
சில காலமாகவே ஆண்டுதோறும் அந்த மகானின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அக்பருக்கு வழக்கமாயிருந்தது. அதைத் தொடர்ந்து, ஆக்ரா அருகே உள்ள ஸிக்ரி என்னும் கிராமத்தில் வசித்து வந்த ஷேக் சலீம் சிஷ்டி என்னும் மகானைத் தரிசிக்கப் பாதயாத்திரையாகச் சென்றார் அக்பர். பல பெண்களோடு திருமணம் நடந்து, ஆண்டுகள் ஓடியும் வாரிசு இல்லாத குறை மன்னர் மனதை வாட்டிக்கொண்டு இருந்தது (வயது 27-தான்!). குறிப்பாகப் பிரச்னை ஏதுமில்லை. மனைவிகள் பலமுறை கர்ப்பம் தரித்தும் எல்லாமே குறைப் பிரசவம். சில குழந்தைகள் பிறந்து இறந்தன. எதிலும் தோல்வி அடையாமல் வாழ்ந்த அக்பர், இந்தக் ‘குறைப் பிரசவ’ப் பிரச்னையை வெல்ல முடியாமல் தவித்தார்!...
பல நிமிடங்கள் தியானத்தில் இருந்த மகான் சலீம் சிஷ்டி, கண்களைத் திறந்து எதிரே மண்டியிட்டுக் கவலையுடன் அமர்ந்திருந்த அக்பரைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு சொன்னார்: ‘‘பாதுஷா அவர்கள் கவலைப்பட வேண்டாம். யாரேனும் ராணி கர்ப்பம் தரித்தவுடன், குழந்தை பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் அவர் இந்தக் கிராமத்துக்கு வந்து தங்கவேண்டும். பிரசவம் இங்கேயே நிகழும். மன்னருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட ஆயுளுடன் கூடிய வாரிசு பிறக்கும்!’’
அதேபோல, ஆகஸ்ட் 30, 1569-ல் அக்பரின் ஒரு மனைவிக்கு (ஜெய்ப்பூர் மன்னரின் மகள்) ஓர் அழகான குழந்தை ஸிக்ரி கிராமத்தில் பிறந்தது. மகானின் நினைவாக ‘சலீம்’ என்று பெயரிடப்பட்ட இந்த மகன்தான், பிற்பாடு ‘ஜஹாங்கீர்’ என்ற பெயரோடு, அக்பருக்குப் பிறகு மகுடம் சூட்டிக் கொண்டவர்.
அதேபோல், ஸிக்ரி கிராமத்துக்கு 1570-ம் ஆண்டு இன்னொரு ராணி வந்து தங்கி, அக்பரின் இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தார் (முராத்). மறுபடியும் அதே கிராமத்தில் 1572-ல் மூன்றாவது மகன் தானியேல் பிறந்தார்.
முதல் மகன் சலீம் பிறந்தவுடனேயே மகிழ்ச்சியில் பூரித்துப்போன அக்பர், 1569-ல் ஆக்ரா அருகே ஸிக்ரி கிராமத்தில் ஒரு புதிய, அற்புதமான நகரை உருவாக்கினார். ஃபதேபூர் - அதாவது, ‘வெற்றி நகரம்’ என்று அழைக்கப்பட்ட இது, அக்பரின் மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆனது (ஃபதேபூர் அரண்மனை பற்றிப் பிற்பாடு..!).
முன்பே, 1563-ம் ஆண்டில் மதுரா நகருக்கு ஒரு முறை அக்பர் வருகை தந்தபோது, அங்கே கிருஷ்ணர் கோயிலுக்கு வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்குக் குறிப்பிட்ட தொகை வரியாக விதிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டுத் திகைத்து, உடனே அந்த வரிவிதிப்பை நீக்கினார் அக்பர். நாட்டில் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ‘ஜிஸியா’ என்னும் வரியையும் ரத்து செய்ய ஆணை பிறப்பித்தார் அக்பர். ‘‘நான் எல்லோருக்கும் பொது. இந்து-முஸ்லிம் யாவரும் என் குடிமக்களே!’’ என்று அறிக்கையும் விட்டார் மன்னர். அதோடு, நாட்டில் மற்ற மதங்கள் சம்பந்தமான பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடவும் அனுமதி வழங்கப்பட்டது. அரண்மனையில் இந்து ராணிகள் தீபாவளியையும், மற்ற இந்துப் பண்டிகைகளையும் உற்சாகமாகக் கொண்டாட ஆரம்பித்தனர். அரசர் அணிந்த விதவிதமான தலைப்பாகைகளில் இந்து டர்பன்களும் இடம்பெற்றன. சில சமயம், பண்டிகை சமயங்களில் நெற்றியில் இந்துக்கள் இட்ட குங்குமத்தைக்கூட அழிக்காமல் வளையவந்து, இஸ்லாமியக் குருமார்களுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தினார் அக்பர்! ‘‘இது என்ன… இஸ்லாமியக் கோட்பாடுகளையெல்லாம் மன்னர் அடியோடு கைவிட்டு விட்டாரா என்ன?!’’ என்று பெரியவர்கள் கவலையுடன் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
அக்பர் நினைத்ததோ வேறு! இந்த விஷயத்தில் ‘ப்ராக்டிகலாக’ இருக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். மொகலாய ஆட்சிக்கு முன்பு விதவிதமான, ஒன்பது இஸ்லாமிய ஆட்சிகள் வந்து போயாகிவிட்டது. ஒவ்வொன்றும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளே தாக்குப் பிடித்தது. ஏன்? இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்திய நாட்டை, அவர்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் நிரந்தரமாக ஆளமுடியாது. அச்சமேற்படுத்தி அவர்களை மாற்றிவிடவும் முடியாது. அன்பு ஒன்றால் மட்டுமே ஆட்கொள்ள முடியும்! - இதுவே அக்பர் தரப்பு விளக்கம்.
இந்தக் கோட்பாட்டை வெற்றிகரமாகப் பின்பற்றுவதற்கான துணிவும் பலமும் செல்வாக்கும் அக்பர் பாதுஷாவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். போலித்தனம் இல்லாமல் சக்ரவர்த்தி கடைப்பிடித்த இந்த அணுகுமுறை காரணமாகப் பல ராஜபுத்திர வீரர்களும், அறிஞர்களும் மன்னருக்கு நெருக்கமானார்கள். தோடர்மால், பகவன்தாஸ், பீர்பால், மான்சிங் போன்ற அமைச்சர்களும் தளபதிகளும் மிகுந்த விசுவாசத்துடன் பாதுஷாவிடம் பணியாற்றிச் சாம்ராஜ்யத்துக்குப் பெருமையும் புகழும் கம்பீரமும் சேர்த்தார்கள்!
இதெல்லாம் ஒருபுறம் நல்லபடியாக நடந்தாலும்…
தப்பியோடிய சித்தூர் மன்னர் உதய்சிங், அக்பரைச் சக்ரவர்த்தியாக ஏற்றுக்கொள்வதாக இல்லை! தன் தலைநகரை இழந்து அவமானப்பட்டாலும், அக்பர் பாதுஷாவுக்கு மன்னிப்புக் கடிதம்கூட அனுப்பாமலேயே சில ஆண்டுகள் கழித்து இறந்தார் அவர் (மார்ச் 3, 1572-ல்!).
இந்த சித்தூர் மன்னருக்கு வாரிசாகப் பிறந்த ராணா பிரதாப்சிங், அக்பருக்கு ஏற்படுத்திய பிரச்னைகள் சொல்லி மாளாதவை!
‘‘என் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவேன். ராஜபுத்திர மானத்தைக் காக்கக் கடைசி மூச்சுவரை போராடுவேன். என் வீரம் கண்டு, என் தாயின் மார்பகத்தில் மறுபடியும் பால் பெருமிதத்துடன் பூரித்துக் கொப்பளிக்க வேண்டும்!’’ என்று உணர்ச்சிகரமாக முழங்கிய ராணா பிரதாப்சிங், அக்பருக்கு எதிராக ஓர் அதிரடிப் படையைத் திரட்டிக்கொண்டு களத்தில் குதித்தார்.
இந்தப் புரட்சி வீரருக்கு அப்போது நாடு என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியும் ராணா பிரதாப் நிகழ்த்திய கொரில்லாப் போர், மொகலாயர்களுக்குப் பெரும் மைக்ரேயன் தலைவலியாக அமைந்தது! உச்சக்கட்டமாக, ஏப்ரல் 1576-ல் மான்சிங் தலைமையில் வந்துசேர்ந்த பெரும் மொகலாயப் படையோடு நேரடியாக மோதினார் ராணா பிரதாப்சிங். அக்பரின் பிரதான தளபதியான மான்சிங் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை.
காயங்களோடு மயங்கிய நிலையில் இருந்த ராணாவை, அவருடைய அருமைக் குதிரை ‘சாய்டக்’ சுமந்துகொண்டு, காட்டுப் பிரதேசத்தில் தப்பித்துப் புகுந்து எஜமானரைக் காப்பாற்றியது. உதவியது குதிரை மட்டுமல்ல… ஒரு நண்பரும்கூட! ஜாலா என்னும் பகுதியை ஆண்டுவந்த சிற்றரச நண்பர், ராணா பிரதாப் போலவே அவசரமாக உடையணிந்து கொண்டு தொடர்ந்து போர் புரிந்து, மொகலாயப் படையை மேலும் சில மணி நேரம் போக்குக் காட்டியது, ராணா பிரதாப்சிங் தப்புவதற்கு வசதியாக இருந்தது. ஜாலா சிற்றரசரை வெட்டித் தள்ளிய பிறகே, ‘அது ராணா பிரதாப்சிங் அல்ல’ என்பதைப் புரிந்து கொண்டு வெறுத்துப் போனார்கள் மொகலாய வீரர்கள்.
பிரதாப்சிங் மலைப்பகுதிகளில் தன் குடும்பத்தோடு பதுங்கி வாழ்ந்து, தொடர்ந்து அக்பருக்கு எதிராக கொரில்லா யுத்தத்தைத் தொடர்ந்தார். உண்ண உணவு கிடைக்காமல், காட்டுப் பழங்களைச் சாப்பிட்டே ராணாவும், அவரது வீரர்களும் சமாளித்தது வியப்புக்குரியது!
விடாமல் முனைப்பாக மொகலாயப் படை துரத்தத் துரத்த, இடம் மாறி மாறித் தன்னம்பிக்கை இழக்காமல் மோதிக் கொண்டிருந்த பிரதாப்சிங், மேவார் பிரதேசத்தில் பல பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்காட்டியது ஆச்சரியமான விஷயம்! பிரச்னைப் பாதாளத்தில் வீழ்ந்தவர்களுக்கு நம்பிக்கை தரும் பாடம்!
கடைசி மூச்சுவரை தன் போராட்டத்தைக் கைவிடாத ராணா பிரதாப்சிங், ஜனவரி 19, 1597-ல் தன் ஐம்பத்தேழாவது வயதில் காலமானார். இறக்கும் தறுவாயிலும் தன் சகாக்களிடம் ‘‘மொகலாயர்கள் முன் மண்டியிடக்கூடாது’’ என்று சத்தியம் வாங்கிக்கொண்ட பிறகே அவர் தலை தொங்கியது.
ராஜபுத்திர மாவீரர்கள் எத்தனையோ பேர் இறந்து, அந்த மண்ணுக்குப் பெருமை தேடித் தந்ததுண்டு. ஆனால், அந்த இனத்தில் வரலாற்றில் இன்றளவும் ராணா பிரதாப் சிங்குக்குத் தனியிடம் ஒதுக்கப்படுகிறது! அவரது வீரம் பற்றிய பாடல்களை இப்போதும் ராஜஸ்தான் பகுதிகளில் பெருமையுடன் பாடுகிறார்கள். அந்த வீரரின் நினைவாக ‘பிரதாப்’ என்று குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் அங்கு தொடர்கிறது!
ராணா பிரதாப் சிங்குக்குப் பிறகும், அவர் மகன் அமர்சிங்கும் தந்தையின் ஆணையை மேற்கொண்டு, அக்பருக்கு எதிராகப் போரைத் தொடர்ந்தார். திறமை மிகுந்த மான்சிங் படையோடு 1599-ல் மோதியபோது நடந்த கடும் போரில் வீரமரணம் அடைந்தார் அமர்சிங்.
பிற்பாடு அக்பரே, இந்த வீரர்கள் பற்றியெல்லாம் வியப்போடும் மரியாதையோடும் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. தவிர, சித்தூர் கோட்டையைப் பாதுகாத்து வீழ்ந்த தளபதிகள் ஜெய்மால், பத்தாசிங் ஆகிய இருவருடைய நினைவாக - யானைமீது அவர்கள் அமர்ந்திருப்பது போலச் சிலைகள் செய்து ஆக்ராவில் நிறுவினார் அக்பர் பாதுஷா. அதுதான் அக்பர்!

Leave a comment
Upload