
தாத்தா தன் அறையிலிருந்து வெளியே வந்தபோது, ஹால் போர்க்களமாகியிருந்தது. Netflix ரிமோட் யார் கையில். பேரன்களுக்கு இடையே கடும் யுத்தம்.
"டிவி முன்னாடி நின்னு ஏன்டா இப்படி அடிச்சுகிடுறீங்க?"
"தாத்தா! இவன் புதுப் படத்தை பார்க்க விடாம, ஏதோ அறுத்துப் பழசான கருப்பு வெள்ளை படத்தை வைக்கப் போறேன்னு அடம்பிடிக்கிறான் தாத்தா!" பெரியவன் கடுப்பானான்.
"அது பழசு இல்லடா, சூப்பர் மூவி! அதைத்தான் பார்ப்பேன்!" சின்னவன் விடாப்படியாக வம்பு செய்தாான்.
தாத்தாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "ஏண்டா, அந்தக்கால படமெல்லாம் கூடவா அதுல பத்திரமா இருக்கு?"
"எல்லாம் அந்த Netflix-ல இருக்கு தாத்தா. தேடுனா நொடியில வந்துடும்!"
பேரன்கள் செய்த கலாட்டாவைப் பார்த்ததும், தாத்தாவின் மனசு அரை நூற்றாண்டுக்கு பின்னோக்கி ஓடியது...
அனறு முன் இரவு. வாசல் திண்ணையில் உறங்குவது போல் பாசாங்கு செய்திருந்தேன்.
எதிர் வீட்டு கிட்டு,ஊர் சந்தடி ஒடுங்கிய பின் "உஷ்" கொட்டி எழுப்பினான்.
கும்மிருட்டில் எழுந்து யாரும் அறியாமல் , இரண்டாம் காட்சிக்கு இடம் பிடிக்க, இரண்டு மைல்களுக்கு அப்பால் இருக்கும் சிறு நகரில், புதிதாய் முளைத்திருக்கும் டெண்டு கொட்டகையை, எட்டுவதற்கு முன்,
பாம்புகள் புரளும் பாதையிலே, பயமின்றி, கிட்டு கொண்டு வந்த டார்ச் வெளிச்சத்தில்,
அவன் முன் போக, நள்ளிரவில் நான் அவனைப் பின் தொடர்ந்தேன்,
டெண்டு கொட்டகையில்,திரையிடப்பட்ட படத்திற்கு,எங்கள் தெருக்களில், பேண்டு (Band) இசை முழங்க,,பிட் நோட்டீஸ் தூவலுடன், நேற்றெல்லாம் வலம் வந்த வண்டியின் பின், நானும், கிட்டுவும், சுற்றிச் சுற்றி வந்தோம்.
வீரப்பாவும், எம்ஜியாரும் வாளேந்தி ஒருபக்கம்,பானுமதி தோள் சாய எம்ஜியார் மறு பக்கம்,
வண்டியில் வைத்த பேனரில் அவர்கள் வலம் வந்தனர்.
ஓடோடி வந்து, கொட்டகைக்குள் நுழைந்து,மணல் பரப்பில் மேடிட்டு, தரை டிக்கெட்டில் இடம்பிடித்தோம்
பக்கத்தில் பீடிப் புகை, நெஞ்சைக் குமட்ட,,"ஒய்ங்" என்ற விசில், உரத்து ஒலி எழுப்ப,
பீடி brand விளம்பரங்கள், வெள்ளித் திரையில் வந்து வந்து போக, அவை உயிருக்கு ஆபத்தென ஒப்புக்கும் சொல்லாமல் ,இவை எல்லாம் முடிந்த பின்னர் ,
இந்திய விடுதலை வரலாறுகாட்சிகள் வெள்ளித்திரையில் வந்து போக, நாடோடி மன்னனுக்காய் நாங்கள் காத்திருந்தோம்,
"பதி பக்தி" என மாறி, வெள்ளித் திரையில் பின்னிசையோடு மின்னி வர,
என்னடா குழப்பமென்று நாங்கள் திகைத்து நிற்க, "நாடோடி மன்னன் நேற்றே கிளம்பி விட்டான்". பக்கத்தில் இருந்தவன் பரபரப்பாய்ச் சொல்ல,
“இன்றே இப்படம் கடைசி”, வண்டிக்காரன் நேற்றே சொன்னதை, காது கொண்டு கேட்காமல் வந்த குழப்பமென்று, வாய் பொத்தி படம் பார்த்து,
பின்னிரவில் திரும்பி வந்து, திண்ணையில் படுத்து விட்டோம்.
சாதுவாய் தூங்கும் என்னை, காலையில் அம்மா அதட்டி எழுப்பி விட , அரை குறை தூக்கத்தில் அவசரமாய் எழுந்து,
“ஏன்..மா என் தூக்கத்தைக் கெடுக்கிற” என்று போர்வையை மீண்டும் இழுத்து மூடிக் கொண்டேன்.
“ராத்திரியெல்லாம் நல்லா தூங்கியாச்சு,காலைல சீக்கிரமா எழுந்து படிக்கப்பாருடா.
“நாளைக்கு பரீட்சை ஆரம்பிக்குது தெரியுமா” அம்மா அப்போது எச்சரிக்க,
“நைட்டெல்லாம் நிறைய படிச்சிட்டேன் மா. அயர்ச்சியா இருக்கு” என்று பொய் சொல்லி,
அம்மாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து,போர்வைக்குள் புகுந்து நாடோடி மன்னனையே நினைத்திருக்க..
காலம் கடந்து விட்டது . மீண்டும் வருவானா “நாடோடி மன்னன்” எனும் என் ஏக்கம் தவிர்க்க,
Netflix ஐ பேரன்கள் திறந்து விட,
“கண்ணில் வந்த மின்னல் போல” பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
திரையில் பாட்டு ஓடும்போது, தாத்தாவின் நினைவுகள் பாடலில் இருந்து மீண்டும் அம்மாவின் குரலுக்குத் தாவின.
அரை நூற்றாண்டு கழித்தும் “நாடோடி மன்னன்” வந்துவிட்டான்!
ஆனால், அன்று "சீக்கிரம் எழுந்து படிடா" என்று அதட்டி எழுப்பிய அம்மாவின் குரல் கேட்குமா ????
அம்மாவோட அதட்டலும் அந்த நாட்களும் எந்த நெட்ஃபிலிக்ஸ்லயும் திரும்பக் கிடைக்காதுடா என்று தாத்தா கண்கள் பனிக்க மனதிற்குள் முணுமுணுத்தார்.

Leave a comment
Upload