
உணர்ச்சியற்று கால்கள் கிடந்தன..
முயற்சித்து எழ தோற்றுப் போயின..!
அசைவற்றுக் கிடந்த நிலையில்,
பிரசவத்தின் சோர்வு போன்று..!
பிரசவத்தில் மீள்வது மறுபிறப்பு..!
பிரசவம் இல்லை அவளுக்கு...
இருந்தும் பெற்றாள் மறுபிறப்பு..!
ஏனோ கிடக்கின்றாள் படுக்கையில்,
மோனா எனப் பெயர் அறிக்கையில்..!
கடந்த காலம் மனதைத் தொட,
நினைவுகள் நிகழ்காலம் வரை வர..
கனவு போல் நிகழ்ந்தது எல்லாமே..!
அழகான பிள்ளையாய் பிறந்து,
அதனால் மோகன் என பெயரிட்டு,
அம்மாவின் சுக அரவணைப்பில்,
அன்பாய் வளர்ந்த வேளைதனில்,
ஆணாய் பிறந்திருந்தும் ஏனோ,
பெண்ணாய் உணர்வு வந்தது..!
எட்டு வயதில் ஏற்பட்ட உடல் மாற்றம்...
கூட்டுக் குடும்பத்தில் புது குழப்பம்..!
விட்டு போன உறவுகளால் ஏமாற்றம்..!
தனிமை தந்ததோ மன அழுத்தம்..!
சிறுமைபட திடமின்றி வெளியேற்றம்,
தஞ்ச மடைந்தாள் தாய்யம்மாவிடம்..!
தாய்யம்மாள்...
அடைக்கலம் தந்தாள் தாய் போல்..!
அடித்தளம் அமைத்தாள் புதுஉலகில்..!
புதுப்பெயர் வைத்தாள் மோனா என..!
மொத்தம் முப்பது பேராய் குடும்பம்...
நித்தம் கலெக்க்ஷன் தாயம்மாவிடம்..!
சித்தம் அமைதி பெறவில்லை...!
சிற்றறிவு சொல்லியது அவளுக்கு..!
பெண்ணாகத் தான் உணர்கின்றாய்..
சுமையான உறுப்பை அகற்றிவிடு..!
எளிதானது இல்லை என்றாலும்,
துணிவாக ஏறினாள் மருத்துவனை..!
பாலின மாற்றுச் சிகிச்சை பற்றி,
கேலிகள் எத்தனை அவளைச் சுற்றி..!
தனியார் மருத்துவமனை ஏறினாள்..!
கனிவாய் பேசினார்கள் முடியுமெனு…
ஆசை ஒருபுறமாய்,பயம் மறுபுறமாய்,
இடியாய் வந்த செய்தி அப்புறமாய்..!
நான்கு லட்சமாம் அதற்கு விலை...!
நடுங்கித் தடுமாறியது அவள் நிலை..
ஒட்டிக் கொண்ட வேண்டாத உறுப்பு,
வெட்டி எடுக்க இத்தனைப் பணமா..?
தளர்ந்து விடவில்லை அவளும்..!
படி ஏறினாள் அரசுமருத்துவமனை..!
அழகாக நகர்ந்தது பரிசோதனைகள்..
அறுவை சிகிச்சையும் அருகில் வர,
அளவிலா ஆனந்தம் மனதில் வர,
ஆதாரமாய் கூட ஒருவர், அதனோடு
ஆதார் அட்டையும் அவசியமானது..!
ஆதாரமாய் தோழி வந்தாலும்,
ஆதார் அட்டை உடன் இருந்தும்,
ஆதார் அட்டை மோகன் பெயரில்..?
முற்றும் நின்றது முரண்பாட்டில்..?
சிகிச்சை யாருக்கு? மோனா?மோகன்?
விடை எது மருத்துவர் கேள்விக்கு..?
இரண்டும் ஒன்று தான் அவளுக்கு..
முரண்டு பிடித்தாள் தன் தரப்பிற்கு...
விதிகள் சொல்லும் வழிக்கெதிராய்,
எதுவும் செய்வது தவறென்று,
மருத்துவர் மறுத்து உரைத்திடவே,
மனம் நொந்து இறைஞ்சுகிறாள்..!
இவ்வுறுப்போடு வாழ முடியாது...
இத்தருணத்தை விட முடியாது..!
விரட்டி அடிப்பது இயல்பாகியது..!
அவமானம் புதிதல்ல அவளுக்கு...
வருடங்களாய் பழகியது தான்..!
அவமானம் ஏனோ கோபமாகியது..!
தன்னிலை ஆத்திரத்தில் மறந்து,
மின்னலை வேகத்தில் வென்று,
அருகிருந்த கத்தியை எடுத்து,
உள்ளத்தில் எழுந்த வெறுப்பு...
வெட்டினாள் வேண்டாத உறுப்பு..!
மயங்கினாள் ரத்தத்தில் துடித்து..!
கண்கள் திறந்தால், தாய்யம்மா...
கதறினாள் என்ன செய்தாயென..?
மருத்துவர் வரவு மௌனமாக்கியது…
வார்த்தைகள் வியக்க வைத்தது...!
"வேண்டாத உறுப்பு முழுசும் நீங்க,
நீங்கள் ஒரு பெண் உடல்ரீதியாக.."
மேகத்துள் மிதந்தாள் மோனா...!
பாகத்தை இழந்த சுதந்திரம்...!
காதுக்குள் கேட்டாள் ரீங்காரம்...!
"நீங்கள் ஒரு பெண்"எனும் புதுராகம்…!
குறிப்பு:
மனநல மருத்துவர் டாக்டர் சரத் அவர்களின் ஒரு சிறுகதை.
என் மனதைத் தொட்டதால்,அதைத் தழுவிப் பிறந்த வரிகள்.

Leave a comment
Upload