தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 21 - கலைமாமணி பாரதி திருமகன்

20210521131353210.jpg

என் தந்தையைப் பொறுத்தவரை – எல்லோருக்கும் செல்லப் பிள்ளை… எந்த வண்ணத்தையும், எந்த அடையாளத்தையும் சாராத தனிமனித வாழ்க்கை..!

எந்த வண்ணத்தையும் சாராதவராக இருப்பதால்தான், யாருடைய வெறுப்பையும் சம்பாதிக்காமல் – எல்லோருக்கும் பிடித்தவராக இருக்கிறார்! இந்த அஸ்திவாரம் எல்லாம் – ஒரு நல்ல சொற்கட்டிடம் எழுப்பத்தான்..!

கலைவாணர் என்.எஸ்.கே. கம்பெனியில் பக்தியான பகுத்தறிவாளர், 2 எழுத்து கட்சிக்காரர், 3 எழுத்து கொள்கைக்காரர், 4 எழுத்து இயக்கத்தினர் – எல்லோரும் வந்து செல்வர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு பெரியார், கலைவாணர், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, சத்தியமூர்த்தி, கலைஞர் கருணாநிதி, கல்கி, எம்.எஸ்.சுப்புலட்சுமி - சதாசிவம், உடுமலை நாராயணக்கவி… இவர்களுடன் கவிஞர் சுப்பு ஆறுமுகம்..!

எப்படிப்பட்ட அனுபவமிக்க சங்கமம்… பாருங்கள்..! எல்லோருக்கும் என் தந்தையை ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அனைவருக்கும் ஆத்மா புறப்பட்ட இடம் – ஒன்றுதானே..!

‘காதல் ஜோதி’ என்ற படத்துக்கு பேரறிஞர் அண்ணா பாடல் எழுதியிருந்தார். அது –

‘உம்மேல கொண்ட ஆசை
உத்தமியே – எந்தனுக்கு
சத்தியமா சொல்லுறேன்டி…
தங்க ரத்தினமே..!
தாளமுடியாது கண்ணே…
பொண்ணு ரத்தினமே..!’

– பேரறிஞர் அண்ணாவின் பல்லவி. பின்னர் ஏதோவொரு காரணத்துக்காக அண்ணாவால் பாடலை எழுத முடியவில்லை!
அப்போது ‘மீதி பாடலை கவிஞர் சுப்பு ஆறுமுகம் தொடரட்டுமே..?!’ என படத் தயாரிப்பாளர், இயக்குநரின் யோசனையாக இருந்தது.
நல்ல யோசனையை எதிர்க்க… எப்பவுமே 4 பேர் தயாராக இருப்பார்களே, அதுபோன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவர்களது பெயர் தெரியவில்லை!

‘அண்ணா – பல்லவி… கவிஞர் சுப்பு ஆறுமுகம் – அனுபல்லவியா..?’ – இதுதான் அனைவரின் ‘பாலைவன’ மனக்கேள்வி..!
அவர்களுக்குப் பதிலாக, என் தந்தை போட்டாரே ஒரு ‘போடு’ – ‘‘கவிஞர்கள் அனைவருக்குமே பேரறிஞர் அண்ணாதான் ‘பல்லவி’யே..!’’ – இப்பதிலை கேட்டு எதிரணியினர் அமைதியாகவிட்டனர்.
இதையடுத்து அப்பாடலை என் தந்தை இப்படி தொடருகிறார் –

‘சித்திரைக்கு பக்கத்திலே
சேர்ந்திருக்கிற வைகாசி போலே…
முத்தழகி நீயும் நானும்
தங்க ரத்தினமே! – மூணு முடிச்சு
போட்டு சேர்ந்துக்குவோம்…
பொன்னு ரத்தினமே..!’

‘ஆஹா!’ என பாராட்டினர் பலர், என் தந்தையை..! என்னவொரு அழகான உவமானம், காதல் மணமக்களுக்கு..! ‘சித்திரைக்குப் பக்கத்துல சேர்ந்திருக்கிற வைகாசி…’

– ஆஹா… ஆஹா..! யார் நினைத்தாலும் பிரிக்க முடியாதே – பக்தியாளராகட்டும், பகுத்தறிவாளராகட்டும்..! சித்திரைக்குப் பக்கத்திலே வைகாசிதான்… பாராட்டு முடிந்தது..!

இதையடுத்து மீண்டும் எதிரணியினரின் கேள்விக்கணைகள் – ‘‘அதென்ன… பேரறிஞர் அண்ணாவின் பாட்டை கவிஞர் சுப்பு ஆறுமுகம் எழுதும்போது, சாஸ்திரப்படி 3 முடிச்சு, அது இதுன்னு… கலரை மாத்திட்டாரே..!’’

இதற்கு என் தந்தையின் வழக்கம்போல் சூடான பதில் – ‘‘எங்களுக்கு அது சாஸ்திரப்படி போடும் 3 முடிச்சாக இருக்கட்டும்… நீங்க வேணும்னா, அந்த 3 முடிச்சை – அண்ணா நமக்குத் தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற 3 முடிச்சாக போட்டுக்குங்க… புதுமணத் தம்பதிகளுக்கு இந்த 3 முடிச்சும் தேவைதானே..?’’

இதைக் கேட்டதும் எதிரணி கப்சிப்..! (இப்படியெல்லாம் அர்த்தமுள்ள – நல்ல கருத்துள்ள பாடல்களுக்கே எதிர்ப்புகள் கிளம்பிய காலம்… அந்தக் காலம்..!)

– இப்படி எழுதிய என் தந்தை, கடைசியில் ‘‘படத்தில் பெயர் போடும்போது, ‘பாடல் – பேரறிஞர் அண்ணா, கவிஞர் சுப்பு ஆறுமுகம்’ என்றிருந்தால், நமக்கு – எனக்கு எப்போதுமே பெருமை..!’’ என்று கூறியிருக்கிறார். ‘காதல் ஜோதி’ படத்தில் அப்பாடலை பாடியது – வெண்கல குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அண்ணா!

20210521131424105.jpg

கடந்த 1964-ம் ஆண்டு என் தந்தைக்கு காஞ்சி மகா பெரியவரின் ஆசீர்வாதம் கிடைத்தது. அப்போது மகா பெரியவரிடம் என் தந்தை சொன்னாராம் – ‘‘காஞ்சி பெரியவாளுக்கு நமஸ்காரம்… என்னை யாரோ ‘தமிழ் போல் வாழ்க’னு வாழ்த்திட்டாங்க போலிருக்கு..!

முதல்ல, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணாவுடன் தொடர்பு… இப்போ – காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவாளின் தொடர்பு..! இதோடு, என்னை இறைவன் அழைச்சுக்கணும்… 12 எழுத்துக்கும் அலைக்கப்படாது..!’’ என்று.

இதைக் கேட்டதும் மகா பெரியவா புன்னகைத்து, ‘‘குழந்தே சுப்பு எவ்ளோ பெரிய உண்மையை சொல்றான், பார்த்தீங்களா..? அதான், அவன் நாக்குல சரஸ்வதி குடிகொண்டிருக்கா..!’’

– இது போதாதா எங்களுக்கு… இதேபோல், இன்னும் பல சுவையான சம்பவங்களுக்கு…

– காத்திருப்போம்