தொடர்கள்
கவர் ஸ்டோரி
காணாமல் போன கைலாய பக்தர்கள் !! கண்ணீரில் சத்குரு !! ராம்

20260729095609296.jpg

சென்ற வருடம் ஏறக்குறைய இதே நாள். ஆகஸ்ட் மாதம். 25 அல்லது 26 ஆக இருக்கலாம்.

இதே ஆற்றின் இன்னொரு பகுதியில் நின்றிருந்தோம். நேபாள சீன எல்லை. கால் கடுக்க நிற்க வேண்டும்.

குடியுரிமையை தாண்டி சீனாவிலிருந்து நேபாள எல்லைக்கு வர போட்டோகாஷி அல்லது திரிசூலி ஆற்றின் குறுக்கே கட்டியிருக்கும் குடியுரிமை கட்டிடத்தை கடந்து தான் வர வேண்டும். கைலாய மலை யாத்திரை நேபாளம் வழியே செல்லும் அத்தனை பக்தர்களுக்கும் இது தான் வழி.

அதே கட்டிடம்.அதே ஆறு. ஒரு சில நிமிடங்களில் அத்தனையும் தவிடு பொடியாகி அடித்துக் கொண்டு சென்று விட்டது.

கடந்த புதன்கிழமை மதியம் கண்ணீருடன் வீடியோவில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவின் பேச்சை கேட்பவர்களுக்கு ஈரக்குலை நடுங்கியிருக்கும்.

9.05க்கு எங்களுக்கு எஸ் 3 குழுவிலிருந்து குடியுரிமை கட்டிடத்தை அடைந்து விட்டோம் என்று செய்தி வந்தது.

9.14 க்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பின்னர் யாரிடமிருந்தும் தகவல் இல்லை என்று கண்ணீருடன் சத்குரு பேசுகிறார்.

என்ன நடந்திருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

விஞ்ஞானம் விளக்க முடியாத துயரம். துக்கம். விதி. ஊழ்.

இதே கட்டிடத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் கடந்திருக்கிறோம். கடக்கப் போகிறோம். இருப்பினும் அந்த புதன் கிழமை அந்த நொடிகளில் ஏன் அங்கே இருக்க வேண்டும்.

இந்த வருடம் எங்கள் குழுவிற்கு கைலாயம் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இதே நேரம் இதே கட்டிடத்தில் ஒரு வேளை நின்றிருக்கக் கூடும்.

அந்த கட்டிடத்தில் என்ன நடந்திருக்கும். கைலாய மலை தரிசனத்திற்குப் பின் ஏராள மன திருப்தியுடன், அந்த கதைகளைப் பேசிக் கொண்டே பக்தர்கள், தங்கள் சொந்த பந்தங்களை மீண்டும் காணப் போகிறோம், கைலாய மலையிலிருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டு அனைவரிடமும் கொடுக்க பைகளில் வைத்திருக் கூடும்.

எப்படியாவது குடியுரிமையை துரிதமாக முடித்துக் கொண்டு காட்மாண்டு செல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருந்திருக்கக் கூடும்.

அல்லது பசியோடு எதாவது நேபாள எல்லையில் கிடைக்குமா என்று ஏங்கியிருக்கக் கூடும்.

ஒரு வேளை நேபாளத்திலிருந்து கைலாயம் செல்வதற்கும் பக்தர்கள் காத்திருக்கலாம்.

சோர்வாக இருந்திருக்கலாம், உற்சாகமாக இருந்திருக்கலாம், ஆனால் ஏகப்பட்ட அனுபவங்களோடு காத்திருந்திருக்கலாம்,.... எத்தனையோ லாம்....

எல்லாம் சில நொடிகள் தான்.

அந்த கோர வெள்ளம், அது நகரும் சுவர் போல, ஒரு சுனாமி போல பாறைகளையும் மரங்களையும் சேறு சகதிகளையும் ஒரு சேர அள்ளிக் கொண்டு, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்த அத்தனை பேரையும் வாரி சுருட்டிக் கொண்டு வெறித்தனமாக அடித்து வீழ்த்தி விட்டு சுவாசிக்க வழியில்லாமல், சிந்திக்க நொடியில்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் சூறையாடி விட்டுச் சென்றது.

ஈஷா குழுவில் 80 பேரை காணவில்லை, மலேசிய குழுவில் 26 பேரை காணவில்லை, இந்திய பக்தர்கள் நூற்றுக் கணக்கான பேரை காணவில்லை என்று பக்கெட் வாளியில் எறும்புக் கூட்டதை கலைத்துப் போடுவது போல், அந்த மலையிலிருந்து வீழ்ந்த வெள்ள அரக்கன், அசுர வேகத்தில் அந்தப் பள்ளத்தாக்கில் பயணித்து, மனிதர்களை வாரி சுருட்டி இறைத்துப் கொன்று போட்டு விட்டு சென்றது.

(இணையத்திலிருந்து ஒரு வீடியோ தொகுப்பு.)

எத்தனை பக்தி. எத்தனை தியாகங்கள். எத்தனை கனவுகள். எத்தனை பிரார்த்தனைகள். எத்தனை சிரத்தை.

விஞ்ஞானத்தால் எப்படி இந்த வெள்ளம் வந்தது, கிளேசியர் ஏரி உடைந்தது GLOF என்று விளக்கலாம்.

இத்தனை அப்பாவி மனிதர்கள் என்ன செய்தார்கள். முன்வினையா ?? பாவமா ? புண்ணியமா ??

கைலாய அடிவாரத்தில் காணாமல் போனதால் மோட்சமா ?? எப்படி விளக்குவது அந்த சொந்த பந்தங்களுக்கு ??/

கிளைமேட் சேஞ்ச், பூமி வெப்பமயமானது என்று ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். அந்த சீன குடியுரிமை அதிகாரிகள் என்ன பாவம் செய்தனர்.

ஆற்றின் குறுக்கே இப்படி ஆக்கிரமித்து கட்டிடங்களால் நிரப்பியது யார் குற்றம். யார் அனுமதி அளித்தது ??

மனம் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது.

எப்படி நிகழ்ந்தது இந்த கோர சம்பவம் என்று நிறைய தெரிந்து கொண்டிருப்போம்.

சில நொடிகள் தான். சில நிமிடங்கள் தான். எல்லாம் அடங்கிப் போய் சேறு சகதிகளாக மனிதர்கள் மறைந்து போனார்கள். மறந்தும் போவார்கள். இது தான் உலகம்.

இதே ஆற்றின் குறுக்கே.....

மீண்டும் கட்டிடம் கட்டப்படும்.

மீண்டும் பக்தர்கள் கடப்பார்கள்.

அடுத்த பேரழிவு வரும் வரை எல்லாவற்றையும் மறந்து போய் விடுவோம்.

20260729101930125.jpeg

பேரழிவு

20260729101957127.jpg

சுரங்கப் பாதையில் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட பணியாளர்கள்.

20260729102038222.jpeg

காணாமல் போன குடியுரிமை கட்டிடம். அந்த வெள்ள அரக்கன் வாரி சுருட்டிக் கொண்ட அந்தக் கணம்.

20260729102206150.jpg

சில விநாடிகள் தான். எறும்புகளைப் போல மனிதர்களை வாரி விழுங்கிய வெள்ளம். தூரத்திலிருந்து.....

20260729102622633.jpeg