தொடர்கள்
ஆன்மீகம்
நெய்யினால் கட்டப்பட்ட ஜைனக் கோயில்...!! - ஆரூர் சுந்தரசேகர்.

Jain temple built with ghee...!!

கோயில் கட்டுவதற்குச் செங்கல், சிமெண்ட், மணல் மற்றும் தண்ணீர் ஆகியவற்றையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல், "சுத்தமான நெய்யை" பயன்படுத்தி இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவன நகரமான பிகானேரில் அமைந்துள்ள 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (கி.பி. 1468) பழமையான பண்டசார் ஜைனக் கோயில் தண்ணீருக்குப் பதிலாகப் பல ஆயிரம் லிட்டர் "சுத்தமான நெய்யை" பயன்படுத்தி, ஜைன மதத்தின் தீர்த்தங்கரர்களில் ஒருவரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், ராஜபுதானா கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான வடிவமைப்புப் பணிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பளிங்குத் தூண்கள், தங்க இலைச் சுவர்கள், நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்ட கூரைகள் மற்றும் பிரம்மாண்டமான மண்டபங்கள் இக்கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகின்றன. இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள அழகான கண்ணாடி வேலைப்பாடுகள் மிகத் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மேலும் அதன் சுவர் ஓவியங்களும் கலை வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றது.

Jain temple built with ghee...!!

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) பாதுகாப்பில் உள்ள இந்த 'நெய் கோயில்', உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் விஞ்ஞானிகளையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
நெய் கோயிலின் கட்டுமான வரலாறு:
பிகானேர் நகரின் நிலப்பரப்பை அலங்கரிக்கும் 27 அழகான ஜைனக் கோயில்களில் , ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டாசர் ஜைனக் கோயில், கி.பி. 1468-ல் பண்டாசா ஓஸ்வால் என்ற செல்வந்த ஜைன வணிகரால் இது கட்ட ஆரம்பித்து, அவரது மரணத்திற்குப் பிறகு, கி.பி. 1514-ல் அவரது மகளால் இது கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கோயில் கட்டப்பட்டபோது அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. அப்போது, பண்டாசா ஓஸ்வால், சாந்து (மணல் மற்றும் சுண்ணாம்புக் கலவை) தயாரிக்கத் தண்ணீருக்குப் பதிலாக நெய்யை முழுவதுமாகப் பயன்படுத்த முடிவு செய்தார்.

Jain temple built with ghee...!!

இந்தக் கோயிலின் அஸ்திவாரம் போடப்பட்டபோது, தண்ணீருக்குப் பதிலாக 40,000 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், கட்டுமானத்திற்கான கற்கள் ஜெய்சல்மேரிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த நெய்யின் கலவைதான் அந்த கோவிலின் அடித்தளத்தைப் பல நூற்றாண்டுகளாக இரும்பு போல் தாங்கி நிற்கிறது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் ராஜஸ்தானின் சுட்டெரிக்கும் கோடை வெயிலில், இந்த கோயிலின் செங்கல் மற்றும் தரைப்பகுதியில் இருந்து அந்த பழமையான நெய் கசிந்து வெளியேறுவதை மக்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அந்த இடமே இன்றும் லேசான நெய் மணத்துடன் இருக்கிறது.
கோயில் அமைப்பு:

Jain temple built with ghee...!!

பண்டசார் ஜைனக் கோயில் மூன்று தளங்களைக் கொண்ட ஒரு கோயில். இக்கோயிலின் கண்ணாடி வேலைப்பாடுகள் அதன் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். மேலும், இக்கோயிலின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் கலைநயத்துடன் செதுக்கப்பட்ட பால்கனிகளைக் காணலாம். எனவே, பண்டாசர் ஜைனக் கோயில் ராஜஸ்தானில் உள்ள மிக அற்புதமான ஜைனக் கோயில்களில் ஒன்றாகும் என்பது தெளிவாகிறது.
இக்கோயில் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் சுவர்கள், கருவறையின் தூண்கள் மற்றும் ரங்க மண்டபம் ஆகியவற்றில் அழகான ஓவியங்களும் மஞ்சள் நிறக் கல் செதுக்கல்களும் காணப்படுகின்றன.

Jain temple built with ghee...!!

இக்கோயிலின் தூண்களில், 24 ஜைன தீர்த்தங்கரர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்தரிக்கும் மலர் வடிவங்களும் கதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கோயில் கருவறை (கர்ப்பகிரகம்), அந்தராளம், மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. 'பஞ்சரத' (ஐந்து ரத அமைப்புகள் கொண்ட) பாணியிலான இக்கோயிலின் கருவறை மற்றும் மண்டபத்தின் உட்புறச் சுவர்கள் மற்றும் தூண்கள் முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்கள், சுவரோவியப் பாணிகள் கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் தங்கத் தகடு அலங்காரங்களுக்கு இக்கோயில் குறிப்பாகப் பெயர் பெற்றது.

​ Jain temple built with ghee...!!

பண்டாசர் ஜைனக் கோயிலின் தரைதளத்தில், 2 அடி உயர மண்டபத்தின் மீது வெள்ளி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சுமதிநாதப் பெருமானின் வெண் பளிங்குச் சிலை நம்மை ஒரு அமைதியான தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்துடன் கூடிய இந்தக் கோயிலின் கோபுரம், நகரத்தின் மற்ற பகுதிகளை விட உயரமாக இருப்பதினால் இதைத் தொலைவிலிருந்தும் நாம் காண முடியும்.
பண்டாசர் ஜைனக் கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்

Jain temple built with ghee...!!

எப்படிச் செல்வது:
பண்டாசர் ஜைனக் கோயிலுக்குச் செல்ல அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜோத்பூர் விமான நிலையம் நல்ல இணைப்பு பகுதியாக உள்ளது. இரயில் மார்க்கமாகப் பயணிக்க விரும்பினால் கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள பிகானேர் சந்திப்பு ரயில் நிலையம், டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுடன்u நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாகப் பயணிக்க விரும்பினால் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மர் மற்றும் டெல்லியிலிருந்து வழக்கமான பேருந்துகளும் டாக்சிகளும் இயக்கப்படுகின்றன

Jain temple built with ghee...!!

பண்டாசர் நெய்யினால் கட்டப்பட்ட ஜைனக் கோயில்
கட்டிடக்கலை நேர்த்தியைத் தவிர, இங்கு நிலவும் முழுமையான அமைதியும், சாந்தமும் நம்மை ஆன்மீகத்திற்கு அழைத்துச்செல்கிறது.

​ Jain temple built with ghee...!!