முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்ற அன்று போதை இல்லா தமிழகம் அமைப்போம் என்று சொல்லிவிட்டு, சத்தமில்லாமல் டாஸ்மாக் விற்பனையைபல வழிகளில் அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்த அரசு. தீபாவளி நாளில் இரண்டு நாட்களில் மட்டும் 441 கோடி டாஸ்மாக்கில் வசூல் ஆகி இருக்கிறது. தீபாவளி நாளில் மட்டும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட பத்து பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவற்றிற்கு முக்கிய காரணம் போதை கலாச்சாரம் என்பதை அரசே ஒப்புக் கொள்கிறது. போதையில் வீட்டிலிருந்த பொருட்களை உடைத்ததை பொறுக்காமல் தனது மகனை தடியால் அடித்து தாய் கொன்றுள்ளார்.
பெற்ற மகனையே கொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. இவை எல்லாமே பூரண மதுவிலக்கு அவசியத்தை உணர்த்துகிறது.
அரசாங்கத்தின் முக்கிய வருமானமே டாஸ்மாக் என்று ஆகிவிட்ட நிலையில் இதை சாத்தியப்படுத்த அரசாங்கம் யோசிக்கும். ஆனால், இளைய தலைமுறை எதிர்கால நலன் கருதி டாஸ்மாக் விஷயத்தில் அரசு கடுமையாக முடிவெடுப்பது தான் எல்லாவற்றுக்கும் நல்லது. முதல் கட்டமாக முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஓரளவு குறைக்கலாம்.
இதே போல் டாஸ்மாக் செயல்படும் நேரத்தை அரசு நிச்சயம் குறைக்க வேண்டும். கடைகள் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் கொள்கை முடிவாக இனி இல்லை என்று முடிவு செய்ய வேண்டும். அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
வேறு எந்த நாட்டிலும் குடியும் போதையும் இப்படி ஒரு கேடு கெட்ட நிலையை உருவாக்கியது போல தெரியவில்லை. தமிழ்நாடு சீர்கெட்டு போயிருக்கிறது. சந்தேகமேயில்லை.

Leave a comment
Upload