
தான் உண்டு, தன் வீணை உண்டு என்றிருந்த சமத்துப்பிள்ளை ராவணனை அவன் அம்மா உசுப்பி விட...
தன் குலத்தின் மேன்மைக்காக பிரம்மாவை நோக்கி ஒரு காலில் நின்று கடுந்தவம் இருந்து, தேவர்களாலும், அசுரர்களாலும், கந்தர்வர்களாலும் கொல்லப்பட முடியாத வரத்தைப் பெறுகிறான் ராவணன்.
இதில் மனிதர்களை அற்பமாக எண்ணி, அவர்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டு, ஆணவத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறான் மாவீரனான ராவணன்.
அயோத்தியில் தசரதனின் மூத்த மகனாகப் பிறந்து, விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்து, ஜனகரின் வில்லை ஒடித்து, அவர் மகள் சீதையை மணந்து, பின் தந்தை சொல் மீறாமல் காட்டுக்குத் தம்பி லட்சுமணன் மற்றும் சீதையுடன் செல்கிறான் தசரத ராமன்.
அரக்கர் வதம் செய்து, சீதையை இழந்து, தேடித் திரிந்து, ராவணனால் சீதை கடத்தப்பட்ட செய்தியை இறக்கும் நிலையில் ஜடாயு சொல்லக் கேட்டு, சீதையை மீட்கச் சபதம் செய்கிறான் ஜானகி ராமன்.
இத்துடன் ராமாயணம் பாகம் ஒன்று முடிகிறது.
சினிமா திரையில்,என்.டி. ராமராவ் (ராமன்), பத்மினி (சீதை), சிவாஜி (பரதன்) நடித்த அந்தக் காலத்துச் சம்பூர்ண ராமாயணத்துக்குப் பிறகு நாம் ரசித்துப் பார்க்கும், தொழில்நுட்பத்தின் உச்சத்தில் எடுக்கப்பட்ட 3D ராமாயணம்தான் இந்த ராமாயணம் – 1.
கடுந்தவம் இருந்து பிரம்மனிடம் வரம் வாங்கும் ராவணனின் நடனம்...
ஜனகரின் வில்லை ஒரு கையில் எடுக்கும் ராமன்,.
பின்னர் நாண் ஏற்ற, சீதை மகிழ, வில் உடையும் காட்சி...
பரசுராமருடன் ராமன் மோதல்
வனத்தில் அசுரர்களுடன் யுத்தம்...
பின்னர் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் அந்தரத்தில் நடக்கும் மயிர்க்கூச்செறியும் சண்டை...
எல்லாமே தொழில்நுட்பம் தந்த அற்புதங்கள்தான்.
முதல் பகுதியில் பெருமையை முற்றிலும் தட்டிக்கொண்டு போவது ராவணன்தான்.
ராவணனாக நடிக்கும் யாஷுக்கு அட்டகாசமான தோற்றம், உடல் மொழி மற்றும் பாவனைகள்.
ரன்பீர் கபூரும் சாய் பல்லவியும் சிறப்பான ராமர் – சீதை ஜோடி.
பரசுராமராகவும் வந்த ரன்பீரின் அசத்தல்
லட்சுமணனாக வரும் ரவி துபேயின் குறும்பு, ராமனின் வனவாசத்தை ஒரு வசந்தமாக்குகிறது.
மெய்மறக்க வைக்கும் இசை. நம் ஏ.ஆர். ரஹ்மானும் மேற்கத்திய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் சேர்ந்து வடித்த இந்தியச் செவ்வியல் இசையும் மேற்கத்திய இசையும் இணைந்த ஓர் அழகிய கலவை.
அற்புதமான ஒளிப்பதிவு.
தியேட்டரில் 3D கண்ணாடியைக் கொடுத்தபோது, அதை மாட்டிக்கொண்டதுதான் நமக்குத் தெரியும். இந்தப் படத்தில் நாம் படம் முடியும் வரை அந்த 3D கண்ணாடியை அணிந்திருப்பதையே மறந்துவிடுகிறோம். அவ்வளவு நேர்த்தியான தொழில்நுட்பம்!
மாபெரும் காவியமான ராமாயணத்தைத் திரைப்படமாக எடுக்கும்போது பக்தியும் நிதானமும் ரொம்பத் தேவை.
வால்மீகி ராமாயணம் தவிர, ஏகப்பட்ட மற்ற ராமாயணக் கதைகளும் பரவலாக இருக்கும் இந்தியாவில் ராமாயணத் திரைக்கதை அமைப்பு என்பது மிகப்பெரிய சவால்தான்.
அனைவரையும் ராமாயணக் கதை அமைப்பால் திருப்திப்படுத்த முடியாது. அதனால் சில காட்சிகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட முடியாமல் இருக்கலாம்.
இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய படைப்பு என்ற வகையில், இந்த முயற்சிக்கு நம் முழு ஆதரவையும் அளிக்கலாம்.
இயக்குநர் நித்தீஷ் திவாரிக்கு நம் பாராட்டுகள்!
எதிர் கருத்துக்களும் இந்த படத்தை பொறுத்தவரை ஏராளமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Leave a comment
Upload