தொடர்கள்
விகடகவியார்
பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்-விகடகவியார்

2026072818295405.jpeg

தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமையன்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.

"புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேவைப்படும் இடம் விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசித்து விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்பட்ட இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் இறுதி செய்யப்படும் " என்று குறிப்பிட்டார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்துவது பற்றியும் முதல்வர் குறிப்பிட்டார். "தற்போது நடைபெற்று வரும் முனையம் 3 முனையம் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாள முடியும். டெர்மினல் 5 முனையம் பயன்பாட்டுக்கு வரும்போது 55 மில்லியன் பயனாளிகளை கையாள முடியும் ."என்றார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் "திட்டத்துக்காக 5846 ஏக்கர் தேவைப்பட்டது. அதில் பட்டா நிலங்கள் 3774 ஏக்கராக உள்ளன. அதில் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் 2681 ஏக்கர் என்று தெரிவித்தார். ஆனால், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு,"பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டன "என்று குறிப்பிட்டார்.

சட்ட அமைச்சர் "சட்டப்பேரவையில் அதை மறுத்து 48 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஏகனாபுரம், காரை, தண்டலம் ஆகிய கிராமங்களில் ஒரு சென்ட் கூட கையகப்படுத்தவில்லை. விவசாயிகளை மனதில் கொண்டு தான் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது "என்றார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு "புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கட்டங்களில் நாங்கள் ஆய்வுகள் நடத்தினோம். நில அமைப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, வான்வெளி கட்டுப்பாடுகள், மக்கள் தொகை இப்படி பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்க கடல், வடக்கு பகுதியில் மணலி, எண்ணூர், தெற்குப் பகுதியில் தாம்பரம் விமானப்படை வான்வழி எல்லைக்குள் வருவது, கல்பாக்கம் அணுமின் நிலையம்,வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவை இடத்தேர்வுக்கு தடையாக கருதப்பட்டது. இறுதியாக சென்னை மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பன்னுர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் புதிய விமானத் திட்டத்திற்கு தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. பரந்துரை தேர்வு செய்தது மாநில அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல.

பரந்தூர் பகுதி மக்கள் இதை வரவேற்று விஜயை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பரந்தூர் விவசாயிகளை சந்தித்த ஜோசப் விஜய் பரந்தூர் விவகாரத்தில் என்னுடைய ஆதரவு உங்களுக்கு தான் என்று தெரிவித்தார். அதையும் பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் போது குறிப்பிட்டார் முதல்வர்.

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்ன? மாற்றி இடம் தேர்வு என்கிறார் முதல்வர் அது எங்கே என்று சொல்லவில்லை. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டது போல் இடம் தேர்வு செய்தாலும் அதை இறுதி செய்யும் அதிகாரம் மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் தான் இருக்கிறது.

ரத்து செய்வதற்கு முன்பு முதல்வர் இது பற்றி மத்திய அரசிடம் பேசினாரா என்ற விவரம் தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்கிறார் முதல்வர். ஆனால் அது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை? பல முக்கிய திட்டங்களை நிறைவேற்ற விவசாய நிலங்கள் குடியிருப்புகள் சில சமயம் பாதிக்கவே செய்யும் என்பது கடந்த கால வரலாறு.

உதாரணமாக தாம்பரம் விழுப்புரம் நான்கு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றிய போது சில வீடுகள் இடிக்கப்பட்டு கழிவறை மட்டுமே மிஞ்சியது. அதேபோல் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இப்போது நான்கு வழி சாலைகளால் போக்குவரத்து பெரிய அளவு பாதிப்பு இல்லாமல் பயணம் சுகமாக அமைந்திருக்கிறது.

இது போன்ற நலத்திட்டங்களில் நிலங்கள் குடியிருப்புகள் அரசு கையகப்படுத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் திட்டங்கள் வேண்டும் என்கிறோம் அதற்கான இடம் தர மாட்டோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்று சொல்லி இது போன்ற திட்டங்களுக்கான இடங்கள் கையகப்படுத்தும் போது அதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உண்மைத்தன்மை ஆராய்ந்த பிறகு எடுத்துக்கொள்ளப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. இப்போது கூட திமுக இதை சட்டரீதியாக சந்திப்போம் என்று சொல்லி இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கும் விமான நிலையத்துக்கு என்ன சம்பந்தம் என்பதும் கேள்விக்குறிதான். இந்தியாவில் அதிக விமான நிலையங்கள் இருப்பது உத்தரப் பிரதேசத்தில் தான். அங்கு பொருளாதார வளர்ச்சி விமான நிலையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பாக இருக்கிறதா ?? கேள்விக்குறிதான்.