
நாம் நினைத்தோம், வருங்காலத்தில் விஜய்யின் தவேக, உதயநிதி காலத்தின் திமுகவுக்கு ஆபத்தாகலாம் என்று..
ஆனால் இன்று ஸ்டாலினையே வென்று விட்டார் விஜய்.
முக்கால்வாசி தொகுதிகளில் தவேக சார்பாக யார் வேட்பாளர் என்று கூட தெரியாமல் விஜய் அண்ணாவிற்காக விசிலுக்கு சந்தோஷமாக ஓட்டு போட்டுத்தாக்கி விட்டார்கள் மக்கள்.

“ ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் தான் நிற்கிறான் என நினைத்து வோட்டு போடுங்கள்” என விஜய் பேசியது பெரிதல்ல.
ஆனால் உண்மையிலேயே அந்த அதிசயமும் நடந்தது.
தமிழக அரசியலில் “ நடக்கும் என்பார் நடக்காது” என்று நாம் நம்பி நிம்மதியாக இருந்த சமயத்தில் “நடக்காதென்பார் நடந்துவிடும்” என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
அதில் முதல் விஷயம் விஜய் இரு கழகங்களையும் பின்னுக்குத்தள்ளி பிரமாண்ட வெற்றி பெற்றது.
அதில் இரண்டாவதாக ஏன் இதுவும் நடக்க கூடாது!? அதாவது திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்தால் தவேகவை மிஞ்சி, ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமா ? என்று நினைக்காதீர்கள்.
ஓபிஎஸ் எல்லாம் திமுகவில் ஐக்கியமாகி தேர்தலில் நின்று “ மாண்புமிகு தளபதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள்“ என்றெல்லாம் கட்டியம் கூறுவார் என கனவா கண்டோம்!?.
அது நடக்கும் போது இது நடக்காதா?
தமிழ்நாட்டை தனித் தனியாக காப்பாற்றுவதற்கு பதில் நாங்கள் ஒன்றாகசேர்ந்து காப்பாற்றுகிறோம் என இரு கட்சிகளும் சொன்னாலும் சொல்லலாம்.
2.5 ஆண்டுகள் திமுக ஆட்சி
2.5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி
முதல்வர்களாக உதயநிதிஸ்டாலின் மற்றும் இபிஎஸ்.
இரண்டு கட்சிகளின் வாக்குறுதிகளை அவரவர் ஆட்சியில் நிறைவேற்ற வேண்டியது தான்.
தொண்டர்கள் நிலை கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கும்.
பரமவைரிகளாக இருந்தவர்கள் இப்போது எப்படி இருப்பது என்று யோசிப்பார்கள்.
தலைவர்களே மாறுகிறார்கள் என தொண்டர்கள் மன ஆறுதல் அடைய வேண்டியது தான்.
இதையெல்லாம் ஒரு வேடிக்கைக்காக சொன்னாலும் இதையெல்லாம் தாண்டி ஒரு உண்மை மிக நன்றாக புலப்படுகிறது.

திராவிடம், தலித்தியம் , சிறுபான்மை உரிமைத்துவம், இந்துத்துவம், கம்யூனிச தத்துவம், தமிழ்தேசியத்துவம் என எல்லாவற்றையும் அடித்து, துவைத்து, தூக்கி கடாசி விட்டு விஜய்த்துவம் என்ற ஒன்றை புதிதாக கொண்டு வந்து இறக்கி, மிக பிரமாண்டமான வெற்றிக்கனியை முதல் முயற்சியிலேயே தட்டி தூக்கி விட்டார் விஜய்.
சும்மா இல்லை அந்த அத்தனை “துவத்தில்” இருந்த மக்கள் தான் எந்த “இலவசமும்” எங்களுக்கு தேவையில்லை என விஜய்க்கு ஓட்டு அளித்து அவரை வெற்றி அடைய வைத்திருக்கிறார்கள்.
ஐந்து வருடங்கள் தடையில்லா ஆட்சி , ஆனால் அனுபவம் இல்லாத தவேக, மக்களின் பேராதரவு என ஒரு காக்டெய்ல் ஸ்டைலில் விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நல்ல முறையில் ஆண்டால் தமிழக அரசியலில் தவேக தொடர்ந்து கோலோச்சலாம்.
இல்லையென்றால் “ஒரே முறை அதிசயம்” என இந்த வெற்றி ஆகி விடும்.

Leave a comment
Upload