தொடர்கள்
சோகம்
புதைக்கப்பட்ட குழந்தை மீட்பு !! - மாலா ஶ்ரீ

20261014050758672.jpg

அமெரிக்காவின் தெற்கு கரோலினா (South Carolina) மாகாணம், லெக்சிங்டன் கவுன்டி நகர் பகுதியில் வசிக்கும் தனது பாட்டியின் பராமரிப்பில் கோவா ஷார்ப் (Koah Sharpe) எனும் 11 மாத ஆண் குழந்தை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பாட்டியிடம் வளர்க்கப்படும் 11 மாத ஆண்குழந்தை கோவா ஷார்ப்பை, யாருக்கும் தெரியாமல் அக்குழந்தையின் தந்தை மைக்கேல் கோமர் (Michael Comer) எடுத்து சென்றிருக்கிறார்.

தனது வீட்டுக்குள் குழந்தை காணாமல் போனது குறித்து மறுநாளே லெக்சிங்டன் கவுன்டி போலீசில் பாட்டி புகார் அளித்தார். அன்றிரவே பேட்ஸ்பர்க் (Batesburg) பகுதியில் மைக்கேல் கோமரை லெக்சிங்டன் கவுன்டி போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கடந்த 10-ம் தேதி மதியம் அக்குழந்தையின் தாத்தா வீட்டுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் புதிதாக மண் தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்ததை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர். அந்த இடத்தை மீட்பு குழுவினர் அவசரமாகத் தோண்டியபோது, சுமார் ஒரு அடி ஆழமுள்ள பள்ளத்துக்குள் ஒரு குழந்தையின் அழுகுரல் மீட்பு குழுவினருக்கு கேட்டிருக்கிறது.

அப்பள்ளத்தில், டர்க்கி துண்டினால் சுற்றப்பட்டு இரும்பு கம்பியால் ஆன ஒரு நாய் கூண்டுக்குள் குழந்தை கோவா ஷார்ப் அடைக்கப்பட்டு மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நாய் கூண்டைச் சுற்றிலும் டர்க்கி துண்டு கட்டப்பட்டு இருந்ததால், அதனுள்ளே சிறிய அளவிலான காற்று புகும் இடைவெளி உருவாகியுள்ளது.

மேலும், அப்பகுதியில் நிலவிய குளிரான தட்பவெப்பநிலையையும் டர்க்கி துண்டினாலும்மூச்சுத் திணறல் ஏற்படாமல் உயிர் பிழைக்க உதவியதாக லெக்சிங்டன் கவுன்டி ஷெரிப் ஜே கூன் (Jay Koon) தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது.

ஏற்கெனவே திருட்டு வழக்கில் கைதான 11 மாத ஆண்குழந்தையின் தந்தை மைக்கேல் கோமர்மீது, தற்போது கொலைமுயற்சி, குழந்தையை கடத்தி துன்புறுத்தல் உள்பட பல்வேறு கடுமையான குற்றப்பிரிவுகளின்கீழ் லெக்சிங்டன் கவுன்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

கிராதகன்.