தொடர்கள்
கதை
நீள் தூரம் - சத்யபாமா ஒப்பிலி

20240403165329807.jpeg

பத்து நாள் லீவில் மதுரைக்கு வந்த போது அப்பாடி என்று இருந்தது. ரயிலிலிருந்து இறங்கி அதி காலையில் வீடு வந்து சேரும்போது மணி 4.30. நான் வளர்ந்த வீடு. ஒரு காபியை சாப்பிட்டுவிட்டு, ஹாலில் கண்ணை மூடி படுக்கும் போது தான் தோன்றியது, எங்கு சென்றாலும் இது கொடுக்கும் அமைதி தனி என்று. இந்த விடுமுறையை நிறைய எழுதுதவும் படிக்கவும் செலவிட வேண்டுமென்று முடிவுடன் தான் வந்தேன். சற்று விடிந்ததும், புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன். நான் எப்பொழுதும் அமர்ந்து படிக்கும் திண்ணை. வாசலில் ரோடு போடுவதற்குண்டான அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரோடு போடாமல் விட்டிருந்தார்கள். ஒரே சரளைக் கற்கள். காலையில் ஆட்டோவில் வந்து இறங்கும்போது நானே ஐம்பது ருபாய் அதிகம் குடுத்தேன். செருப்பில்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. தேர்தல் சமயமே ஆனாலும், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை.

"ஒட்டு போடமாட்டோம்ன்னு சொல்லவேண்டியது தானே" என்று அம்மாவிடம் தர்கம் செய்து கொண்டே வாசலைப் பார்த்தேன். ஐந்து சிறிய நாய் குட்டிகள், ரோட்டின் மறுப்பக்கம். அத்தனையும் இளம் காபி கலர்.

"இதென்னமா அஞ்சு குட்டி இருக்கு என்று கேட்டுக்கொண்டே, வாசல் கதவைத் திறந்தேன். அச்சில் வார்த்தது போல் ஒரே மாதிரி ஐந்தும். தாய் நாய் கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டிருந்தது. தள்ளி இருந்தே வேடிக்கை பார்த்து விட்டு உள்ளே வந்து விட்டேன். எனக்கு நாய்கள் மீது பெரும் ஈடுபாடெலெல்லாம் இருந்ததில்லை எங்கள் வீட்டில் ஒன்று வரும் வரை. அவள் வந்த பிறகு தான் மற்ற நாய்களை கவனிக்கவே ஆரம்பித்தேன். குட்டிக ளைப் பார்த்தால் மனம் இளகித்தான் போகும். பெரிய பெரிய சரளைக் கற்களை நிரப்பிய ரோடு. அதன் மேலே தான் கார்களும், பைக்குகளும், ஆட்டோக்களும் போய்க் கொண்டிருந்தன. இந்த ஐந்து குட்டிகளும் ரோட்டை அங்கும் இங்கும் கடக்கும் போது மனம் பட படக்கும். காலையில் எழுந்ததுமே முதலில் போய் அவைகளைப் பார்ப்பேன். ஐந்தும் தெரிந்துவிட்டால் ஏதோ ஒரு நிம்மதி இருக்கும். ஒரு நாலு நாட்களில் நெருங்கி வராவிட்டாலும் கூப்பிட்டால் தயங்கி தயங்கியாவது ஓடி வந்து கொண்டிருந்தன. ஒரு நாள் காலையில் பார்க்கும் போது ஒன்று தான் இருந்தது. ஒன்றே ஒன்று பார்த்தவுடன் மனம் ஏதோ போல் ஆகிவிட்டது. கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன். அதைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை அதுவும் பிஸ்கட்டுக்கும் ஓடி வராமல் சுருண்டு படுத்துக்கொண்டது.

" நாலக் காணுமே. எங்க போய் இருக்கும் மா?" என்று அம்மாவிடம் கேட்ட போது,

"இங்க பாரு, ஒரு பிரேக்குக்கு தான் இங்க வந்திருக்க. நிம்மதியா இருக்கறத விட்டுட்டு அந்த குட்டிகளை இப்போ தலையில சுமந்துக்கிட்டு இருக்க! என்ன பிரயோஜனம். பேசாம அமைதியா இரு."

சரி என்று தான் தோன்றியது. எப்படியும் என்னால் எதுவும் செய்ய முடியப் போவதில்லை.

எதுவும் யோசிக்கக் கூடாதென்று TV சேனலை மேய்ந்தேன் . எல்லா படமும் ஏதோ ஒரு போராட்டம் பற்றித் தான் இருக்கிறது. உள்ளுக்குள் போராட்டம் இல்லை வெளியில். நாய் குட்டிகளின் நினைவு வந்தது. ஏன் இப்படி அவை பற்றியே யோசிக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன். கவலைப் படுவதற்கு வேறு ஒன்றும் இல்லை அன்பு, இரக்கம் மனித நேயம் எல்லாவற்றையும் பகிர்வதற்கே நமக்கு அவகாசம் வேண்டியிருக்கிறது. மறுபடியும் வெளியில் வந்து பார்த்தேன். கற்களோடு கற்களாக ஒரு மூன்று குட்டிகள் தூங்கிக் கொண்டு இருந்தன. மற்ற இரண்டும் ஒன்றன் மேல் ஒன்று விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. வெயிலான வெயில். அயர்ந்து தூங்கும் அந்த குட்டிகளைப் பார்க்க அதிசயமாக இருந்தது.

" அம்மா அஞ்சும் இருக்கு!" மகிழ்ச்சியாக வெளியே இருந்தே குரல் குடுத்தேன்.

" ஓ இருக்கா!" அம்மாவின் குரலிலும் ஒரு நிம்மதி இருந்தது போல தோன்றியது.

இரவு சாப்பாடு குடுக்கும் போது, ஒன்று கொஞ்சம் நெருங்கி வந்து என் காலை முகர்ந்தது. மற்றவை எட்டியே நின்று நான் நெருங்கினால் ஓடுவதற்கு தயாராகவே இருந்தன.

20240403164625473.jpeg

நான் தங்கிய பத்து நாட்களில் ஒரு நாள் கூட என்னைப் பார்த்ததும் வாலாட்டி வந்ததில்லை . கையில் சாப்பாடு வைத்து கூப்பிட்டால் ஓடிவரும். காரின் அடியிலேயோ, ஏதாவது வீட்டு திண்ணையிலேயோ சுருண்டு போய் படுத்திருக்கும். மனிதரைக் கண்டால் பயம். எல்லாம் சமாளித்து தானாக வளரும் தெரு நாய்கள்.

அன்று இரவு படுக்கும் போது எனக்கு கடல் ஆமை குஞ்சுகள் ஞாபகம் வந்தது. கடல் ஆமை முட்டைகளை எடுத்து, பாதுகாத்து, குஞ்சு பொரிந்தவுடன் கூடை கூடையாய் கடலில் விடுவார்கள். கடல் அருகே போகாமல் சற்று தொலைவிலிருந்தே விடப்படும். நூற்றுக்கணக்கில், குட்டி குட்டியாய், அங்கேயும் இங்கேயும் அலைபாய்ந்து கொண்டே நடக்கும். திசை தெரியாது. தன்னந்தனியாகத் தான் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்.எத்தனை கடல் போய் சேர்ந்து உயிர் வாழுமோ!

காலையில் ஊருக்கு கிளம்ப வேண்டும். போன பிறகு ஓரிரு நாள் இவை நினைவில் நிற்கும். பிறகு எல்லாம் மறந்து போய் அன்றாடத்தை தினம் தினம் கடந்து கொண்டிருப்பேன் - சில சமயம் நாய் குட்டியாகவும், சிலசமயம் கடல் ஆமையாகவும்.