
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு போன வாரம் தனியா சென்றிருந்தேன்.
கோவிலுக்கு வெளியே வரும்போது, என் பக்கத்திலேயே நடந்து வந்த ஒரு போலீஸ் ஆபீஸருக்கு கொஞ்சம் வழிவிட்டு நகர்ந்தேன். அவர் திடீரென்று என் தோளில் கையைப் போட்டு அழுத்தினார்.
பயத்துடன் நிமிர்ந்து பார்த்தால்...
“ராமகிருஷ்ணா! பார்த்து எவ்வளவு நாளாச்சுடா!” என்று நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடன் சிரித்தான் கொஞ்சம் வயசான கல்லூரித் தோழன் பாண்டியன்.
“வா, ரத்னா கஃபேக்குப் போய் டிபன் சாப்பிடலாம்” என்று சொல்லி, அவனுடைய ஜீப்பிலேயே என்னை அழைத்துக்கொண்டு போனான்.
சாப்பிடும்போது, நாங்கள் கல்லூரியில் இருந்து பிரிந்த 2001- வது ஆண்டிலிருந்து இன்று வரை நடந்த விஷயங்களைப் பேச ஆரம்பித்தோம்.
பாண்டியனிடம் ஒரு முக்கியமான விஷயம்.
பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டான்.
உப்புச் சப்பில்லாத என் இன்ஜினியர் கதையைவிட, பாண்டியன் கதை நன்றாகவே இருந்தது.
பாண்டியன் சொன்னான்:
“நானும் நீயும் நெல்லையில் பி.எஸ்.சி. முடிச்சபின் நீ சென்னைல இன்ஜினியரிங் படிச்சே.
அஞ்சடி பதினொரு இன்ச் உயரம், எண்பது கிலோ எடைன்னு நல்லா வளர்ந்திருந்த நான், சரியா வேலை கிடைக்காமல் வெட்டியாக மூணு வருஷம் இருந்தேன்.
அப்புறம் வேலை தேடி சென்னைக்கு வர முடிவு செஞ்சேன்.
அம்மா நகையை அடகு வெச்சு பணத்துடன் சென்னைக்கு வந்தேன்.
திருவல்லிக்கேணி பெரிய தெரு மேன்ஷனில் தங்கினேன். மூணு பேர் உள்ள அறை. இசட் மாதிரிதான் படுக்கணும். காமன் பாத்ரூம் வெளியில. காலைக் கடனுக்கு வட்டியா அரை மணி நேரம் க்யூ. விநாயகா மெஸ் டோக்கன் சாப்பாடு.
மூணு மாசம் ஆச்சு.
இப்போ கையில் பத்து ரூபாய் தான் பாக்கி.
இதில் முக்கியமான விஷயம் என்னன்னா... ஒரு பாழாப்போன ஃபைனான்ஸ் கம்பெனியில் கிளார்க் வேலை உடனே வாங்கித் தரேன்னு சொல்லிவிட்டு, புரோக்கர் முனுசாமின்னு ஒரு பரதேசி மூவாயிரம் ரூபாய் என்னிடம் வாங்கிக்கிட்டு காணாமல் ஓடிப் போயிட்டான்.
அந்தப் பணம் லோக்கல் தாதா கபாலிகிட்ட இருந்து ஓரு மாசத்துக்கு கந்துவட்டிக்கு, நான் வாங்கினது.
கபாலியோட அடியாள் பஞ்சு சிபாரிசில்தான் கபாலி பணம் கொடுத்தான்.
கபாலி அன்றைய திருவல்லிக்கேணியின் ஆகச் சிறந்த ரௌடி. கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், போட்டுத் தள்ளுதல், போதைச் சரக்கு ஏஜென்ட்... இப்படி பன்முகம் கொண்ட வல்லுநர்
“‘டேய்! வட்டியோட சேர்த்து நாலாயிரம் ரூபாயை நாளைக்கு நீ கபாலிக்குக் கொடுக்கலேன்னா, கொன்னுடுவான்." என்று சிலர் என்னைப் பயமுறுத்தினாங்க.
நான் வஞ்சம் இல்லாமல் சாப்பிட்டு நல்லா வளர்ந்தவனே தவிர, இந்த மாதிரி பெரிய தாதா கையால் ரெண்டு அடி வாங்கிட்டு நாலடி திருப்பி அடிக்கிற ஹீரோ டைப் எல்லாம் இல்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளின்னுகூட வச்சுக்கலாம்.
அன்று சனிக்கிழமை.
என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் இருந்த மெரினா பீச் பக்கம் போனேன்.
காலை பத்து மணி.
சாயங்காலத்துக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் கபாலி கையில் மாட்டிக்கொள்வதை விட கடலில் விழுந்திடலாமா என்று தோணிச்சு.
பிரயோஜனமே இல்லை.
எனக்கு நீச்சல் நல்லாத் தெரியும்!
யோசித்துக்கொண்டிருக்கும்போது எதிரே மெரினா லைட் ஹவுஸ் காலியாக இருந்தது.
. லைட் ஹவுஸின் கீழ்ப்பகுதியில் யாரோ பெருக்கிக் கொண்டிருந்தார்கள். மேலே ஏற சுழல் மாடிப்படி இருந்தது.
விடுவிடுவென்று ஏறி மேலே உச்சிக்கு போய்விட்டேன்.
அங்கிருந்து கீழே குதிக்க முடியுமா என்று பார்த்தால் சுற்றிலும் மணல்தான் இருந்தது. குதித்தால் உயிர் போகாது. கை, கால், இடுப்பு எல்லாம் போயிடும். பாக்கி வாழ்க்கை முச்சூடும் படுக்கையிலோ சக்கர வண்டியிலோ கழிக்க வேண்டியதுதான்.
சரி.வேண்டாம் என்று எண்ணி மாடியிலிருந்து இறங்கும்போதுதான் எதிரில் கபாலியின் அடியாள் பஞ்சு வந்தான் .
"என்னம்மா கண்ணு! இங்கே வந்துக்குற? துட்டு தேத்திட்டியா?”
‘பாவி! இங்கேயுமா உன் கபாலி கடன்? ' என்று எண்ணியபடி பஞ்சுவிடம் கெஞ்சினேன்.
“இன்னும் ஒரு வாரம் டைம் வாங்கிக் கொடு அண்ணே.”
“கபாலிகிட்ட நடக்காது .சரி, இந்த லைட் ஹவுஸ் பக்கம் ஏன் இப்போ அலையுற?”
“டென்ஷண்ணே..”
“இதப் பார். இந்த லைட் ஹவுஸ்தான் நம்ம பிசினஸுக்கெல்லாம் ஒரு சிக்னல் மாதிரி. நம்ம வியாபாரம் இதைச் சுத்தித்தான் நடக்குது. வா, டீ சாப்பிட்டுகினே உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்.”
என்று பக்கத்து டீக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
“கபாலிகிட்டேந்து தப்பிக்கிறதுக்கு ஈஸியா ஒரு வழி சொல்றேன். கேட்டினா உன் உசுரு புழைக்கும். நல்ல வேலையும் கிடைக்கும்.”
“என்ன?”
“உன்கிட்ட ஒரு பொட்டலம் கொடுப்பேன். அதை நாளைக்கு நான் சொல்ற ஆளுகிட்ட கொடுக்கணும். அவ்வளவுதான். இப்படி நாலு தபா செஞ்சா உன் கடன் கழிஞ்சுடும். என்னா சொல்றே?”
எனக்கு ஆச்சரியம்.
கபாலி நம்மை நாளை கூறுபோடுவதைவிட, பொட்டலக் குரியராக ஒரு தவணையைக் கழித்துவிடுவது உத்தமம் என்று முடிவு செய்து,
“சரி” என்றேன்.
“நாளைக்கு காலையில ஆறு மணிக்கு மேன்ஷனுக்கு வந்து உன்கிட்ட ஒரு பொட்டலம் கொடுக்கிறேன். ரெடியா இரு.” பஞ்சு கிளம்பி விட்டான்.
.
அடுத்த நாள் ஞாயிறு காலை ஆறு மணிக்கு டாண் என்று பஞ்சு வந்து கேட்டான்..
“சண்டை எதுனா வந்தா அடிப்பியா?”
“எதுக்கு அடிக்கணும்?” என்று கொஞ்சம் பயத்துடன் கேட்டேன்.
“பொட்டலத் தொழிலுக்கு அடிக்க தெரியணும் .”
“ஏன்?”
“பொட்டலம்னா என்ன தெரியுமா? பிரவுன் சுகர்...”
“பனங்கல்கண்டு,கருப்பட்டி மாதிரியா?”
கடுப்பானான் பஞ்சு.
“இது போதை மருந்துப்பா. ஹெராயின். ”
என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்.
ஆவின் அரை லிட்டர் பால் பாக்கெட் சைஸில், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.
“ இன்னிக்கு காலையில எட்டரை மணிக்கு கரீட்டா, நேத்து நீ போனியே... அந்த மெரினா பீச் லைட் ஹவுஸாண்ட நில்லு. பொட்டலம் வாங்குற ஆளு அங்கே வருவான்.”
“லைட் ஹவுஸ்ல ஞாயித்துக்கிழமை கும்பல் இருக்காதா?”
“இருக்காது. 1991 ல ராஜீவ் காந்தி இறந்ததுக்கப்புறம் லைட் ஹவுஸை பொதுமக்கள் பார்வைக்கு மூடிட்டாங்க, தீவிரவாதிங்க பயத்தில.
ஆனா மெயின்டனன்ஸ்காக ஒரு வாட்ச்மேன் மட்டும் இருப்பான்.
நாளைக்கு காலை எட்டரை மணிக்கு ஒருத்தன் சுண்டல் டின் எடுத்துக்கினு ‘சுண்டல்... சுண்டல்...’ன்னு கத்திக்கினே வருவான்.
நீ போய் அவனாண்ட‘சாந்தோமுக்கு எப்படி போவணும்?’ன்னு கேளு.
அவன் ஒரு பத்து ரூபாய் நோட்டு கொடுப்பான். அந்த நோட்டு நம்பர்ல கடைசி நாலு நம்பர் 3719 ன்னு இருக்கும். அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கினு நம்ம பொட்டலத்தை அவன்ட்ட கொடு.”
“அவன் பத்து ரூபாய் கொடுக்கலைனா?”
“கொடுக்கலைனாலும், வேற நம்பர்னாலும் நீ பேசாம வேகமா போயிடு.”
“ஏன்?”
“அந்த ஆளு போலீசாவோ, நம்ம எதிரிகளாவோ இருக்கலாம். உங்கிட்ட இருந்து பொட்டலத்தைப் புடுங்க வந்தாங்கன்னா, அவங்களை அடிச்சிட்டு ஓடு.”
“இத்துனூண்டு பொட்டலத்துக்கு இவ்வளவு அடிதடியா?”
“சரக்கு விலை ஒரு கிராம் நாலாயிரம் ரூபாய். உன்கிட்ட 250 கிராம் பொட்டலம் இருக்குது.அது விலை பத்து லட்சம் ரூபாய்.”
ஆடிப்போனேன்.
“நானே இந்தப் பொட்டலத்தை எடுத்துக்கிட்டு ஓடிட்டா?”
“ஓடமாட்டே. உனக்கு இதை விற்கத் தெரியாது. கபாலி உன்னையும் என்னையும் சேத்து சூப் வெச்சிடுவான் . ஜாக்ரதை. நீ மாட்டிக்கினா நானும் செத்தேன்.”
குளித்துவிட்டு பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டேன்.
“இது தான் முதலும் கடைசியும் தலைவா. என்னை மன்னிச்சுடு.”
மெரினா சென்று லைட் ஹவுஸை அடையும் போது மணி எட்டேகால்.
பொட்டலம் இடுப்பில் பத்திரமாக இருந்தது.
லைட் ஹவுஸின் வெளிப்பக்க கேட் திறந்திருந்தது. உள்ளே வாட்ச்மன் தரையைப் பெருக்கிக்கொண்டிருந்தார்.
“ஐயா, வெயிலுக்கு உள்ளே நின்னுக்கலாமா?”
“ம்..ஆனா,மாடிமேல ஏறக்கூடாது. நான் டீ குடிச்சுட்டு வரேன். கொஞ்சம் பாத்துக்கறயாப்பா?
“சரீங்க.”
சுண்டல்காரன் வருகிறானா என்று அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
கொஞ்சம் தள்ளி, வெளியே எழுபது வயதைத் தாண்டிய, உடல் இளைத்த ஒரு பெரியவர் வெள்ளை பேண்ட் சட்டையுடன் மணலில் நின்றுகொண்டிருந்தார்.
“தம்பி, கொஞ்சம் இங்கே வாப்பா” என்று என்னை அழைத்தார்.
அவர் அருகில் சென்றேன்.
பெரியவர் பதற்றத்துடன் பேசினார்.
“என் பேரன் அதோ பீச் பக்கம் ஓடுறான் பாரு. நீல சட்டை, வெள்ளை பேண்ட். திடீர்னு சமுத்திரத் தண்ணி உள்வாங்குது. கடலுக்குள்ள போகுது.. போய் அவனைப் பிடிச்சுக் கொண்டாந்திருப்பா. சீக்கிரம்பா!”
பார்த்தேன்.
கடல் நீர் இப்போ நிறைய தூரம் உள்ளுக்குள் போய்விட்டது. தண்ணீர் இருந்த இடமெல்லாம் இப்போது கடலடித்தரை தெரிந்தது.
ஓடினேன்.
அந்த நாலு வயது சிறுவன் திமிறிக்கொண்டிருந்தான். அவனைத் தூக்கிக்கொண்டு பெரியவரிடம் திரும்பி வந்தேன்.
பெரியவர் பதறினார்.
“அங்க பாருப்பா! தூரத்தில் ரொம்ப உயரத்துக்கு பெரிய அலை வருது. இது சுனாமி தான்!
ராட்சச அலை. ஜப்பானில் பார்த்திருக்கேன். நாமெல்லாம் மூழ்கிப் போயிடப் போறோம்.
என்னால் வேகமா நடக்க முடியாது. நீ என் பேரனைத் தூக்கிட்டு ரோட்டுக்கு ஓடிப் பிழைச்சுக்கோ!” விரட்டினார்.
சட் என்று முடிவு செய்தேன்.
முதியவரை எளிதில் என் முதுகில் தூக்கிக்கொண்டேன். சிறுவனை இன்னொரு கையில் வாரிக்கொண்டேன்.
நேராகச் சென்று லைட் ஹவுஸின் சுழல் மாடிப்படியில் பாய்ந்தேன்.
சுண்டல்காரன் லைட் ஹவுஸ் பக்கத்தில் வந்து “சுண்டல்... சுண்டல்...” என்று கத்தியது எனக்கு லேசா கேட்டுது.
2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதியான அன்று காலை, அடுத்த சில நிமிடங்களில், கடல் பின்வாங்கியிருந்த இடத்திலிருந்து பேரலை வேகமாகத் திரும்பி வந்தது.
பிரம்மாண்டமான சுனாமி அலை கரையில் மோதி, பீச் மணலையும், மக்களையும், கார்களையும், சிறு வீடுகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு, சென்னை கடலோரத் தெருக்களுக்குள் ஆவேசமாகப் பிரவேசித்தது.
லைட் ஹவுஸின் சுழல் மாடிப்படியில் இரண்டாவது சுற்று ஏறும் போதே கடல் தண்ணீர் என் கால்களை மோதியது.
மேலும் இருபது படிகள் ஏறி, முதியவரையும் சிறுவனையும் கீழே இறக்கினேன்.
பத்து அடி கீழே இப்போது எங்கும் கடல் நீர்.
பிரளய காலம் போல இருந்தது.
“எங்கள நீ தான் காப்பாத்தினே அப்பா!ரொம்ப தாங்க்ஸ்."
நல்ல காலம்... இந்த லைட் ஹவுஸ், சுனாமியை இது வரை தாங்கிடுச்சு. தண்ணி கொஞ்ச நேரம் கழிச்சு கடலுக்குள்ள திரும்பப் போயிடும்.”
என்றார் பெரியவர், பேரனை மடியில் அமர்த்தி தடவிக்கொண்டே.
“சார், நீங்க சொன்னதுனால தான் இங்கே ஓடி வரணும்னு எனக்குத் தோணிச்சு. இல்லாட்டி நாமெல்லாம் கடலோடு போயிருப்போம்.”
" உன்னுடைய கான்டாக்ட் ஃபோன் நம்பர் கொடுப்பா" என்றார் பெரியவர்.. மேன்ஷன் நம்பரை கொடுத்தேன்.
இடுப்பில் வைத்திருந்த ஹெராயின் பொட்டலத்தை எடுத்து கடல் தண்ணீருக்குள் எறிந்தேன்.
இரண்டு மணி நேரமும், மூன்று மாபெரும் சுனாமி அலைகளும் கடந்து அமைதி திரும்பியது.
ஒரு மீனவரின் படகில் வந்த இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர்களும் எங்களை மீட்டனர். படகில் சென்று தண்ணி இல்லாத இடத்தில்பத்திரமாக இறங்கினோம்.
மறு நாள் , மேன்ஷன் நம்பருக்கு ஒரு போன் கால் வந்தது.
பெரியவர் தான் என்னைக் கூப்பிட்டார்.
தன் அட்ரஸைச் சொல்லி அடையாறில் உள்ள அவர் வீட்டுக்கு வரச் சொன்னார்.
வாசலில் பெயர்ப்பலகை இருந்தது:
“கே. எஸ். ராமனாதன்
தலைமைச் செயலாளர்( Retd )
தமிழ்நாடு அரசு
உள்ளே பெரியவர் ராமனாதன் என்கையில் ஒரு லெட்டரைக் கொடுத்தார்.
“இதைக் கொண்டு போய் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜசேகரைப் பாரு.அவர்கிட்ட உன்னை பத்தி ரொம்ப சொல்லி இருக்கேன்”
சென்று பார்த்தேன்.
எனக்கு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை விரைவில்கிடைத்தது.
பஞ்சு போலீஸ் இன்பார்மராகி விட்டான்.
கபாலியும் பழைய கணக்கு எல்லாம் மறந்து உடனே என் தோஸ்த் போல ஆகி விட்டான். அப்புறம் மும்பைப் பக்கம் போய் செட்டில் ஆகி
விட்டாதாக தகவல்.
நான் இப்போது போதை மருந்துத் தடுப்புப் பிரிவில் டி..எஸ்.பி.
ரொம்பவும் நம்ப முடியாத கதையாக இருக்கு இல்லையா!!" என்று முடித்தான்பாண்டியன்.
"ஆமாம்!. நிச்சயமாக.!
ஆனாலும் சபாஷ் பாண்டியா!
அது சரி...”
என்று சொல்லி அவன் பாண்ட் பாக்கெட்டைக் கவனித்தேன்.
“பாண்ட் பாக்கெட்டுக்குள்ள அது என்னப்பா இன்னமும் ஒரு பொட்டலம் வெச்சிருக்கே?”
என்று சந்தேகப் பார்வையுடன், சிரித்துக் கொண்டே கேட்டேன்.
“இது எப்பவும் என் பாக்கெட்டில் இருக்கும்.”
“என்னது?”
“பார்த்தசாரதி கோவில் குங்குமம்.
இது போதை இல்ல... தெய்வீகப் பாதை!
என்னுடைய மற்றொரு கோவில்... மெரினா லைட் ஹவுஸ் தான்!”
என்று சத்தம் போட்டுச் சிரித்தான்
டி. எஸ்.பி. பாண்டியன்.
நானும் சிரித்தேன். "கொஞ்சம் குங்குமம் கொடு "என்று நான் பாண்டியனைக் கேட்கவேயில்லை.

Leave a comment
Upload