தொடர்கள்
கவர் ஸ்டோரி
தேர்தல் திருவிழா?! -விகடகவியார்

பா.ம.க பாஜகவில் ஐக்கியமான கதை

20240222091243561.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி எல்லாம் போட்ட புளிக்காத மோர் கொண்டு வந்து வைத்துவிட்டு 'வெயிலுக்கு நல்லது ' என்று சொல்லிவிட்டு போனான் ஆபீஸ் பையன். நாம் ' பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவிற்கு கடைசியில் தண்ணி காட்டிவிட்டது என்று தொடங்கினோம்.

பாட்டாளி மக்கள் கட்சி., அதிமுக, பாரதிய ஜனதா இரண்டு கட்சிகளுடனும் பேசிக் கொண்டுதான் இருந்தது. டாக்டர் ராமதாஸ் அதிமுகவுடன் பேசிக் கொண்டிருந்தார். அன்புமணி ராமதாஸ் பாரதிய ஜனதாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் எடப்பாடியிடம் பேசி ஏழு தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா என்று முடிவானது செல்பேசியில் காணொளி மூலம் எடப்பாடி அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாஸ் இருவரிடமும் பேசி மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது என்று விகடகவியார் சொன்னபோது நாம் குறிக்கிட்டு 'டாக்டர் ராமதாசை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மூன்று முறை பார்த்ததாக கேள்விப்பட்டோமே 'என்று சொன்னதும் நம்மை ஒரு மாதிரி முறைத்து 'நீர் சொல்வதெல்லாம் போன வார தகவல் நான் இந்த வாரம் பற்றி பேசுகிறேன் 'என்றவர் .

முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் மூன்றாவது முறையாக டாக்டர் ராமதாசை சந்தித்தபோது நீங்கள் பாரதிய ஜனதாவுடன் பேசிக்கொண்டு இருப்பது எங்களுக்கு தெரியும். இனிமேல் கூட்டணி பேச வரமாட்டேன் முடிவு உங்கள் கையில் என்று சொல்லி வந்து விட்டார் சி.வி .சண்முகம்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர் அருள் எடப்பாடிக்கு நெருக்கம் என்பதால் அவர் தான் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார். ஆனால் அன்று இரவு டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு டெல்லியில் இருந்து ஒரு முக்கிய பிரமுகர் பேசி அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை எல்லாம் எடுத்து சொல்லி அது எப்படி எல்லாம் இனிமேல் போகும் என்று சொன்னதை தொடர்ந்து தான் பாஜக பாமக கூட்டணி உறுதியானது.

மறுநாள் காலை அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இருவரும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த போது வாசலில் காத்திருந்து அன்புமணி அவர்களை வரவேற்று சால்வை அணிவித்தார்.

அதன் பிறகு சிற்றுண்டி பிறகு தொகுதி பங்கீடு பற்றி பேசி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தயாராக எடுத்து வந்திருந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை டாக்டர் ராமதாஸிடம் தந்து கையெழுத்து போட சொன்ன போது அவர் படித்துப் பார்த்து கையெழுத்து போடும் பழக்கம் உள்ளவர் என்பதால் படித்துப் பார்த்துவிட்டு ராஜ்யசபா பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே என்று கையெழுத்து போடாமல் திருப்பித் தந்தார். உடனே அண்ணாமலை அமைச்சர் முருகன் இருவரும் மருத்துவர் ராமதாசை தனியாக அழைத்துச் சென்று சில விஷயங்களை சொல்லி மேலும் சில விஷயங்களை டெல்லியில் இருந்து டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸிடம் பேசச் சொன்ன பிறகு டாக்டர் ராமதாஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.

20240222170914232.jpeg

பெரும்பான்மை பாட்டாளி மக்கள் கட்சி இந்த கூட்டணியை விரும்பியதாக தெரியவில்லை. டாக்டர் ராமதாஸ் சேலம் பொதுக்கூட்டத்துக்கு முதலில் வருவதாக இல்லை. பிரதமர் கலந்து கொள்ளும் அந்த கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்கிறீர்கள் என்று அன்புடன் கட்டளையிட்டு அழைத்து வந்தார் அண்ணாமலை.

இதே போல் அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாய்ப்பு என்ற உத்தரவாதமும் இதுவரை பேசப்படவில்லை. இந்த விஷயம் எல்லாம் கேள்விப்பட்ட எடப்பாடி ,பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளைத் தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக பக்கம் வரலாம் என்று எதிர்பார்க்காதீர்கள் அதற்கான கதவு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது என்று கோபமாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து இருக்கிறார் '' என்றார் விகடகவியார்.