தொடர்கள்
தேர்தல் திருவிழா
அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார்..? ஹாங்காங் சீன சோதிடரின் கணிப்பு! விகடகவி எக்ஸ்க்ளூசிவ்!! - ராம்

20210227014051474.jpeg

மார்ச் 2019ல் வெளியான இந்தக் கட்டுரை பலருக்கு நினைவிருக்க கூடும்....

ஃபிளாஷ்பேக்

நம்மூரில் கருத்துக் கணிப்பு இருக்கலாம். ஆருடம் கேட்கலாம். பட்டி மன்றம் நடத்தலாம். தேர்தலுக்கு முன் எல்லா முயற்சியும் செய்யலாம்.

ஆனால் எல்லாவற்றிலும், மனிதர்களிடம் ஏதேனும் ஒரு கட்சியின் பேரில் கொஞ்சூண்டாவது ஒரு சார்பு இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

இது இயற்கை. ஏனெனில், நாம் அன்றாடம் அந்தந்த தலைவர்களையோ கட்சிகளையோ தொடர்ந்து பார்த்து வருவதால்.

அதனால் ஒரு சீன சோதிடரிடம் இந்த 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்கலாம் என்று எண்ணம் எழுந்தது.

நான் பார்த்தது மாஸ்டர் ஜோசப் என்ற சோதிடர். இவர் ஏதோ சாதாரண ஜோசியர் அல்ல....

20210227014133386.jpg

எம்.பி.ஏ படித்து விட்டு, ஒரு பன்னாட்டு நிறுவனத்திலும், வங்கியிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். வேலையை விட்டு விட்டு ஜோதிட துறைக்கு வந்தவர்.

அது மட்டுமல்ல... சி.என்.என். போன்ற அமெரிக்க தொலைக்காட்சிகளுக்கு, ஹாங்காங் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் பொன்ற விஷயங்களை வருடந்தோறும் கணித்துச் சொல்பவர்.

அவரைப் பற்றிய தகவல்களுக்கு இந்த வலைத் தளத்தைப் பார்க்கலாம்.

http://masterkalok.com

அவருக்கு தேவையானது எல்லாம் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், அந்த ஊரின் தீர்க்கரேகை அட்சரேகையின் விலாசம் கூகுளின் தயவோடு.

அவ்வளவு தான்.

இந்தப் படங்களை மட்டுமே கொடுத்திருந்தேன்.

இநத தகவல்களையெல்லாம் வாட்சப் செய்து விட்டு, நேராக முன்னே சென்று நின்றேன்.

இனி சீன சோதிடம்... அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றி என்ன சொல்கிறது??

மாஸ்டர் ஜோசப்புக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லை என்பது வாசகர்களுக்கு தெரியும். அதனால் மன்னிக்கவும் பேட்டி ஆங்கிலத்தில்.


இந்தக் கட்டுரை வெளியான பின்பு தேர்தலுக்கு பின் ஒரு ஃபாலோ அப் கட்டுரையும் வராமலில்லை.

அது இங்கே……

பலித்தது சீன சோதிடம்! விகடகவி ஸ்பெஷல்!!

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு புறம் இருக்க... வித்தியாசமான முறையில் சீன சோதிடம் பார்த்தால் என்ன என்று விகடகவியில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

யூடியூபில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் பார்த்து, ஏகத்திற்கும் காமெண்ட் செய்த வண்ணம் இருந்தனர்.

நீங்கள் காசு கொடுத்து அவரை சொல்ல வைத்திருப்பீர்கள் என்று துவங்கி, இங்கிருக்கும் ஜோசியர்களுக்கு தெரியாததையா அவர் சொல்லி விடப் போகிறார் என்ற அங்கலாய்ப்பு வரையில் பல விதமான கருத்துக்கள்.

ஆங்கிலம் பேசத் தெரிந்த மாஸ்டர் ஜோசப்பை தொடர்பு கொண்டு இப்படி ஒரு யோசனை இருக்கிறது என்று சொன்னவுடன்.... சம்மதித்தவர், அவர் செலவு செய்யும் நேரத்திற்கு மட்டுமே சொற்பமாக ஒரு தொகை வாங்கிக் கொண்டார்.

மற்றபடி அவருக்கு என்ன கட்சி, யார் யார் என்ற விபரங்களையெல்லாம் கொடுக்கவில்லை.

மோடி, ராகுல், எடப்பாடி, ஸ்டாலின் ஆகியோரது பிறந்த தேதி, நேரம். இந்திய அளவு, மாநில அளவு தேர்தல் என்று மட்டுமே சொல்லப்பட்டது.

அவரது கணிப்பின் முடிவில் மோடி ஜெயிப்பார், எடப்பாடி ஜெயிப்பார் என்று தான் சொல்லியிருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அவரை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

தேசிய அளவில் உங்கள் ஆருடம் பலித்து விட்டது. ஆனால் மாநிலங்களில் நீங்கள் சொன்ன ‘பலனசுவாமி’ தோற்று விட்டார் என்றேன்.

அப்போது உங்கள் மாநிலத்தில் புதிய அரசு வருகிறதா என்று கேட்டார்.

இல்லை. மாநில அரசு மாறாது, அது அப்படியே தொடர்கிறது. அது சம்பந்தமான மாநில அளவு தேர்தலில் எடப்பாடி தேவையான இடங்களை வென்று விட்டார் என்றேன்.

அப்ப என் கணக்கு சரியாத்தானே இருக்கு என்றார்..?

அது சரி மாஸ்டர். ஆனால் ஒரு விஷயம். இனிமேல் தேர்தல் நடக்கும் போதெல்லாம் எங்க ஊர் அரசியல்வாதிகள் உங்களைத் தேடி வரப்போகிறார்கள் என்றதும் சிரித்தார் மாஸ்டர் ஜோசப்.

இந்த அரசியல் ஆருடம் ஓகே. ஆனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜாதக விவரங்களை கொடுத்தால் கூட தமிழ் மக்களின் மனதில் இருப்பதை மட்டும் எந்த மாஸ்டர் ஜோசப்பாலும் கணிக்க முடியாது போலும்!!

********************

20210227014522986.jpeg

சரி. இந்த முறை நம்ம மாநில தேர்தல்....

ஐந்து வேட்பாளர்களாக, எடப்பாடி, ஸ்டாலின், கமல்ஹாசன், தினகரன், சீமான் ஆகியோர் படங்களையும், அவர்கள் பிறந்த தேதி, ஊர், பூமத்திய ரேகைகள் விவரம் போன்ற தகவல்களையும் மாஸ்டர் ஜோசப்புக்கு அனுப்பி விட்டேன்.

ஆக அவருடைய சோதிடம் சுடச் சுட சொல்லி முடித்ததும் இன்றே பதிவேறுகிறது.

அவர் சொன்ன சீன ஆருடம் இங்கே யூடியூபில்….

நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் பகிருங்கள்.

தேர்தல் ரிசல்ட் வந்ததும் சீன ஆருடம் பலித்ததா என்று பார்க்கலாம்.

ஒரே ஒரு உறுதி மொழியை விகடகவி சார்பில் கொடுக்கிறேன். மாஸ்டருக்கு இவர்கள் படங்களையும், விவரங்களையும் கொடுத்தது தவிர, வேறு எந்த வித ஊகங்களையும் அளிக்கவில்லை. முழுக்க முழுக்க அவரது ஆருடம் மட்டுமே.!

சரி. முதல்வர் பற்றி கேட்டாயிற்று... கொசுறாக, இனாமாக ஒரு கேள்வி கேட்கலாம் என்று பேராசிரியர் ராஜன் 'கரோனா’, இந்த வருடம் இவ்வுலகை விட்டு ஒழியுமா என்று கேட்ட போது... மாஸ்டர் சொன்ன பதில், திருப்திகரமாக இல்லை.

சோதிடம்: மாஸ்டர். ஜோசஃப், ஹாங்காங்

பேட்டி உதவி: கார்த்திக் ராம்

ஒளிப்பதிவு உதவி: ராஜன், சங்கீதா.