தொடர்கள்
follow-up
கடல் ஆமைகள் - ப. ஒப்பிலி

20240221124105395.jpg

அதிக அளவில் கடல் ஆமை சடலங்கள் கரை ஒதுங்கியதால் வன உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கும், வன உயிரின ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சி

இறந்து போன ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் (தமிழில் பங்குனி ஆமைகள்) அழுகிய உடல்கள் இந்த வருடம் அதிக அளவில் கரை ஒதுங்குவது, வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில் பொதுவாக நவம்பர் மாத கடைசியில் இருந்து மார்ச் மாதம் வரை பெண் கடல் ஆமைகள் முட்டை இடுவதற்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் வரும். இவ்வருடம் இருநூற்றுக்கும் அதிகமாக இறந்த கடல் ஆமைகள் கரை ஒதுங்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.


சென்னையை பொறுத்தவரை வனத்துறை மூன்று இடங்களில் ஆமை முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்கான நிலையங்களை ஏற்படுத்தி உள்ளது. அவை பெசன்ட் நகர், நீலாங்கரை மற்றும் கோவளம். இந்த மூன்று மையங்களில் தான் வனத்துறையும் தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து முட்டைகளை எடுத்து பத்திரமாக இந்த மையங்களில் வைத்து 45 முதல் 60 நாட்களுக்குள் அவைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியே வந்தவுடன் கடல் நீரில் அவற்றை விடும் பணி ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

20240221154058449.jpg



வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இறந்த கடல் ஆமைகளின் உடல்கள் அதிக அளவில் கரை ஒதுங்கின. அதிக எண்ணிக்கையில் இறந்த ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியதால் அவற்றை உடனேயே அந்தந்த கடல் பகுதிகளில் வனத்துறை புதைத்து விட்டது அதே போல கடந்த மாதமும் அதிக அளவில் இறந்த கடல் ஆமைகளின் சடலங்கள் கரை ஒதுங்கின, என்கின்றனர் அவர்கள்.

ஒருபுறம் இறந்த ஆமைகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, மற்றொருபுறம் முட்டை இட வரும் பெண் ஆமைகளின் வரத்து ஜனவரி மாதத்தில் பிப்ரவரி மாதத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது என்கின்றனர் வனத்துறையினர்.


ஆனால் மார்ச் மாதத்தில் திடீரென முட்டை இட வரும் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாத துவக்கத்தில் இருந்து கடந்த வாரம் வரை 40 ஆமை கூடுகளை கண்டெடுத்தனர் வனத்துறையினர். அவற்றிலிருந்து 4,100 முட்டைகள் எடுக்கப்பட்டு அவைகள் பத்திரமாக பொரிப்பகங்களில் வைக்கப்பட்டன.

ஆமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஒரு உயிரியலாளர் கூறுகையில் கடந்த இருபது வருடங்களாக முட்டை இட கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு வரும் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல இந்த ஆமைகள் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கில் வலைகள் மற்றும் டிராலர் வகை வலைகளும்தான் கடலாமைகளுக்கு முக்கிய எதிரிகள். இம்மாதிரியான வலைகளில் சிக்கிதான் பெரும்பான்மையான ஆமைகள் இறக்கின்றன. எனவே மீனவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். கடல் ஆமைகள் அவர்களது வலைகளில் சிக்கினால் உடனே அவற்றை விடுவிக்கும் வழிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும், என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

ஜனவரி முதல் கடந்த வாரம் வரை, வனத்துறை சென்னை கடற்கரை பகுதிகளில் இருந்து 20,000திற்கும் அதிகமான முட்டைகளை சேகரித்து அவற்றை பொரிப்பகங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். பொதுவாக மார்ச் மாதம் முட்டை இட வரும் ஆமைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். ஆனால் இந்த மார்ச் மாதம் ஆமைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது அனைவருக்கும் ஓர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, என்கின்றனர் வனத்துறையினர்.

20240221154512152.jpg



முட்டையில் இருந்து வந்த எண்ணூருக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் ஜனவரி மாதத்தில் வனத்துறையினரால் கடலில் விடப்பட்டது. அதன் பிறகு இந்த மாதத்தில்தான் முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளிவர தொடங்கும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

இந்த வருடம் கடல் ஆமை வரத்து ஒடிசாவில் உள்ள ரிஷிகுல்யா மற்றும் காஹிர்மாதா கடற்கரைகளில் அதிக எண்ணிக்கையில் இல்லை என்கின்றனர் வனத்துறையினர். இந்த இரண்டு கடற்கரைகளிலும் ஆயிர கணக்கில் ஆமைகள் முட்டையிட வருடா வருடம் வந்து போகும். இந்த நிகழ்விற்கு 'அரிபடா' என கூறுகின்றனர். எனவே இந்தியா முழுதும் ஆமைகள் முட்டையிட வருவது இந்த வருடம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் அவர்கள்.