
பக்தி இலக்கியம் தமிழுக்குச் சேர்த்த வளம் பெரிது.
ஆழ்வார்களும் சமயக்குறவர் நால்வரும் அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களும் பக்தி என்னும் ரசத்தை, தமிழமிழ்தில் கலந்து தந்தார்கள்.
இன்று ஆறாம் திருமுறையில் பெரியாழ்வாரின் தீந்தமிழில் இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்.
மாயக்கண்ணன் தனது புல்லாங்குழலை இசைக்கின்றான்.
அந்த அமுத கானத்தைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மானுடர்கள், ஆவினங்கள், பட்சிகள், விருட்சங்கள் என யாவரும் யாவும் மெய்மறந்து தம் செயலிழந்து நிற்கும் நிலையை பதினோரு பாடல்களில் பெரியாழ்வார் காட்சிப்படுத்துகிறார். அவற்றிலிருந்து இரண்டு பாசுரங்கள் இதோ
பாடல் :
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப
குருவெயர்ப் புருவங் கூடலிப்பக்
கோவிந்தன் குழல் கொடூதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே.
பொருள் :
கண்ணன் தன் சின்னஞ்சிறு விரல்களால் புல்லாங்குழலின் துளைகளைத் திறந்தும் மூடியும் இசைக்கின்றான்.
செவ்வரி படர்ந்த அவன் கண்கள் இசையின் சுகத்தில் சொருகி லயித்தும் தன் செம்பவளம் போன்ற இதழ்களைக் குவித்தும் குறு வியர்வை அரும்பிய தன் புருவங்களை மேலேற்றியும் வேங்குழலை அந்த மாயன் இசைத்தபடி இருக்கிறான்.
அதைச் செவியுற்ற பறவையினங்கள் தத்தம் கூடுகளினின்று வெளிவந்தன.
காட்டில் முறிந்து விழுந்த சிறிய மரக்கிளைகள் போல் அவை கண்ணனைச் சூழ்ந்து மெய்மறந்து கிடந்தன.
ஆவினமோ தம் கால்களைப் பரப்பியும் தலைகளைத் தாழ்த்தியும் செவிகளை சற்றும் அசைக்காமல் அந்த அமுத கானத்தில் தன்னை மறந்து நின்றனவே!
பாடல் :
திரண்டெழு தழை மழை முகில் வண்ணன்
செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லுங் கடை வாய் வழி சோர
இரண்டு பாடுந் துலங்காப் புடை பெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே
பொருள் :
ஓங்கிப் பெய்கின்ற மழை மேகங்கள் திரண்டு கவிந்தாற்போல நிற்கின்றான் கண்ணன்.
செந்தாமரை மலரில் தேன் மாந்த மொய்க்கும் வண்டுகள் போல கண்ணனின் முக மலர்மேல் கேசம் சுருண்டு தாழ்ந்து அசைகின்றது.
மாயனின் புல்லாங்குழல் இசையை மான்களும் செவியுற்றன.
கேட்ட மாத்திரத்தில் அதில் கிறங்கி மருண்டு புல் மேய்வதையும் விட்டு நின்றன.
முன்னமே வாயிற் கவ்விய புல்லும் வாயோரத்திலிருந்து நழுவிக் கீழே விழவும் முன்னும் பின்னுமாய் அடி வைத்து அசைவதை நிறுத்தியும் சுவரில் தீட்டப் பட்ட சித்திரம் போன்று உறைந்து நின்றனவே!

Leave a comment
Upload