தொடர்கள்
விகடகவியார்
ஆறு மாத விஜய் பரீட்சை !! பாஸா ?? ஃபெயிலா ??

20261013175318715.jpg

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியில் பங்கு என்று தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் அறிவித்தும் யாரும் அவருடன் கூட்டணிக்கு வரவில்லை.

ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததாக தெரியவில்லை.

அவரது தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததாக தெரியவில்லை

தேர்தல் முடிவுகள் திடுக்கிடும் திருப்புமுனையாக கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆட்சி அமைக்க 11 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இருந்த போது முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ்.

திமுக அனுமதியுடன் விடுதலை சிறுத்தை கட்சி கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவிக்க ஜோசப் விஜய் முதல்வரானார்.

காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சி முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியில் பங்கு பெற்றது.

ஆறு மாதம் இந்த ஆட்சியை நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று சொன்ன திராவிட கட்சிகள் ஆறு நாட்களில் ஜோசப் விஜய் கடுமையாக சாடியது அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தி கிட்டத்தட்ட 25 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

அதிமுகவை உடைக்க சதி என்று நேரடியாக எடப்பாடி குற்றம் சாட்டினார்.

இது குதிரை பேர அரசு என்றும் விமர்சனம் வைக்கப்பட்டது.

திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது 'சோபா மாடல் 'அரசு என்று விமர்சனம் செய்தார். புஷ்பா படத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சோபா அனுப்பி ஆட்சி மாற்றம் செய்வார் அதுபோல்தான் என்று இந்த உதாரணத்தை சுட்டிக்காட்டினார் உதயநிதி ஸ்டாலின்

ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே தனது ஆஸ்தான ஜோசியரை அரசு ஆலோசகராக நியமித்து அது சர்ச்சை ஆனதும் ஆணை வெளியிட்ட அன்றே அந்த ஆணையை திரும்ப பெற்றார் ஜோசப் விஜய்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சட்டம் மற்றும் ஒழுங்கு துறைக்கு பொருந்தாது. சட்டம் பொழுது பற்றிய தகவல்கள் தரப்படாது என்று ஒரு அரசாணை வெளியிட அதற்கு எதிர்ப்பு கிளம்ப அன்றே அந்த ஆணை திரும்ப பெறப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை பதவிலகல் செய்து அன்றே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததும் சர்ச்சையானது.

இது போதாது என்று முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தூண்டி விட காங்கிரஸ் சங்கடப்பட்டு தர்மசங்கடத்திற்குள்ளானது.

முதலமைச்சராக பதவியேற்ற அன்று கருவூலத்தை சுத்தமாக துடைத்து வைத்திருக்கிறார்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை என்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழக நிதிநிலை பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு தமிழகம் கடன் மாநிலமாக இருக்கிறது என்று சொன்ன இந்த அரசு ஆட்சி அமர்ந்த மூன்று மாதங்களில் 38 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது.

அடிக்கடி ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது விவாத பொருளாக இருக்கிறது.

சட்டம் ஒழுங்கும் திமுக ஆட்சியில் எப்படி மோசமாக இருந்ததோ அப்படித்தான் இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் தீபாவளி அன்று 13 கொலைகள் நடந்தது என்று விமர்சனம் செய்தால் 13 எல்லாம் இல்லை எட்டு கொலைகள் தான் நடந்தது என்று காவல்துறை சப்பை கட்டுகிறது.

அமைச்சர் ஒருவர் இதெல்லாம் இது போன்ற பண்டிகை காலங்களில் நடக்கத்தான் செய்யும் என்கிறார்.

சென்ற வாரம் கூட துணை சபாநாயகரும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் தேவையற்ற சர்ச்சையில் சிக்கி விமர்சனம் ஆகி இருக்கிறது.

இது போதாது என்று தமிழக வெற்றிக்காக சட்டமன்ற உறுப்பினர்களைவிலைக்கு வாங்க இருக்கிறார்கள் என்ற ஒரு வதந்தி பரவ உடனே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அவசர அவசரமாக சென்னைக்கு வர சொன்னது ஆளுங்கட்சி. அவர்களை மூன்று நாட்கள் இங்கேயே தங்க வைப்பது என்பது முதல் திட்டம்.

அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை பத்து பத்து சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் சந்தித்து ஜாக்கிரதையாக இருங்கள் உங்களை ஏதாவது ஒரு வம்பு வலையில் சிக்க வைக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்யும் விலை போய் விடாதீர்கள் என்று சொல்லி பட்டுப்புடவையும் பட்டு சட்டை பட்டு வேட்டி கொடுத்து தொகுதிக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார் ஜோசப் விஜய்.

அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக இரண்டும் திட்டமிட்டு இருக்கிறது . அதைமுதல்வர் எப்படி சமாளிப்பார் என்பது தெரியவில்லை.

தொழில் முதலீடுகளை அதிக அளவு நாங்கள் தான் கொண்டு வருகிறோம் கூறுகிறார்கள் ஆளுங்கட்சியினர். ஆனால், பல தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்று விட்டன என்று எதிர்க்கட்சிகள் பட்டியல் போடுகின்றன.

பொதுமக்களை பொறுத்தவரை குறிப்பாக இளம் தலைமுறையினர் எல்லோருமே ஆட்சிக்கும் அதிகாரத்துக்கு புதிய மாற்றங்கள் அனைத்தும் சரியாகி விடும் என்று இப்போதும் நம்புகிறார்கள்.

விஜய் மீது என்று இருக்கும் இளம் வாக்காளர்கள் கூட்டம் இன்னமும் விஜய் ஆதரவில் தான் இருக்கிறது.

அதுதான் இந்த ஆட்சியின் இப்போதைய பலம்.

ஆறுமாதம் என்பது ஆண்டு இறுதி பரீட்சை என்று சொல்ல முடியாது. மிட் டெர்ம் டெஸ்ட் என்று சொல்லலாம். அப்படி பார்த்தால் இது வரை ஃபெயில் மார்க் தான். ஆனால் நன்றாக படித்தால் பாஸாகி விடலாம். இன்னமும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.