தொடர்கள்
கதை
சைவக் கோழி - பா அய்யாசாமி

20260729082015456.jpeg


"கெண்ட மீனே', "கெண்ட மீனே' என்ற சத்தம் கேட்டு வாசல் வந்த ராதிகா
வந்த குட்டியானை வண்டியை நிறுத்தினாள்.

ஞாயிற்றுக்கிழமை,காலை நேரம்,கணவர் செல்வமும்,ஒன்பதாவது படிக்கும் மகள் ரம்யாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை.

இன்றையச்சமையலுக்கு மீனெடுத்து விடுவோம் என யோசித்த ராதிகா,

என்ன நாட்டு மீனா ? என விசாரித்தாள்.

ஆமாம்மா, குளத்து மீனு வளர்ப்பு மீனு

உயிர் மீன் இல்லையா ? இது எப்போது பிடித்தது,எனக் கேட்டாள்.

நேத்து மாலையிலேபிடிச்சதுங்க..என்றான் வியாபாரி

நாட்டு மீனுங்கிற, சுத்தமா கவுச்சி வாடையே இல்லை? என கேட்டபடி
உள்ளிருந்து வந்தார் செல்வம்.

அதானே?! என்று வந்தமகள் ரம்யா, எந்த குளம்? என கேட்டாள்.

பாப்பா உன் ஸ்கூலாண்ட ஒரு குளம் இருக்கில்லே அந்து குளம்தான் என்றதும்,

ஐய்யே! அம்மா,வேண்டாம்மா, வாங்காதே என்றவள், கூடியிருந்த மக்களையும் வாங்காதீர்கள் என ரம்யா கூறவும் ஏய் நீதான் சாப்பிடமாட்டாய், அப்புறம் என்ன? எங்களை வாங்கவும் விட மாட்டேங்கிற என்றாள் ராதிகா.

இந்தா, நீ மீன் சாப்பிடமாட்டேங்கிறதாலே எல்லோரையும் வாங்காதேனுசொல்கிறாயா என வியாபாரி அதட்டினான் ரம்யாவை.

அவர்கள் சொன்னமீன் வளர்க்கும் குளம் எங்கள் பள்ளிக்கு அருகே உள்ள குளம்தான்,மனிதர்கள் குளிக்கப் பயன்படாத அளவிற்கு அவ்வளவு அழுக்காக இருக்கும்.

இவர்களும் தீனியாகவும்,மீனின் எடைக் கூடுவதற்காக கண்டதையும் அதில் போடுவார்கள், அதனால் யாரும் குளிக்க முடியாமலும் அந்தப் பகுதியே துர்நாற்றம் வீசும், அதில் வளர்ந்த மீன்களை நீங்கள் வாங்கி சமைத்து சாப்பிடுனுமா என கேட்டதும்,

மகளின் பேச்சை மீறாமல் வாங்காமலே உள்ளே போய் விட்டாள் ராதிகா.

மற்றவர்கள் யாரும் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது கிலோ ரூ.200/எனச் சொன்ன பின்னும் மீன்கள் அதே இடத்தில் மொத்தமும் விற்பனையானதில் தெரிந்தது.

சிறு வயதிலிருந்தே ரம்யா ஏனோ அசைவம் சாப்பிடுவதில்லை. இது ஐயரு வீட்டில் புள்ளையாகப் பிறக்க வேண்டியது இங்கே வந்திடுச்சு,என்று அவர்களின் பாட்டி அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வதுண்டு,

இவளுக்காகவே தனிப் பாத்திரங்கள் வைத்து தனியாக சமைக்க வேண்டும். ஒரே வீட்டில் இரண்டு சமையலும் செய்ய வேண்டிய கட்டாயம் ராதிகாவிற்கு.

போகிற இடத்தில் என்ன செய்யப்போகிறதோ? என்று இப்பொழுதே கவலைப் பட்டாள் ராதிகா.

இன்று மீன்தான் இல்லை,கறியாவது எடுங்க, என்ற மனைவியிடம்,

அதான் சித்ரா இருக்கில்லே, அதனைப்பிடி, இன்றைக்கு என்றார் செல்வம்.

ரம்யாவால் பெயர் சூட்டப்பட்ட வளர்ப்புக் கோழிதான் சித்ரா.

குஞ்சாக வெளி வந்த நாளில் இருந்து அதன் பளீர் வெண்மை நிறத்தில் மஞ்சள் நிறத்திட்டுகளை கண்டு ரசித்து, கையில் எடுத்த ரம்யா, இது சித்ரா!என உலகிற்கு அறிமுகப்படுத்தி, சித்ராவிற்கு உலகை அறிமுகம் செய்து வைத்தாள்.

சித்ராவிற்கு சோளம், கம்பு, கீரைஎன சைவஉணவுகளையேகொடுத்து வளர்த்து வந்தாள்.

மற்றவை எல்லாம் புழு,பூச்சி,கரையான் என சாப்பிட்டாலும், என் சித்ரா என்னைப் போல் சைவம்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்

அந்த சித்ராதான், இன்றைய உணவிற்கு என்று பெற்றோர் பேசிக்கொண்டதும் கூடாது என அதனை மறுத்தாள்.

என்னம்மா இது குழந்தை மாதிரி பிடிவாதமாக இருக்கே? நாம வளர்க்கிறதே அதை சாப்பிடத்தாண்டா, என்ற அப்பாவிடம்,

வளர்க்கிறதே சாப்பிடத்தானா ? அப்போ நானுமா ? என கேட்டாள் ரம்யா.

குடும்பமே சைவமானது.