தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்த கதை...

20210523075310160.jpeg

தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அதுபற்றி கூட பா சிதம்பரம் ஐந்து வர தொடரை ஜூனியர் விகடனில் எழுதினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்க, தெரிந்தோ.. தெரியாமலோ நானும் அதற்கு ஒரு காரணமாக இருந்தேன். காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் நன்கு பழக்கம் என்பதால், காங்கிரஸ் பற்றிய செய்திகள் எனக்கு உடனுக்குடன் தெரியும். அவர்களும் என்னுடன் பேசுவார்கள், நானும் அவர்களுடன் பேசுவேன்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தமிழக சட்டசபையில், காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி. ராஜீவ் காந்தி படுகொலைக்கு திமுகவும் ஒரு காரணம் என்று அப்போது பிரச்சாரம் செய்யப்பட்டதால், திமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி, மற்றொருவர் பரிதி இளம்வழுதி. திமுக தலைவர் கருணாநிதி, பதவியை ராஜினாமா செய்து விட்டார். பரிதி இளம்வழுதி மட்டுமே திமுக உறுப்பினராக இருந்தார்.

அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி போட்டு, பெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். ஆரம்பத்தில் அதிமுக - காங்கிரஸ் உறவு சுமுகமாக தான் இருந்தது. ஆனால், அந்த சுமூகம் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் ஜெயலலிதா தான். சட்டசபையில் ஒருமுறை பேசும்போது, அதிமுகவின் வெற்றிக்கு காரணம் ராஜீவ் காந்தி படுகொலை அல்ல... ராஜீவ் காந்தியின் ரத்தத்தில் பெற்ற அனுதாப வெற்றி இது இல்லை. அதிமுகவின் செல்வாக்கு, என் செல்வாக்கில் தான் நாங்கள் ஆட்சியைப் பிடித்தோம் என்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், இதை கடுமையாக ஆட்சேபித்தார். ராஜீவ் காந்தி அனுதாப அலையில்தான் அதிமுக வெற்றி பெற்றது, ஆட்சியமைத்தது என்றார். எஸ்.ஆர்.பி-யின் இந்த பேச்சுக்கு சட்டசபையில், அப்போது அதிமுகவினர் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் எஸ்ஆர்பி உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து... அதிமுகவை, தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. ஊழல் புகார்களை எடுத்து வைத்தது. ஆனால், பிரதமர் நரசிம்ம ராவ் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. சட்டசபையில் ஒரு நாள் முழுக்க, சட்டசபையை விட்டு வெளியே போகாமல் ஒரு முறை காங்கிரஸ் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது, அப்போது நானும் அங்கு இருந்தேன். இரவு நேரத்தில் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், சட்டசபையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கோபமான சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்ஆர்பி, அன்றைய காவல்துறை கமிஷனர் ராஜகோபாலை தொடர்புகொண்டு, தொலைபேசியில் இன்னும் பத்து நிமிடத்தில் மின்சார இணைப்பு வரவில்லை என்றால் நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் உங்களைப் பற்றி புகார் சொல்ல நேரிடும் என்று மிரட்டும் தொனியில் பேச... அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மின்சார இணைப்பு வந்தது

இதைத் தொடர்ந்து... சபாநாயகர் மீது காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அதை துணை சபாநாயகர் நிராகரித்தார். தேர்தல் நெருங்க.. நெருங்க மூப்பனார், நரசிம்மராவிடம் தமிழ்நாட்டில் நாம் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று சொன்னார். முதலில் நரசிம்ம ராவ் பிடி கொடுத்து பேசவில்லை. தொடர்ந்து மூப்பனார் வலியுறுத்த, ஒரு கட்டத்தில் நரசிம்ம ராவ் அதற்கு சம்மதித்தார். இந்தச் செய்தி காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜனுக்கு எட்ட, அவர் இதை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்ல... அதைத் தொடர்ந்து... ஸ்டாலினும், எஸ்ஆர்பி-யும் முதலில் கூட்டணி பற்றி பேசினார்கள். அதன் பிறகு, முரசொலி மாறனிடம் பேச ஏற்பாடு செய்தார் கராத்தே தியாகராஜன். அவரிடமும் எஸ்ஆர்பி பேசினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்... நிருபர்கள் திமுக தலைவர் கருணாநிதியிடம் திமுக - காங்கிரஸ் கூட்டணி வருமா என்று கேட்டபோது... பேசினால் பேசுவோம் என்று சூசகமாக பதில் சொன்னார்.

கிட்டத்தட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி முடிவாகிவிட்டது என்ற நிலையில் ஒரு நாள் நான் எதேச்சையாக அமைச்சர் முத்துசாமியிடம் பேசியபோது... அவர், அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா, நரசிம்ம ராவிடம் பேசிவிட்டார், மற்ற விஷயங்களை பேச நானும் அமைச்சர் எஸ் டி சோமசுந்தரமும் தனி விமானத்தில் இன்னும் அரை மணி நேரத்தில் டெல்லிக்குப் புறப்பட இருக்கிறோம் என்று சொன்னார்.

அமைச்சர் முத்துசாமி பேசிய அரை மணி நேரம் கழித்து, எஸ்ஆர்பி என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது என்று சொன்னபோது... நான் அமைச்சர் முத்துசாமி டெல்லி பயணம், அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி போன்ற செய்தியை சொன்ன போது... அவர் டென்ஷனாகி, என்ன.. என்னை ஏன் இப்படி குழப்புகிறீர்கள். உங்கள் செய்தி தவறு என்றார். அப்போது நான் அவரிடம், முத்துசாமி தான் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார் என்று சொன்னேன். அவர் அப்போது... இது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகத்துடன், இன்னும் அரை மணி நேரம் கழித்து நான் உங்களுடன் பேசுகிறேன் என்று சொன்னார். அரை மணி நேரம் முடிந்த நிலையில், என்னிடம் தலைவர் மூப்பனார் பேசினார். என்ன தேவையில்லாமல் குழப்புகிறார்கள்... பிரதமரே என்னிடம், திமுகவுடன் பேசுங்கள் என்று சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றார். அவரிடமும் நான் அமைச்சர் முத்துசாமி சொன்னதை அப்படியே சொன்னேன். அவரும் யோசிக்க ஆரம்பித்தவர்... பத்து நிமிடத்தில் நான் உங்களுடன் பேசுகிறேன்... எங்கேயும் போய் விடாதீர்கள், அங்கேயே இருங்கள் என்றார். 10 நிமிடம் கழித்து தலைவர் மூப்பனார் என்னிடம் பேசினார். நீங்கள் சொல்லும் தகவல் தவறு, பிரதமர் அலுவலகத்தில் நானே தொடர்பு கொண்டு விசாரித்தேன். அப்படி யாரும் வருவதாக செய்தி இல்லை. பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் அப்படி எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள் என்றார். அப்போதும்... அய்யா நான் சொன்ன தகவல் உண்மை. என்னிடம் அமைச்சர் முத்துசாமி, தவறான தகவல்களை எப்போதும் சொல்ல மாட்டார் என்று உறுதிபட சொன்னேன். அப்போதும் தலைவர் மூப்பனார் ஒரே குழப்பமாக இருக்கிறது. இருங்கள்... நான் இன்னும் அரை மணிகழித்து உங்களிடம் பேசுகிறேன் என்றார். ஆனால் 15 நிமிடத்திலேயே என்னிடம் தலைவர் மூப்பனார் பேசினார். நீங்கள் சொன்ன தகவல் தான் உண்மை. பிரதமர் என்னை முட்டாளாக்கி விட்டார் என்று கோபமாக சொன்னார்.

அதைத் தொடர்ந்து... தனிக்கட்சி ஆரம்பிப்பது என்று டெல்லியிலேயே முடிவு செய்துவிட்டு தான், மூப்பனார் சென்னை திரும்பினார். விமான நிலையத்திலேயே, 10 ஆயிரத்துக்கு அதிகமான தொண்டர்கள் அவரை வரவேற்றார்கள். நரசிம்மராவை எதிர்த்து கோஷம் போட்டார்கள்.
லஸ் அவென்யூ வீட்டுக்கு மூப்பனார் போனபோது, நானும் அங்கு போனேன். என்னை பார்த்ததும்... இறுக்க அணைத்துக் கொண்டு, நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் ஏமாந்து இருப்பேன். பிரதமர் அலுவலகத்திற்கு எனக்கு எதுவும் சொல்லக்கூடாது என்று பிரதமர் உத்தரவிட்டதால், அவர்கள் சொல்லவில்லை. அதன் பிறகு வேறு ஒருவரை பேசச் சொல்லி, அவர் மூலம் நீங்கள் சொன்னதுதான் உண்மை என்று நான் தெரிந்து கொண்டேன். ரொம்ப தேங்க்ஸ் என்று என்னை இன்னும் இருக்கு அணைத்துக்கொண்டார். இருக்கட்டும் அய்யா... நான் எதேச்சையாக அமைச்சர் முத்துசாமியிடம் பேசினேன், அதனால் எனக்கு தெரிந்தது என்றேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கியதும், மிகப்பெரிய எழுச்சி தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. ரஜனி, முப்பனாருக்கு ஆதரவாக இருந்தார். அப்போது மூப்பனாரிடம், நீங்கள் தனியாக போட்டியிடுங்கள்... நான் தமிழ்நாடு முழுவதும், உங்களுக்கு பிரச்சாரம் செய்கிறேன் என்றார். ஆனால், மூப்பனார் கொஞ்சம் தயங்கினார். இதை கருணாநிதி சரியாக பயன்படுத்திக்கொண்டு, முப்பனாரை அழைத்து கூட்டணியில் இணைத்து இருபது பாராளுமன்ற தொகுதிகளும், 40 சட்டமன்ற தொகுதிகள் என்று வாரி வழங்கி, அவரை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டார். அந்தத் தேர்தலில்.. ஜெயலலிதா இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். அதிமுக படுதோல்வி அடைந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் பாராளுமன்றத்தில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. போட்டியிட்ட 40 சட்டமன்ற தொகுதிகளில் 39 தொகுதிகளில், தமிழ் மாநில காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.