறிப்பிடுகிறார்…

‘.... பசி தாளாமல் மக்கள் உச்சக்கட்ட வேதனையை அனுபவித்தார்கள். துண்டு ரொட்டிக்காகக் குடிமக்கள் எதையும் தரத் தயாராக இருந்தார்கள். ஆனால், ரொட்டி கொடுப்பார்தான் இல்லை. ஒரு வாய் சோறுக்காக, தங்கள் பதவிகளையே பலர் தர முன்வந்தும் சீண்டுவாரில்லை. எங்கு பார்த்தாலும் பிச்சை கேட்டு நீட்டிய கைகள்… குழி விழுந்த கண்கள்… மக்கள் நாய்களைக் கொன்று தின்ன ஆரம்பித்தார்கள். இறந்த மனிதர்களின் எலும்புகளைத் தோண்டி எடுத்துப் பொடியாக அரைத்துக் கோதுமை மாவுடன் கலந்து, கொள்ளை லாபத்துக்கு விற்றவர்கள் உண்டு. இப்படிச் செய்த பல வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கடைசியில், சில இடங்களில் வலுவிழந்த மனிதர்கள்கூடக் கொல்லப்பட்டதாகத் தகவல் - உணவுக்காகத்தான்! தெருவெங்கும் எலும்புக்கூடுகள் போன்ற உடல்கள், உயிரில்லாமல் குறுக்கும் நெடுக்குமாகக் கிடந்தன. சில ‘எலும்புக்கூடுகள்’ வெறித்த பார்வையுடன் மெள்ள நடந்து கொண்டிருந்ததையும் கண்டேன்..!’

அந்தச் சமயம் ஒரு பிஸினஸ் விஷயமாக சூரத் நகரிலிருந்து ஆக்ராவுக்குப் பயணித்த பிரிட்டிஷ் வணிகர் பீட்டர் முண்டீ என்பவரும், அப்போது நாடு அனுபவித்த வேதனையைக் கண்டு திகைத்து, விவரமான குறிப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

பஞ்சத்தால் குற்றுயிராக வீழ்த்தப்பட்ட பிரதேசங்களை மீட்டுக்கொண்டு வர டெல்லி ஆட்சிக்கு ஓராண்டுக்குமேல் பிடித்தது.

அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானையும் மத்திய ஆசியாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஷாஜஹானின் கனவும் பொலபொலத்தது, காபூலுக்கு வடகிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள படாக்ஷான் நகரத்தைக் கைப்பற்ற முடிவெடுத்தார் பாதுஷா. 1646-ல் இளைய மகன் முராத் தலைமையில் 50,000 வீரர்கள் கொண்ட குதிரைப் படையும் ஒரு லட்சம் பேர் கொண்ட காலாட்படையும் வடக்கு நோக்கிப் பயணித்தது.
ஆனால், பயங்கரமான மலைத்தொடர்களைத் தாண்டிப்போய்ச் சேருவதற்குள் செத்துச் சுண்ணாம்பாகியது முராத்தின் படை. அப்படியும் ஆப்கானிஸ்தான் மண்ணில் சில வெற்றிகளைக் குவித்தனர் மொகலாய வீரர்கள். ஆனால், தலைமைத் தளபதியாக இருந்த முராத் உற்சாகமிழந்தார். ‘ஊர் திரும்புகிறேன்’ என்று தந்தை ஷாஜஹானுக்குத் தகவல் அனுப்பினார். கோபம் கொண்ட பாதுஷா, ‘‘முழு வெற்றி கிட்டும்வரை அந்த இடத்தைவிட்டு நகரக்கூடாது’’ என்று ஆணையிட்டார். ‘சரிதான் போங்கப்பா’ என்கிற ரீதியில் படையை முராத் அம்போவென்று விட்டுவிட்டு லாகூருக்குத் தனியாகப் போய்விடவே, ‘‘முராத் டெல்லிக்கு வரக்கூடாது. என் முகத்தில் விழிக்கக்கூடாது’’ என்று ஆக்ராவில் ஷாஜஹான் கண்சிவக்கக் கர்ஜித்துக் கொண்டிருந்தார்!

பிறகு குஜராத்திலிருந்த இளவரசர் ஔரங்கசீப்புக்கு ‘உடனே ஒரு படையுடன் படாக்ஷான் செல்லவும்…’ என்று அவசர ஆணை போனது. ஆனால், ஔரங்கசீப் விரைந்து சென்று எவ்வளவோ முயற்சித்தும், அங்கே வெற்றி கிட்டவில்லை. நிலைமை கைமீறிப் போயிருந்தது. கடுங்குளிரில் மலைகளைத் தட்டுத்டுமாறிக் கடந்துவந்த மொகலாயப் படையை படாக்ஷான் நாட்டைச் சேர்ந்த உஸ்பெக் வீரர்கள் கட்டுக்கோப்புடன் அணிசேர்ந்து எதிர்கொண்டார்கள். அவர்களின் கொரில்லாத் தாக்குதல் வீரியம் மிகுந்ததாக இருந்தது. வருடக் கடைசி வேறு! தோலை உரிக்கும் கடும் பனி! நிலைமையைப் புரிந்துகொண்ட ஷாஜஹான், ‘இப்போதைக்குப் போரை நிறுத்திவிட்டுத் திரும்பலாம்’ என்று ஆக்ராவிலிருந்து செய்தி அனுப்பினார். மொகலாயப் படை போர் நிறுத்தம் செய்துவிட்டு, படாக்ஷானிலிருந்து வெளியேறியது. அதற்குள் மலைத்தொடர்கள் ஐஸ் போர்வையைப் போர்த்திக்கொண்டு இருந்ததால், திரும்பும்போது வெடவெடத்துச் செத்து வீழ்ந்த மொகலாய வீரர்கள் மட்டும் ஐயாயிரத்துக்குமேல்! இதே எண்ணிக்கையில் குதிரைகள், யானைகளும் காலி!

ஒரு விஷயம் - மொகலாயப் படை திரும்பிச் சென்ற பிறகும் உஸ்பெக் வீரர்கள், இளவரசர் ஔரங்கசீப்பின் வீரத்தைப் பற்றியும், உறுதி படைத்த நெஞ்சம் பற்றியும் கொஞ்ச நாட்கள் வியந்து பேசிக்கொண்டார்கள். காரணம் – படாக்ஷானில் ஒரு நாள் மாலை நேரம்… போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தொழுகை நேரம் வந்தது. உடனே குதிரையிலிருந்து குதித்த ஔரங்கசீப், மிகவும் சாவதானமாகக் கம்பள விரிப்பை யுத்தகளத்தின் நடுவே விரித்து, மண்டியிட்டு அமர்ந்து தொழுகை புரிய ஆரம்பித்தார். அவருடைய நெஞ்சுறுதி கண்டு பிரமித்துப் போன எதிரி நாட்டுப் பிரதம தளபதி, ‘இடையூறு செய்ய வேண்டாம்’ என்று சைகையால் தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டார்! பிறகு அமைதியாக நடந்து சென்று, குதிரை மீது ஏறிய இளவரசர் ஔரங்கசீப், வாளை உருவிக்கொண்டு தொடர்ந்து ஆவேசமாகப் போரில் ஈடுபட்டார் என்ற வரலாற்றுத் தகவலைப் படிக்கும்போது வியப்பு மூள்கிறது!

‘சரி, படாக்ஷான் போகட்டும்… டெல்லிக்கு வடமேற்கே உள்ள காண்டஹார் நகரைக் கைப்பற்றிய பிறகு, காபூலை வளைத்துப் போடலாம்’ என்று திட்டம் போட்டார் ஷாஜஹான். பாரசீகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காண்டஹாரில் எதிர்பாராத விதத்தில் ஷாஜஹானின் படைக்கு வெற்றி கிட்டியது. தனிப்பட்ட ஒரு ஆளின் துரோகத்தால் பாரசீகம், அந்த முக்கியமான நகரை மொகலாயர்களுக்கு இழக்க நேர்ந்தது…

காண்டஹாரை நிர்வகித்து வந்த கவர்னர் அலி மர்தான்கான், கொஞ்ச காலமாகவே பாரசீக ஷாவுக்குத் தெரியாமல் ஏகப்பட்ட பணத்தைச் சுருட்டிக் கையாடல் செய்து கொண்டிருந்தார். இதுபற்றி விரைவில் ஷா ‘விசாரணை கமிஷன்’ நியமிக்கப் போகிறார் என்ற தகவல் வர… கலவரமடைந்த கவர்னர், மொகலாயர் பக்கம் கட்சி மாறி, காண்டஹார் நகரக் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டார்… ஷாஜஹான் படை குபுக்கென்று உள்ளே நுழைந்துவிட்டது! ஆனால், தற்காலிகமாகத்தான்! சில ஆண்டுகள் கழித்து, தன் தந்தை இறந்தவுடன், இரண்டாம் ஷா அப்பாஸ் என்னும் துடிப்புமிக்க பாரசீக இளவரசர் அரியணையில் ஏறி அமர்ந்தார். உடனடியாக காண்டஹாரை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

ஷா அப்பாஸ் தலைமை தாங்கிய பாரசீகப் படை பிப்ரவரி 11-ம் தேதி, 1649-ம் ஆண்டு காண்டஹாரைச் சூழ்ந்துகொண்டது. அங்கே ‘நிர்வாகம்’ என்ற பெயரில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்த தௌலத்கான் என்னும் மொகலாய கவர்னர் சுதாரித்துக் கொண்டு எழுவதற்குள்… காண்டஹார் மறுபடி பாரசீகத்திடம் போய்விட்டது!

உடனே ஷாஜஹான் ஆணைப்படி, லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஔரங்கசீப் காண்டஹாரைக் காப்பாற்ற போய்ச் சேர்ந்தார். சக்திவாய்ந்த பாரசீகப் பீரங்கிகளை மீறி, மொகலாயப் படையால் ஒன்றும் செய்ய முடியவில்லை!

மறுபடியும் மொகலாயப் படை, 1652-ல் ஔரங்கசீப் தலைமையில் காண்டஹார் கோட்டைக் கதவுகளை முனைப்பாக முட்டியது. இந்த முறையும் பலனில்லை. நேரம் பார்த்துப் பனிக்காலம் ஆரம்பிக்க, இந்திய சீதோஷ்ண நிலைக்குப் பழகிவிட்டிருந்த மொகலாயப் படையினர், ஐஸ்கட்டி மழையில் திணறினார்கள். திரும்ப அழைக்கப்பட்ட ஔரங்கசீப், பழையபடி தட்சிணப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அண்ணன் தாரா ஷூகோ கோஷ்டிக்கு ஏக குஷி. விடுவார்களா… அவருடைய ஜால்ராக்கள்..? ‘‘இதுதான் சமயம் இளவரசே! இப்போது நீங்கள் பெரும் படை ஒன்றுடன் சென்று, ஆப்கானிஸ்தானில் வெற்றிக்கொடி நாட்டினால் போதும்… ஔரங்கசீப்பின் ‘இமேஜ்’ அதோடு காலி!’’ என்றனர்.

உடனே பாதுஷாவைச் சந்தித்த தாரா, ‘‘அரசே! காண்டஹாரை ஒரே வாரத்தில் கைப்பற்றிக் காட்டுகிறேன்… அனுமதி தாருங்கள்!’’ என்று கோரினார்.

மகிழ்ந்துபோன ஷாஜஹான், பிரமாண்டமான படையை அணிவகுக்கச் செய்தார். அவ்வளவாகப் போர்களில் ஈடுபட்டிராத மூத்த மகன் தாரா, இப்போது படைத் தலைமையில்! இந்த முறை ஸ்பெஷலாக, ஐரோப்பிய துப்பாக்கிப் படைப் பிரிவுகூடச் சேர்க்கப்பட்டது!

தாரா ஷூகோவின் வீரத்தை மெச்சலாம்தான்… ஆனால், அவரிடம் போர்த்திறமைதான் இழுபறி! தவிர, பல யுத்த பூமிகளைக் கண்ட ஔரங்கசீப்பையே வெற்றிகரமாக எதிர்கொண்ட எதிரி நாட்டுப் படையோடு வேறு மோதியாக வேண்டும்!

தொடர்ந்து தாரா முற்றுகையிட்டும் பாரசீகர்களிடமிருந்து காண்டஹாரை வசப்படுத்த முடியவில்லை. படையைத் திரும்பச் சொல்லி, அலுப்புடன் ஆணை போனது ஷாஜஹானிடமிருந்து!

பிற்பாடு, ஆப்கானிஸ்தானை தாரா முற்றுகையிட்டதையே ‘வெற்றி’யாகக் கொண்டாடினார் ஷாஜஹான்! ஊர் திரும்பிய தாராவுக்கு, ஆக்ராவில் கோலாகலமான வரவேற்பு தரப்பட்டது. மகனுக்கு வைரங்கள் பதித்த தங்க பெல்ட் ஒன்றைக் குறுவாளுடன் பரிசளித்தார் ஷாஜஹான். தவிர, இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மரகதம் மற்றும் முத்துமாலைகள் வேறு.

தர்பாரில், பாதுஷாவுக்கு நெருக்கமாக தங்கச் சிம்மாசனம் ஒன்றும் தாராவுக்குப் போடப்பட்டிருந்தது. ஆக மொத்தம் ‘தாராதான் என் வாரிசு!’ என்று சொல்லாமல் சொன்னார் சக்ரவர்த்தி. இந்தச் செய்தியெல்லாம் கேள்விப்பட்ட ஔரங்கசீப்புக்கு எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!

உண்மையில் தோல்விகரமாக நடந்தேறிய காண்டஹார் படையெடுப்புகள் மூன்றிலும் மொகலாய அரசுக்கு ஆன செலவு பன்னிரண்டு கோடி ரூபாய் என்பதுதான் முக்கியமான விஷயம். அதாவது, மொகலாய அரசின் வருடாந்திர வருமானத்தில் பாதிக்குமேல்! இந்தப் படையெடுப்புகளுக்குப் பிறகு, நாட்டின் நிதி நிலைமையே கொஞ்ச காலத்துக்குச் சிக்கலாகப் போய்விட்டது.

ஒருவழியாக மொகலாயர்கள் வடக்குப் பக்கம் செல்லும் திட்டங்களை முடிவாக மூட்டை கட்டி வைத்தார்கள். பிற்பாடு, ஆட்சிக்கு வந்த ஔரங்கசீப்கூட இந்தியாவின் தெற்குப் பகுதியில்தான் பார்வையையும் படையையும் செலுத்தினார்!

ஷாஜஹான் கட்டளைப்படி, தட்சிணப் பிரதேசத்துக்கு இரண்டாம் முறை வைஸ்ராயாக ஔரங்கசீப் பதவியேற்ற பிறகு, அவருக்கும் தந்தைக்கும் உறவு ரொம்பவும் சீர்குலைந்து போனது. பாதுஷாவை நெருக்கமாகச் சூழ்ந்திருந்த தாராவின் கோஷ்டி, ஔரங்கசீப் பற்றிச் சமயம் கிடைத்தபோதெல்லாம் கோள்மூட்ட… இளவரசர் பேரைச் சொன்னாலே எரிச்சலடைய ஆரம்பித்தார் ஷாஜஹான். அதைத் தொடரந்து, நிர்வாக ரீதியில் ஔரங்கசீப் எடுத்த பல நடவடிக்கைகளையும் குறை கூறிக் கடிதங்கள் ஆக்ராவிலிருந்து வர ஆரம்பித்தன. நிதியுதவி கேட்டு இளவரசர், தந்தைக்கு அனுப்பிய கடிதங்கள் குப்பைத் தொட்டிக்குப் போயின. ஏதேனும் பணியில் ஒருவரை ஔரங்கசீப் அமர்த்தினால், சில மாதங்கள் கழித்து அவரை வேலைநீக்கம் செய்தது மத்திய அரசு. ஆக்ரா அரண்மனையில் நடந்த விழாக்களுக்கும் விருந்து வைபவங்களுக்கும் சம்பிரதாய அழைப்புக் கடிதம்கூட ஔரங்கசீப் தம்பதிக்கு அனுப்பப்படவில்லை!

தந்தை-மகன் உறவு எந்தளவுக்குப் பாதாளத்தில் வீழ்த்தப்பட்டது என்பதற்கு, ஷாஜஹானிடமிருந்து மகனுக்குப் போன கீழ்க்கண்ட ஒரு கடிதமே உதாரணம்! -

‘ஆக்ராவுக்கு அனுப்ப வேண்டிய பரிசுப் பொருட்களை அனுப்பாமல், தாங்களே வைத்துக்கொள்வதாகக் கேள்விப்படுகிறோம். பாதுஷாவுக்கு அனுப்ப வேண்டிய உயர்ந்த வகை மாம்பழங்களில், நல்ல மாம்பழங்களை இளவரசர் பொறுக்கியெடுத்து, தனக்காக வைத்துக் கொள்வதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது…’

இத்தனை சோதனைகளுக்கும் நடுவே, தெற்கே ஔரங்காபாத் என்று புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அங்கே அமர்ந்தவாறு தட்சிணப் பிரதேசத்தை மிகத் திறமையாக நிர்வகித்தவர் ஔரங்கசீப். நிர்வாகத்தில் அவர் காட்டிய ஒழுக்கமும் கண்டிப்பும் சுறுசுறுப்புடன் அவர் அமல்படுத்திய சீரமைப்புத் திட்டங்களும் விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு தரப்பட்ட உதவியும் சலுகைகளும் மக்களின் நன்மதிப்பை ஔரங்கசீப்புக்குப் பெற்றுத் தந்தன.

இதற்கிடையே, சில பல ஆண்டுகளாக மொகலாய ஆட்சிக்குப் பணிந்திருந்த கோல்கொண்டா அரசும் பீஜப்பூர் அரசும் கப்பம் கட்டுவது போன்ற விஷயங்களில் சற்றுப் பின்வாங்கவே, ஒட்டுமொத்தமாக அந்த இரு ராஜ்யங்களையும் கைப்பற்ற முடிவெடுத்தார் ஔரங்கசீப். எடுத்த காரியத்தைச் சுலபமாகவே முடித்திருப்பார் இளவரசர். ஆனால், கனிகள் மடியில் விழும் சமயம் பார்த்து, ஆக்ராவிலிருந்து உருவான தடைக்கற்கள் ஔரங்கசீப்பின் வழியை மறிக்க… பொறுமையிழந்தார், ஷாஜஹானின் இந்த மூன்றாவது மகன்..!