தொடர்கள்
அரசியல்
ஆலயத்திலும் அரசியலா ?? - பா அய்யாசாமி

20261014050122431.jpeg

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானமானது, திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தின் உள்ளே உள்ளது.குமரக் கட்டளையின் சார்பாக கந்த சஷ்டி உற்சவம் பன்னெடுங்காலமாகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

தேவஸ்தானத்தின் உற்சவ மூர்த்தி (முருகர்) தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் வைத்து பூஜிக்கப் பட்டு உற்சவங்கள் நடைபெற வேண்டும் என்று மாண்பமை நீதிமன்றம் முன்னரே உத்தரவிட்டு வழக்கம்போல் நடைபெற்று வந்த உற்சவத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் உற்சவ மூர்த்தியை இம்முறை வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது பிரச்சனையின் ஆரம்பம்.

பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திட,வழக்கம்போல் உற்சவத்தை நடத்திடுமாறு தெரிவித்துள்ளார்கள் திருவாவடுதுறை ஆதினத்தினர்.

கந்த சஷ்டி உற்சவமும், ஸ்ரீ மயூரநாத சுவாமி தேவஸ்தானத்தில் துலா உற்சவமும் ஏக காலத்தில் நடைபெற்று வருகிறது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகளும்,ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்களும் குமரக்கட்டளை மண்டபத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்துவந்தார்கள்.

தருமை குருமணிகள் திருச்செந்தூர் தலத்தில்(சஷ்டி விரதம்)மெளனம் அனுஷ்டிக்கும் வேளையில் இவ்வாறு திருவாவடுதுறை நடந்துக்கொண்டது அழகல்ல, முன்னரே இது பற்றி தெரிவித்திருந்தால் குருமணிகள் ஆலோசனைச் செய்து நல்ல முறையில் ஆலோசித்துஒரு முடிவினை அணுகியிருப்பார்கள்.

நடந்த நிகழ்வு வேண்டுமென்றே தருமை ஆதினத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் நோக்கத்தில் நடைப் பெற்றதாக தெரிகிறது என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற துலாமாத அமாவாசைத் தீர்த்தவாரி நாளில் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம், ஆதினத்தைச் சார்ந்த அ/மி வதான்யேசுவரர்(வள்ளலார்) கோவிலின் அஸ்திரதேவர் அபிஷேகம் முடிந்தவுடன் காவேரியில் இறங்கி தீர்த்தம் கொடுக்க தயாரானபோது, ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் அவர்கள், எதிர்திசையில் நடக்கும் ஸ்ரீ மயூரநாத சுவாமி கோவிலின் அஸ்திரதேவர் பூஜை நிறைவு பெற்றதா என்று கேட்டு, அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக உடனிருந்தவர்கள் தெரிவித்ததும், அபிஷேகம் முடியும் வரை காத்திருந்து சமகாலத்தில் தீர்த்தவாரி நடைபெற வழிவகைச் செய்து பொறுமையின் அவதாரமாய் இருந்து அருளினார்கள்.

அத்தகைய நிதானமும், எல்லோருக்கும் நியாயமானதை மட்டுமே செய்பவர்கள் தருமை குருமணிகள்.

ஆலய,மடத்து விவகாரங்களில் கருத்துக் கூறுவதற்கு அனுபவமோ, வயதோ எனக்கில்லை. இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி பத்து நாட்களும் விழா தடையின்றி நடந்தால்தான் நகரத்திற்கு நல்லது.

ஏற்கனவே காவிரியில் நீர் இல்லை,சுத்தமும் இல்லை,பாதாள சாக்கடைநீர் காவிரியில் கலப்பதினால் நீராடுபவர்களும் யோசிக்கின்றார்கள் கடைக்கோடி அடியவர்களில் ஒருவனாக, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல், கந்த சஷ்டி உற்சவமும் கடைமுக தீர்த்தவாரி நிகழ்வும் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல தாய் அபயாம்பிகை அருள்புரிய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.